ஃபர்ஸாம் அர்பாப் — 1941 – 20208 அக்டோபர் 2021


பஹாய் உலகமையம் – உலக நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான திரு ஃபர்ஸாம் அர்பாப், 25 செப்டம்பர் 2020’இல் ஐக்கிய அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் காலமானார். அவருக்கு 78 வயது.

திரு ஃபர்ஸாம் அர்பாப்

உலக நீதிமன்றம் பின்வரும் செய்தியை எல்லா தேசிய ஆன்மீக சபைகளுக்கும் அனுப்பியுள்ளது.

*  *  *

சோகவயப்பட்ட இதயங்களுடன் எங்கள் முன்னாள் சகா, எங்கள் அன்புக்குரிய சகோதரர் ஃபர்ஸாம் அர்பாப் திடீரென காலமான துக்கத்தில் நாங்கள் ஆழ்ந்துள்ளோம். இந்த செய்தி எங்களுக்குப் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூர்மையான சிந்தனை, அன்பான இதயம், துடிப்புமிகு ஆவி ஆகியவை பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டை நோக்கி எப்போதுமே திரும்பியிருந்தும், முழு மக்கள் தொகையினரிடையே கல்விச் செயல்முறையின் மூலம், ஆன்மீக மற்றும் அறிவுசார் திறனை வளர்க்க முடியும் என்பது குறித்து அதிலிருந்து நுண்ணறிவுகள் பெறவும் முற்பட்டிருந்தன. இரான் நாட்டில் பிறந்த இவர், ஐக்கிய அமெரிக்காவில் பயின்று, கொலம்பியா நாட்டில் ஒரு முன்னோடியாக இருந்தார். அவருக்கு இருந்த சிறந்த ஆற்றல்கள், பௌதீக அறிவியலில் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கைக்கு அவருக்கு பொருத்தமானவையாக இருந்தபோதும், இறைவன் திருவிருப்பம் வேறு விதமாக இருந்தது. மாறாக, அவரது கடுமையான அறிவியல் பயிற்சி, சமயத்தின் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆன்மீக மற்றும் சமூக தன்மைமாற்றம், மனிதகுலம் சமயத்திற்குள் பிரவேசித்தல் இரண்டையும் எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றிய பஹாய் திருவாக்குகளில் உள்ள உண்மைகள் தொடர்ச்சியான முயற்சியின் மூலமே அவற்றை அடைய முடியும் எனக் கோருகின்றன என்பதை அவர் உணர்ந்தார்; இம்மாமுனைவில் அவரது முழு வாழ்க்கையின் அர்ப்பணம் முழுமையானது மற்றும் நிலையானது. கொலம்பியாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினராகவும், ஒரு கண்ட ஆலோசகராகவும், அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினராகவும், இறுதியாக இரண்டு தசாப்தங்களாக உலக நீதிமன்ற உறுப்பினராகவும் இருந்த அவரது காலம் முழுவதும், கடவுளின் குழந்தைகள் அனைவரின் திறனாற்றலில், குறிப்பாக இளைஞர்களின் திறனாற்றலில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அவரது சமய சேவையின் முக்கிய அடையாளமாக இருந்தது.  எப்போதும் நுண்ணறிவுடனும், எப்போதும் விவேகமாகவும், எப்போதும் ஆன்மீக மெய்ம்மையுடன் இணைந்திருக்கும், அசாதாரன பார்வை கொண்ட இந்த மனிதர், அறிவியல் உண்மைக்கும் உண்மையான சமயத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தார்.  

அவரது அருமை மனைவி ஸோனா, அன்பார்ந்த மகன் போல் (Paul), மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கும், எதிர்பாரா இந்த இழப்புக்காக நாங்கள் எங்களின் உளமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கடவுளின் நித்திய இராஜ்யங்களுக்குள் தனது பயணத்தை ஆரம்பிக்கும் இந்த ஒளிபெற்ற ஆன்மாவின் மேம்பாட்டிற்காக நாங்கள் புனித நினைவாலயங்களில் பிரார்த்திப்போம். அவ்வான்மா அதன் தெய்வீக இல்லத்திற்குள் அன்புடன் வரவேற்கப்படுமாக. இந்த மிகுந்த அன்புக்கினிய புகழ்வாய்ந்த ஆன்மாவின் மறைவைக் குறிக்க, சூழ்நிலைகள் அனுமதிக்கும் வகையில் அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள், வழிபாட்டு இல்லங்கள் உட்பட, எல்லா பஹாய் சமூகங்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1453/