BIC நியூ யார்க்: பவளப்பாறை மறுமீட்பு பற்றிய ஒரு குறும்படம் COP27-இல் திரையிடப்பட்டது


BIC நியூயார்க், 18 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) தயாரித்த ஒரு குறும்படம், தனிநபர்கள், சமூகம் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுகள் வானுவாத்து, தன்னா கடற்கரையில் உள்ள ஒரு பவளப்பாறை (coral reef) சுற்றுச்சூழல் அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து பாதுகாக்க இளைஞர்கள் தலைமையிலான சமூக நடவடிக்கை முயற்சிக்கு எவ்வாறு வழி வகுத்தது என்பதை ஆராய்கிறது..

அந்த 13 நிமிடத் திரைப்படம், “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயல்பாடு குறித்த ஒரு ஆய்வு” என்ற தலைப்பில், பருவநிலை மாற்றம் குறித்த சொற்பொழிவுக்கான BIC பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இது COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் நேற்று திரையிடப்பட்டது. திரையிடலில் கலந்து கொண்டவர்களில் வானுவாத்துவைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளும் இருந்தனர்.

BIC குறும்படம் “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயலில் ஒரு ஆய்வு” பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களால் உத்வேகம் பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியை ஆராய்கிறது.

பஹாய் சமூகத்தின் உறுப்பினரும், வானுவாத்து பருவநிலை நடவடிக்கை வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வில்லி மிசாக், திரையிடலின் போது தமது கருத்துக்களில், “பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் பங்கேற்ற இளைஞர்களின் முயற்சியில் இருந்து பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டம் உருவானது.

BIC-யின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர் மேலும் கூறுகையில், இந்தக் கல்வித் திட்டங்கள் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மனிதகுல ஒருமைப்பாடு போன்ற ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை ஆராய உதவுகின்றன.

“இந்தத் திரைப்படம், சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் வகையில் அவர்கள் இணைந்து செயல்படும் போது பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் எவ்வாறு தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு” என அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களாக, BIC-யின் பிரதிநிதிகள் COP27-இல் முறையான மற்றும் முறைசாரா அமைப்புகளில் பல விவாதங்களில் பங்கேற்று, சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியமான அவசரத் தேவையை எடுத்துரைத்தனர்.

COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் அந்த BIC குறும்படம் நேற்று திரையிடப்பட்டது. ரால்ப் ரெகன்வானு (மேல் வலது புகைப்படம்: இடது), வனுவாட்டுவின் காலநிலை மாற்றத் தழுவல் அமைச்சர், திரையிடலின் தொடக்கத்தில் கலந்து கொண்டார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1626/

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: மேற்குக் கரைவிளிம்பின் (berm) அடித்தல படுகை நிறைவை அணுகிக்கொண்டிருக்கின்றது


15 நவம்பர் 2022

பஹாய் உலக மையம் – ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்கின்றன, மேற்குப் பகுதியின் கான்கிரீட் அடித்தள அடுக்கு ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. முடிந்ததும், பேர்ம்கள் (கரைவிளிம்புகள்) குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியுடன் இணைக்கப்படும், இது ‘அப்துல்-பஹாவின் புனித பூதவுடல் நிரந்தரமாக வைக்கப்படும் மத்திய கட்டிடத்தில் பரந்திருக்கும்.

நினைவாலய தளத்தின் முன்னேற்றம் பின்வரும் படங்களில் இடம்பெற்றுள்ளது.

பெர்ம்களைத் தயாரிப்பதில், விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன் (EPS) தொகுதிகள் முதலில் ஒன்றுகூட்டப்பட்டு, சரிவின் வடிவத்தை உருவாக்க அடுக்கி வைக்கப்படுகின்றன. அடுத்து, மென்மையான மற்றும் தொடர்ச்சியான மேற்பரப்பை உருவாக்க, ஒரு சிறப்பு சரளை பம்பைப் (pump) பயன்படுத்தி, கட்டமைப்பிற்குள் சரளை ஊற்றப்படுகிறது. பின்னர், சரளையிலிருந்து கான்கிரீட்டை பிரிக்கும் ஓர் உரை (liner) போடப்படுகிறது. கான்கிரீட்டை வலுப்படுத்த உரையின் மேல் ரீபார் (இரும்புக் கம்பி) வலைப்பின்னல் வைக்கப்படுகிறது. கான்கிரீட் இறுதியாக மேலே ஊற்றப்படுகிறது. சிறிய சேவை வாகனங்கள் பெர்மில் சேதமடையாமல் பாதுகாப்பாக ஓட்டப்படுவதற்குக் கான்கிரீட் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. முடிந்ததும், பெர்ம் மண்ணினால் மூடப்பட்டிருக்கும், பின்னர் புல், புதர்கள் மற்றும் பிற செடிகளல் நிலப்பரப்பு செய்யப்படும்.
நினைவாலயத்திற்கான கருத்துரு வடிவத்தின் படம். இது மேற்கு பேர்மை எடுத்துக்காட்டுகின்றது.
EPS கட்டமைப்பு அதன் இடத்திற்கு ஓங்கியைப் பயன்படுத்தி கீழிறக்கப்படுகின்றது. இது பேர்மின் ஆரம்ப வடிவத்தை வழங்குகிறது.
கட்டமைப்பிற்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது
EPS கட்டமைப்பிற்குள் ஊழியர்கள் சரளையை கொட்டுகின்றனர். கான்கிரீட் ஊற்றப்படுவதற்குச் சரிவைச் சமப்படுத்துகின்றனர்.
மேற்கு பேர்ம் அடித்தலம் உறைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூடப்படுகின்றது
மேற்கு பெர்மின் மடிப்புச் சுவர் பிளாசா மட்டத்தில் தண்ணீர் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த கூடுதல் நீர்ப்புக் காப்பைப் பெறுகிறது.
பேர்மின் சரிவுக்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது
சூரியன் அடிவானத்தில் அஸ்தமிக்கும் போது மேற்குப் பகுதியின் காட்சி. வளைகுடாவின் குறுக்கே இடதுபுறம் தூரத்தில் ஹைஃபா நகரைக் காணலாம்.
கூடுதல் கான்கிரீட்டை–சுவர்களை மூடுவதற்கு பதிலாக ஸ்ப்ரே செய்யப்பட்ட கான்கிரீட்– வலுப்படுத்த கிழக்கு பெர்மில் உள்ள சுவரில் இரும்புக்கம்பிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட பின்னல்தட்டிக்கான கட்டமைப்பு தளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரெல்லிஸுக்குத் தேவைப்படும் துல்லியமான பரிமாணங்களுக்கு EPS தொகுதிகள் வெட்டப்படுகின்றன. தொகுதிகள் பின்னர் கண்ணாடியிழை மூலம் வலுவூட்டப்பட்டு, கம்பிப் பின்னல் நிறுவும் போது தொழிலாளர்கள் படிவங்களில் நடக்க அனுமதிக்கிறது, கான்கிரீட் ஊற்றப்படுவதை ஏதுவாக்குகிறது.
டிரெல்லிஸிற்கான EPS கட்டமைப்பைத் தயாரிக்க, கிழக்குப் பெர்ம் தற்போது தயாரிப்புத்தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய தூண்களைச் சுற்றியுள்ள சாரக்கட்டு, இறுதியில் டிரெல்லிஸைத் தாங்கும்.
வடக்கு பிளாசாவில் நடவு செய்யும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அவை கறுப்பு நீர்ப்புகா பொருளால் பூசப்பட்டு, சூரிய ஒளியில் இருந்து நீர்ப்புகாக்கப்படுவதைப் பாதுகாக்க தற்போது மூடப்பட்டிருக்கும்.
மத்தியதரை கடலில் அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு பேர்மிக்கு ஒளியூட்டுகிறது
சூரிய அஸ்தமனத்தின் போது மேற்கு பேர்மினுடைய மற்றொரு காட்சி

மூலாதாரம்: https://news.bahai.org/story/1625/

உணவுப் பாதுகாப்பு: விவசாய மீள்திறம் இளம் விவசாயிகளின் கல்வியைப் பொறுத்துள்ளது என BIC கூறுகிறது


ரோம், 11 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜெனீவா அலுவலகம் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியை ஆராய்வதற்காக ஒரு குழு (panel) விவாதத்தை நடத்தியது. கல்வி முறைகள் கிராமப்புறங்களில் உள்ள இளம் சிறு குழு விவசாயிகளின் சவால்கள் மற்றும் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியும்.

உணவுப் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் BIC இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிலையான விவசாய அமைப்புகளை உருவாக்க மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, அறிவியல் & மதத்தின் நல்லிணக்கம், மற்றும் நீதி போன்ற ஆன்மீகக் கோட்பாடுகளின் பயன்பாட்டை ஆராய்வதன் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெற்றது. BIC நிகழ்வு இந்த ஆண்டு உலக உணவு கருத்தரங்குடன் சம நேரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது மற்றும் FAO-இன் பிரதிநிதிகள், இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சில் (CEJA) மற்றும் பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்புகளுடன் பணிபுரியும் ஓர் ஆராய்ச்சியாளர் ஆகியோரை ஒன்றிணைத்தது.

BIC-யின் ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ் தமது தொடக்கக் கருத்துக்களில் பின்வருமாறு கூறினார்: “உலகின் பல பகுதிகளில், இளைஞர்கள் சமநிலையற்ற சவால்கள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதால், ஆபத்தான விகிதத்தில் விவசாயத் துறையை விட்டு வெளியேறுகின்றனர்.”

BIC பேனல் பங்கேற்பாளர்கள் (இடமிருந்து): சனெம் கவ்ருல், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பஹாய்-உத்வேக அமைப்புகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சி; டயானா லென்சி, இளம் விவசாயி மற்றும் இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் (CEJA); பிஐசி ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ்; ஜென்னா டெஸ்டால், விவசாய மேம்பாட்டுக்கான இளம் தொழில் வல்லுநர்களின் இயக்குனர் (YPARD); மற்றும் கிறிஸ்டினா பெட்ராச்சி, FAO இ-கற்றல் பிரிவின் தலைவர்.

இந்தச் சவால்களில் சிலவற்றில், அறிவுக்கான அணுகல் இல்லாமையும் அடங்கும்; விவசாயத்திற்குத் திறமை மற்றும் முறையான கல்வி தேவையில்லை என்னும் கருத்து; மற்றும் விவசாய அறிவியல் குறித்த சில பல்கலைக்கழக திட்டங்கள் கோட்பாட்டில் (theory) கவனம் செலுத்துகின்றன, ஆனால் இளைஞர்கள் தங்கள் கிராமங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளுக்கு அந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஓர் ஆராய்ச்சியாளரான சனெம் கவ்ருல், உப-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள, விவசாய நடவடிக்கை-ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் இந்த சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ளும் நோக்கத்தை கொண்டுள்ள பஹாய்-உத்வேக அமைப்புகளின் வலையமைப்பிலிருந்து வெளிவரும் நுண்ணறிவுகளை ஆராய்ந்தார்.

“வேளாண் அறிவியல் மற்றும் விவசாயத்தின் மீதான அன்பை வளர்ப்பதற்கும்… இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தார்மீகத் திறன்களை உருவாக்குவதற்கும், அவர்களின் யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய விவசாய அறிவின் உருவாக்கம், பயன்பாடு மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் இந்த அமைப்புகள் முயல்கின்றன” என திருமதி கவ்ருல் கூறினார். .

சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்த பஹாய் முயற்சிகள் அனைத்தும், வெறும் உதவி பெறுபவர்களாக மட்டுமின்றி, அவர்களின் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவுசார் முன்னேற்றத்தின் முன்னணியாளராக மக்கள் இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு பகுதியில் பஹாய்-உத்வேக அமைப்புகளின் விவசாய முன்முயற்சிகள்.

இந்த அடிப்படைக் கொள்கையானது, பஹாய்-உத்வேக நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களில் பங்கேற்பவர்கள் தங்கள் சமூகங்களில் தங்கி, அவர்களின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார யதார்த்தத்திற்கு ஏற்ற விவசாய அமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விருப்பத்தை எழுப்புகிறது.

அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் அறிவு பெறுவதற்கான திறனை இளைஞர்களிடம் வளர்ப்பதற்கான அமைப்பின் முயற்சிகளின் விளைவு இது என திருமதி கவ்ருல் விளக்கினார்.

நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களுள் வலுவான நோக்கத்தைப் பேணுகின்றன, அவர்களின் சாத்தியதிறன்களை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கவும் அவை உதவுகின்றன. “பொருளாதார உறுதியற்ற காலங்கள் உட்பட உற்பத்தி செயல்பாட்டில் இயற்கையாக எழும் எந்தவொரு சிரமத்தையும் இளைஞர்கள் தாங்கிக்கொள்ள இது உதவுகிறது” என திருமதி கவ்ருல் கூறினார்.

கல்வி முறைகளை வடிவமைப்பதில் பங்கேற்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை உள்ளடக்கிய மற்ற கருத்துகள் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டன. FAO மின்கற்றல் அகாடமியின் தலைவரான கிறிஸ்டினா பெட்ராச்சி, இது போன்ற அமைப்புகள் “உள்ளூர் நடைமுறைகள் மற்றும் மரபுகளை ஒருங்கிணைக்கவும்” இளம் கிராமப்புற விவசாயிகளின் தேவைகள் மற்றும் உண்மைகளுக்குப் பதிலளிக்கவும் முயலும் என கூறினார். தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில், மற்ற கருப்பொருள்களுடன், நிலையான உணவு முறைகளை உருவாக்குவதற்கான அதன் ஆய்வை BIC தொடரும்.

BIC குழு விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கருப்பொருள்கள், கூட்டத்தின் பங்கேற்பாளர்களிடையிலான சிறு குழுக்கள் நிலையில் மேலும் ஆராயப்பட்டன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1624/

ஆஸ்த்திரியா: பெண்கள் இயக்கத்திற்கான முன்னோடி என்னும் முறையில் தாஹிரியின் தொடர்பை நாடகம் ஆராய்கிறது


6 நவம்பர் 2022

வியன்னா – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலைக்கான பஹாய் நாயகியான தாஹிரிக்கும் — ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மரியென் ஹைனிஷ்சுக்கும் என்ன தொடர்பு?

“Der Siegelring!” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தில் இது ஆய்வுக்கு உட்பட்டதாக இருந்தது. கலை மற்றும் கலாச்சார அமைச்சின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் பல தேசியப் பிரச்சனைகள் பற்றிய பொது விவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது.

ஆஸ்திரியா நாட்டின் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட ஹைனிஷ், உயர் கல்விக்குச் சமமான அணுகலுக்காக வாதிட்டதுடன் அந்த நாட்டில் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினார்.

ஆஸ்திரிய பஹாய் தேசிய நிலையத்தின் காட்சிகள். இங்கு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக தாஹிரி பற்றிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

மார்த்தா ரூட்டுடனான ஒரு நேர்காணலில்-குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன-ஹைனிஷ் கூறியதாவது: “நான் ஓர் இளம் பெண், தாஹிரியின் தியாகத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது பதினேழு வயதுதான். அப்போது நான் சொன்னதாவது, ‘தாஹிரி தமது உயிரைக் கொடுத்து பெண்களுக்காக என்ன செய்ய முயன்றாரோ ஆஸ்திரியாவின் பெண்களுக்காக அதை நானும் செய்ய முயல்வேன். …'”

பாப் பெருமானார் பிறந்த இருநூறாவது ஆண்டு நினைவாக 2019-இல் இஸ்மா ஃபோர்கானி இந்த நாடகத்தை எழுதினார். “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்திற்கான வாகையராக தாஹிரியின் வாழ்க்கையில் உத்வேகம் பெற்ற பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் முக்கிய ஐரோப்பியர்களுக்கு இடையிலான உரையாடலை இந்த நாடகம் பின்தொடர்கிறது” என திருமதி ஃபோர்கானி கூறுகிறார்.

ஆஸ்திரியாவின் பஹாய்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்கு பங்களிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹாய் தேசிய நிலையத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டது.

நிக்கோல் ஃபெண்டெசாக் இந்த நாடகத்தின் சமீபத்திய தயாரிப்பை இயக்கியுள்ளார், இது கடந்த மூன்று ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்டது. “நாடகத்தின் மூலம், கடந்த காலம் நிகழ்காலம் இரண்டிலும் தங்கள் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலம் செல்வாக்கு செலுத்திய விதிவிலக்கான வரலாறு சார்ந்த பெண்களை நாங்கள் சந்திக்கின்றோம், ஆனால், எதிர்கால சந்ததியினருக்கும் இவர்கள் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது.”

ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய சபை உறுப்பினரான கோரின் ஃபரிட், இந்த நாடகம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என விளக்குகிறார்.

“இந்த நாடகம், அதன் சாராம்சத்தில், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல் பற்றிய பஹாய் கொள்கையின் ஆய்வு ஆகும்,” என அவர் கூறுகிறார்.

சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஆஸ்திரிய பஹாய்களின் முயற்சிகள் பற்றிய கண்காட்சியில் வருகையாளர்கள் இந்தக் கருப்பொருள்களின் ஆராய்வைத் தொடர்ந்து மேற்கொண்டனர், இது அந்த நாடு முழுவதிலும் உள்ள பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளின் நுண்ணறிவுகளை எடுத்துக்காட்டுகிறது.

பஹாய் தேசிய நிலையத்தில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்காட்சி திறந்த இல்ல நிகழ்வின் போது நடத்தப்பட்டது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1623/

ஸ்பெய்னிய சங்கத்தின் 2022 விருது ஈரானிய உயர்கல்வி பஹாய் பயிற்சிக்கழகத்திற்குச் சென்றது


மூலாதாரம்: https://www.radiofarda.com/a/liberpress-bahai–2022-award/32102037.html

பஹாய் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் 1987-இல் நிறுவப்பட்டது

ஸ்பானிஷ் “லிபர்பிரஸ்” சங்கத்தின் 2022 பரிசு ஈரானிய பஹாய் உயர் கல்வி நிறுவனத்திற்கு சென்றதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

“தங்கள் தாயகத்தில் கல்வியை இழந்த ஆயிரக்கணக்கான பஹாய் இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்கான பாராட்டத்தக்க முயற்சிகளுக்காக உயர்கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் (BIHE) 2022 விருதுக்கு தகுதி பெற்றுள்ளது” என லிபர்பிரஸ் சங்கம் கூறியது.

2022 லிபர்பிரஸ் பரிசு உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் மற்றும் மனித உரிமைகள் கார்ட்டூனிஸ்ட் கியானூஷ் ரமேசானி ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

BIHE இணையதளம்

1999 முதல், இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் மனித விழுமியங்களின் கலாச்சாரத்தை ஆழப்படுத்த உழைத்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.

பஹாய் உயர் கல்விக்கான பயிற்சிக்கழகம் ஈரானில் உள்ள ஒரு முறைசாரா கல்வி நிறுவனமாகும், இது 1987-இல் பஹாய்களால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பித்ததற்காகவும் படித்ததற்காகவும் பல பஹாய்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ வகுப்புகள் நடைபெறுவதில்லை.

இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சுயமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏதேனும் கேள்விகளுக்குத் தீர்வு காண, தன்னார்வலர்களின் வீடுகளில் அலுவலக நேரம் மட்டுமே நடத்தப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசு பஹாய் சமயத்தை ஒரு “தெய்வீக மதம்” என்பதை அங்கீகரிக்கவில்லை, மேலும் அதன் நம்பிக்கையாளர்கள், பல்கலைக்கழகங்களில் படிப்பது மற்றும் அரசாங்க வேலைகளை வைத்திருப்பது போன்ற உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் எப்போதும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும்.

சமீபத்திய ஆண்டுகளில், பஹாய்களின் கல்வி விலக்கு வேறு சில பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில், செம்னானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஒரு மாணவரை “பஹாய்” என்பதால் சேர்க்க மறுத்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஈரானின் கல்வி அமைச்சர் கூறினார்: “நாட்டின் மதங்கள் தவிர அதிகாரமற்ற பிற மதங்களைப் பின்பற்றுவதாக எந்த மாணவரும் கூறினால் , மற்றும் அக்கூற்று ஒரு பிரச்சாரத்தின் வடிவமாக கருதப்பட்டு, பள்ளிகளில் அவர்களுக்குக் கல்வி அனுமதிக்கப்படாது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் 30-வது பிரிவின்படி, “நாடு முழுமைக்கும் இடைநிலைப் பள்ளி முடியும் வரை இலவச கல்வி மற்றும் மேம்பாட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என கூறப்படும் அதே வேளை இத்தகைய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கஸாக்ஸ்தான்: சமுதாய மேம்பாடு ஆன்மீகக் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலைச் சார்ந்துள்ளது


கூடுதல் படங்களுக்கு இங்கு செல்லவும்
https://news.bahai.org/story/1622/

25 அக்டோபர் 2022

அஸ்தானா, கஸாக்ஸ்தான் – போப்பாண்டவர் பிரான்சிஸ் மற்றும் அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் உட்பட உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்கள், கஸாக்ஸ்தான், அஸ்தானாவில் உள்ள உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் 7-வது மாநாட்டில், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய சமீபத்தில் கூடினர். .

நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரும் அவ்வொன்றுகூடலில் பஹாய் சமூக பிரதிநிதிகளில் ஒருவருமான லியாசத் யங்கலியேவா கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மன்றம், மதச் சமூகங்கள் அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.

“அமைதியை நிலைநாட்டுவதே மதத்தின் பங்கு” என அவர் கூறுகிறார். “ஆயினும், நீண்டகால தப்பெண்ணங்கள், சமூகத்தின் பிரிவுகளுக்கு எதிரான வன்முறைகளை அங்கீகரிக்கும் மாறாமல் தொடர்ந்துவரும் மற்றும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்பட்ட தீங்கு விளைவிக்கும் மரபுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தொடர்ந்து பிரிக்கின்றன.”

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை உருவாக்குவதில் மதம் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளும் உள்ளன என திருமதி. யங்கலியேவா விளக்கினார். பெருந்தொற்று மற்றும் சமீபத்திய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை சமாளிப்பதில் சமய சமூகங்கள் பேரழிவுகளுக்கு விடையிறுப்பதில் தங்கள் வேறுபாடுகளை வென்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அம்மன்றத்தின் பிரதான அமர்வில், பஹாய் சர்வதேச சமூகத்தின் பொதுச்செயலாளர் டேவிட் ரட்ஸ்டைன் தமது கருத்துக்களில், இதே உணர்வுகளை எதிரொலித்து, நம்பகத்தன்மையானது “மற்றவர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்வதில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் காண்கிறது” என கூறினார்.

நம்பகமான தலைவர்களை விவரிப்பதில், “அவர்கள் கூட்டு முடிவெடுப்பையும் கூட்டு நடவடிக்கையையும் வரவேற்கிறார்கள் மற்றும் நீதி மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தினால் தூண்டப்படுகிறார்கள்,” என கூறினார்:

சமூக முன்னேற்றம் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய பகிரப்பட்ட பார்வையைப் பொறுத்துள்ளது என டாக்டர் ரட்ஸ்டேய்ன் மேலும் கூறினார்.

“மனித இனத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் பிரத்தியேகங்களையும் ஒழிப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும். பெண் மற்றும் ஆணின் சமத்துவத்தை நாம் நமது சொற்களிலும் செயலிலும் நிலைநிறுத்த வேண்டும். அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கத்திற்காக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி வாதிட வேண்டும்.

டாக்டர். ருட்ஸ்டீன் பஹாவுல்லாவின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டி, மேலும் தொடர்ந்தார்: “எல்லா மக்களும் எப்போதும் முன்னேறி வரும் நாகரீகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கூற்று, முழு மனித குடும்பத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்த்துகிறது. .”

மன்றத்தைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி யங்கலியேவா, கஸாக்ஸ்தானில் உள்ள மதத் தலைவர்களிடையே ஒத்துழைப்பின் உணர்வு இந்த நிகழ்விலிருந்து அதிகரித்துள்ளதாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “மன்றம் முடிந்த சிறிது நேரத்திலேயே அஸ்தானாவில் உள்ள பஹாய் தேசிய அலுவலகத்தில் நாட்டின் மத விவகார அமைச்சகம் கூட்டிய கூட்டத்தில் இது தெளிவாக உணரப்பட்டது; அங்கு பல்வேறு சமய சமூகங்களின் பிரதிநிதிகள் அந்த மன்றத்தின் எதிர்காலம் குறித்து இணக்கமாக முறையில் ஆலோசனை நடத்தினர்.”

கஸாக்ஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதி காஸிம்-ஜொமார் தொகாயெவ் அவர்கள் புரவலராக செயல்பட்ட கருத்தரங்கில், இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், பல்வேறு வகையான மதங்கள் மற்றும் தேசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1622/

BIC நியூ யார்க்: பகிரப்பட்ட அடையாளம் குறித்த கருத்தாக்கத்தை ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின் போது ஆராய்தல்


BIC NEW YORK, 19 அக்டோபர் 2022, (BWNS) – மனிதகுல ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பகிரப்ப்பட்ட அடையாளம் குறித்த தொலைநோக்கின் தேவை ஐ.நா. பொது சபையின் 77-வது அமர்வின் உயர்மட்ட வாரத்தின் பல சந்திப்புகளின் போது பஹாய் அனைத்துலக சமூகத்தின் நியூ யார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கூட்டிய ஒரு கருத்தரங்கில், BIC பிரதிநிதியான டேனியல் பேர்ரல், “மனிதக் குடும்பம் ஒன்று என்பது மையக் கொள்கையாக இருக்க வேண்டும்: நமது பகிரப்பட்ட மானிடத்தன்மையுடன் ஒப்பிடும் போது, நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய எண்ணற்ற பண்புக்கூறுகள் இறுதியில் அதற்கு இரண்டாம் பட்சமானவைவே.”

ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின்போது நடைபெற்ற மதநல்லிணக்க ஒன்றுகூடலில் BIC பிரதிநிதிகள்
மேலும் படங்களைப் பார்க்க: https://news.bahai.org/story/1621/slideshow/1/

தேசிய அல்லது இன, மத மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த பிரகடனத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மூத்த ஐ.நா அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை இந்த மன்றம் ஒன்றிணைத்தது.

உ.லக நீதிமன்றத்தின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, திரு. பெர்ரெல் மேலும் கூறியதாவது: “அனைத்து மக்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமும், மனிதகுலத்தின் சிறந்த நலன்களுடன் ஒப்பிடுகையில் தாழ்வான விசுவாசங்களை அவற்றுக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலமும், உலகின் ஒருமைத்தன்மை உணரப்பட முடியும், மற்றும் மனிதப் பன்முகத்தன்மையின் எல்லையற்ற வெளிப்பாடுகள் அவற்றின் மிக உயர்ந்த நிறைவைக் காணக்கூடும்” பஹாய் போதனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி–ஒற்றுமை என்பது  சீர்மையிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பன்முகத்தன்மை குறித்த ஓர் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்னும் உண்மையை அந்தச் செய்தி எடுத்துக்காட்டுகிறது.

2024-ஆம் ஆண்டின் `எதிர்கால உச்சமாநாடு` குறித்த ஏற்பாடுகளுக்கான மற்றொரு கூட்டத்தில் ஒற்றுமைக் கோட்பாட்டின் தாத்பர்யங்கள் மேலும் ஆராயப்பட்டன. இக்கூட்டம் பி.ஐ.சி எடுத்து நடத்தியதும் ஸ்டிம்சன் மையத்தின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சமகால சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துலக அமைப்புகளின் பங்கு குறித்து பிரதிபலிப்பதற்கு நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களுக்கு  அழைப்புவிடுத்தனர்.

உலகளாவிய சமாதானத்தை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வு தொடர்பான கருப்பொருள்களை ஆராயும் “ஒரு பொருத்தமான ஆளுகை: மனிதகுலமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்னும் தலைப்பில் பி.ஐ.சி-யின் அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல கருத்துக்கள் குறித்து விவாதங்கள் விரிவடைந்தன.

இந்த இயக்கத்தின் ஓர் இன்றியமையா அம்சம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த விழிப்புணர்வாகும் என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது—பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஐ.நா.வுக்கு செய்யப்படக்கூடிய சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக பி.ஐ.சி.யின் நியூ யோர்க் அலுவலகம் நடத்திய மற்றொரு நிகழ்வில் இது கலந்துரையாடலின் தலைப்பாக இருந்தது.

இந்த நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் ஸ்லோவேனியாவின் முன்னாள் தலைவரும் `கிளப் டெ மாட்ரிட்டின்` தலைவருமான டேனிலோ துர்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தக் கலந்துரையாடலில், பி.ஐ.சி பிரதிநிதிகள் பெருந்தொற்றானது எவ்வாறு சமுதாயங்களின் தலைமைத்துவத்தில் பெண்களின் தவிர்க்கவியலா பங்கை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும், தலைமைத்துவத்தின் மாதிரிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிலைப்படுத்தினர். சமூகத்தின் எந்த மட்டத்திலும் தலைமைக்குப் பெண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய பல நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது என பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

ஐ.நா. சீர்திருத்தங்கள், குறிப்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் முழுப் பங்களிப்பை செயல்படுத்துவதற்குத் தற்போதைய கட்டமைப்புகளை மறுவடிவமைக்க வேண்டும் என பி.ஐ.சி பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இந்தக் கலந்துரையாடல்களின் பதிவுகள் சில  இங்குஇங்கு, மற்றும் இங்கு காணப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1621/

பஹாவுல்லாவின் நகைச்சுவை


ஒரு தனிநபர் பஹாய் வலைப்பதிவை தழுவி எழுதப்பட்டது

ஒரு பஹாய் புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர் புனிதநிலத்தில் ஓர் ஒன்பது நாள்கள் கொண்ட முறையான நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வில், வழிகாட்டப்பட்ட பயணங்கள், உரைகள், படித்தளங்கள் வழி உலா, பாப் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கான நீண்ட விஜயங்கள் உள்ளன.

நான் வருடம் 2001 ஆரம்பத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட போது, திருமதி குரோஸ்மன் என் வழிகாட்டியாகப் பணிபுரிந்தார். அக்கா நகர் மற்றும் ஹைஃபாவுக்கு வருகையளித்தபோது பல அற்புதமான கதைகளை நான் செவிமடுத்தேன். இங்கு என் மனதில் நின்ற மூன்று கதைகள் உள்ளன. இக்கதைகள் பஹாவுல்லா மற்றும் அவரது சகாக்களின் புத்திசாலித்தனம் மற்றும் விகடத்தை நினைவூட்டுகின்றன. இவை என் நினைவிலிருந்து வருபவை. அவற்றுக்கான மூலாதாரங்கள் தெரிந்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும்.

மிஷ்கின்-கலாம் தமது நாள்களில் ஒரு சிறந்த கையெழுத்துக் கலைஞராக விளங்கியதுடன், அவர் பஹாய்கள் தங்கள் சமயத்தின் ஒரு சின்னமாகக் கொள்ளும் அதிபெரும் நாமத்தின் எழுத்துக் கலைவடிவத்தை அமைத்தவரும் ஆவார். அவர் பஹாவுல்லாவின் நெருங்கிய நண்பரும் அவரது பயணங்கள் பலவற்றில் கலந்துகொண்டுமுள்ளார். ஒரு நாள் பஹாவுல்லாவுக்குத் தேநீர் பாத்திரம் (சமோவார்) ஒன்று தேவைப்பட்டது. அதை மிஷ்கின்-கலாமிடமிருந்து இரவல் வாங்கி வர ஒருவரை அனுப்பி வைத்தார். அந்த மனிதர் மிஷ்கின்-கலாமிடம் வந்து, “பஹாவுல்லா உங்கள் தேநீர் பாத்திரத்தை இரவல் வாங்கி வர சொன்னார்,” என்றார். அதற்கு மிஷ்கின்-கலாம் “நான் இரவல் தர முடியாது என பஹாவுல்லாவிடம் சொல்லுங்கள்,” என கூறினார்.  திடுக்கிட்டுப் போன அந்த மனிதர், பஹாவுல்லாவிடம் திரும்பிச் சென்று, “மிஷ்கின்-கலாம் இரவல் தர முடியாது என கூறிவிட்டார்,” என தெரிவித்தார். அது கேட்ட பஹாவுல்லா முகத்தில் ஒரு புன்னகையுடன், திரும்பிச் சென்று ஏன் தர முடியாது என கேட்டு வரும்படி அம்மனிதரிடம் கூறினார். அம்மனிதரும் மிஷ்கின்-கலாமிடம் திரும்பிச் சென்று, “நீங்கள் ஏன் தர முடியாது என கூறினீர் என தெரிந்து வரும்படி பஹாவுல்லா என்னைப் பணித்துள்ளார்,” என கூறினார். அதற்கு மிஷ்கின்-கலாம், “என் வாழ்க்கையில் பல முறை நான் இறைவனிடம் ஏதாவது ஒன்றை யாசித்துள்ளேன், ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் மறுத்துள்ளார். என் வாழ்க்கையில் ஒறு முறையாவது கடவுள் என்னிடம் கேட்டவற்றை மறுதலிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்களிக்கப்பட வேண்டுமென அவரிடம் தெரிவி,” என கூறியனுப்பினாராம்.

அக்காநகருக்கு அருகே இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அங்கு பஹாய்கள் ஒரு சிறு வண்டல் மண் தீவை  உருவாக்கி, அதை ஒரு பூந்தோட்டமாக ஆக்கினர். அதற்கு ரித்வான் தோட்டம் எனவும் பெயரிட்டனர். (இதை, பஹாவுல்லா தம்மைப் பொதுநிலையில் பிரகடனப்படுத்திய பாக்தாத் நகரில் உள்ள ரித்வான் தோட்டத்துடன் குழப்பிவிடக்கூடாது) இது பஹாவுல்லா அக்காநகர் கதவுகளுக்கு வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் ஆகும். பஹாவுல்லா, சிரமப் பரிகாரத்திற்காகவும் அவ்விடத்தின் இயற்கை அழகை அனுபவிப்பதற்காகவும் இத்தோட்டத்திற்கு அடிக்கடி விஜயம் செயவார். இப்பூந்தோட்டத்தின் தோட்டக்காரர் அபுல் காஸிம் என்னும் ஒரு மனிதராவார். இவர் அப்பூந்தோட்டத்தை நேர்த்தியாக்குவதற்குப் பல நாள்கள் பாடுபட்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பூந்தோட்டத்தை அணுகிக்கொண்டிருந்தது. அது தோட்டத்தையே அழிக்கக்கூடிய ஒரு கூட்டமாக இருந்தது. அபுல் காஸிம் மிகவும் பதட்டம் அடைந்து பஹாவுல்லாவை அணுகி, செடிகளின் அழிவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்யுமாறு முறையிட்டார். அதற்கு பஹாவுல்லா, “அபுல் காஸிம், வெட்டுக்கிளிகளுக்கும் உணவு தேவையல்லவா?” என்றார். அபுல் காஸிம் தனது பூந்தோட்டத்திற்குச் சென்று கவலையுடன் அமர்ந்திருந்தார்.

வெட்டுக்கிளிகள் கூட்டம் அணுகிக்கொண்டிருந்தது. அபுல் காஸிம் மீண்டும் பஹாவுல்லாவிடம் சென்று உதவிக்காக மன்றாடினார். அப்போதும் பஹாவுல்லா அதே பதிலைத்தான் அளித்தார். வெட்டுக்கிளிகள் அபுல் காஸிமின் செடிகளை தின்றுகொண்டிருந்தபோது, அபுல் காஸிம் மீண்டும் உதவிக்காக பஹாவுல்லாவிடம் மன்றாடினார். பஹாவுல்லா தோட்டத்திற்குச் சென்று, அணுகிக்கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தைப் பார்த்து, ஓர் உரத்த குரலில் “அபுல் காஸிம் உங்களால் பெரும் மன உளைச்சலுற்றிருக்கின்றார் என கூறிவிட்டு, தமது மேலாடையை உயர்த்தி வேகமாக உதறினார். தோட்டத்தில் இருந்த பெரும்பாலான வெட்டுக்கிளிகள்  தோட்டத்தை விட்டு பறந்து சென்றன.

அதே தோட்டத்தைப் பராமரித்து வந்த அபுல் காஸிம் அங்கு சிதறிக்கிடந்த முசுக்கட்டைப் பழங்களை சுத்தம் செய்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அங்கு, பஹாவுல்லா எப்போதும் அமர்கின்ற இருக்கைக்கு மேலே ஒரு முசுக்கட்டைப் புதர் வளர்த்திருந்தது. அவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு விழுந்து கிடந்த முசுக்கட்டை பழங்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வழிந்திருந்த பழச்சாற்றை துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இது அடிக்கடி நடந்து வந்தது. இப்பிரச்சினை குறித்து அபுல் காஸிம் பஹாவுல்லாவிடம் புகார் செய்து, என்ன செய்வது என கேட்டார். அதற்கு பஹாவுல்லா, அந்த முசுக்கட்டைப் புதரின் முன்னால் நின்று, அப்புதரைப் பார்த்து, “அபுல் காஸிம் உன் காரணமாக மகிழ்ச்சியாக இல்லை,” என கூறினார். அவர் மீண்டும் முசுக்கட்டைப் புதரை நோக்கித் தமது மேலாடையை வேகமாக உதறினார். அதற்குப் பிறகு அந்தச் செடியில் பழங்கள் காய்க்கவே இல்லை.

இக்கதைகள் மூஜான் மோமனின்  பஹாவுல்லா: ஒரு குறு வாழ்க்கைச் சரிதம், பக். 121-122 என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

…ரித்வான் தோட்டத்தின் உருவாக்கத்தின் போது, தீவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அத்தீவின் உயரத்தை அதிகரிக்க எல்லா பஹாய்களும் உதவிக் கரம் நீட்டினர், அதன் மண்ணைப் பதப்படுத்தி அதை ஒரு தோட்டமாக ஆக்கிட முயன்றனர். ஒரு நாள், எல்லாரும் வேலையில் கவனமாக இருந்த போது நபில் ஸாரான்டி அத்தோட்டத்திற்கு வந்தார். வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் நபிலைக் கூப்பிட்டு அவர் கையில் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து தாமும் உதவி செய்யுமாறு அழைத்தார். …பஹாவுல்லாவினால்  நபில் (அரபு மொழியில் மேன்மை) என்னும் பெயர் வழங்கப்பட்டிருந்த அந்த முல்லா முகம்மத், பஹாவுல்லா தமக்கு `நா` `பில்` என பெயரிட்டுள்ளதால் (அரபு மொழியில் அதற்கு `மண்வெட்டி வேண்டாம்` என்பது பொருளாகும்) தாம் மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஒரு முறை, அக்காநகரில் மரணமுற்ற ஒரு பஹாயின் நினைவாஞ்சலியில் பஹாவுல்லா கலந்துகொண்டார். அஃகா முகம்மத் அலி பஹாவுல்லா எவ்வளவு கருணையுடனும் அழகுடனும் இறந்தவரைப் பற்றி உரையாற்றினார் என்பதை கவனித்தார். அதே விதமாகத் தானும் ஒரு நினைவாஞ்சலியைப் பெற வேண்டும் என நினைத்த அஃகா முகம்மத் அலி பஹாவுல்லாவிடம், “நானும் இறந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு, எனக்கான ஒரு நினைவாஞ்சலி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சலுகையை வழங்கினால் அது எனக்குப் பெரும் மதிப்புடையதாக இருக்கும் என கூறினார்.

ஒரு முறை அவர்கள் இன்னுமும் பாக்தாத்தில் இருந்த போது, சற்று தடிமனாக இருந்த மதகுரு ஒருவர் பஹாவுல்லாவைக் காண வந்து, பெரும் ஆடம்பரத்துடன் உட்கார்ந்து, “நான் முஜ்டாஹிட்டுகளின் முத்திரையாவேன்,” என அறிவித்தார். முஜ்டாஹிட்டுகள், ஷீயா மதகுருக்களுள் மிகவும் மூத்த பிரிவினர் ஆவர், மற்றும் இந்த சொல் பொதுவாக நபி முகம்மத், நபிகளின் `முத்திரை` அல்லது கடைசி என்பதுடன் தொடர்புடைய சொல்லாகும்.

இந்த வார்த்தைக்கு இங்கே குறிப்பிட்டுள்ளபடி, மிகவும் சிறந்தது எனவும் பொருள் கொள்ளலாம். இருப்பினும், பஹாவுல்லா முதல் அர்த்தமான `கடைசி` என்னும் பொருளிலான சொல்லை  எடுத்துக் கொண்டு (‘நான் முஜ்டாஹிட்களில் கடைசி’ என அவர் கூறியதைக் குறித்து), “இன்ஷா`அல்லா, இன்ஷா`அல்லா (கடவுள் சித்தம் கடவுள் சித்தம்)” என கூறினார். (அதாவது இனிமேல் அவரைப் போன்ற ஒருவர் உலகில் இருக்க வேண்டாம் என்னும் பொருளில்)

“மானிடம் அனைத்திற்குமான அன்பு”: நெதர்லாந்தில் இன ஒற்றுமைக்கான சொல்லாடலுக்குப் பங்களித்தல்


கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1620/ செல்லவும்

13 அக்டோபர் 2022

ஆம்ஸ்டர்டாம், (BWNS) – உலகம் முழுவதிலும் உள்ள பல சமூகங்களைப் போலவே, 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில், தேசிய அடையாளம், இடம்பெயர்வு மற்றும் தப்பெண்ணம் பற்றிய கேள்விகள் நெதர்லாந்திலும் பொது நனவுணர்விலும் உந்தப்பட்டன. இது அமெரிக்காவில் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டது.

அப்போதிருந்து, டச்சு பஹாய் வெளிவிவகார அலுவலகம், இன ஒற்றுமை பற்றிய உரையாடலுக்கு பங்களிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிக சமுதாய ஒருங்கிணைவை பேணக்கூடிய வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை போன்ற ஆன்மீகக் கருத்துகளை ஆராயும் கலந்துரையாடல் அரங்குகளை நடத்தி வருகிறது.

இந்த உரையாடல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என அந்த அலுவலகத்தின் ஷெரீன் டெவிட் விளக்குகிறார்: “குறிப்பாக இப்போது நெதர்லாந்து உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக மாறி வரும் நிலையில் டச்சு என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள்.”

வெளிவிவகார அலுவலகம், பிரச்சினைகளை ஆழமாக ஆராய, உரையாடல்கள் அடையாளம் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு சவாலிட வேண்டும் என கண்டறிந்துள்ளது.

“இந்தக் கலந்துரையாடல்கள், மக்கள் ‘ஒருங்கிணைப்பு’ பற்றி அடிக்கடி பேசுவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆனால் நடைமுறையில், எதிர்பார்ப்பானது ‘ஒருங்கிணைத்தல்’ குறித்ததாகும் என திருமதி டெவிட் கூறுகிறார்.

“தனிநபர்களுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த அனுமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும், அந்த அடையாளம் அவர்களின் தேசியம் அல்லது கலாச்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்,” என அவர் தொடர்கிறார், “ஆனால், மனிதர்கள் ஆன்மீக ஜீவன்களாகக் காணப்படுகின்ற, நம்மைப் பற்றிய ஓரு வித்தியாசமான கருத்தை ஏற்றுக்கொண்டோமானால் ஒருவர் எப்படி டச்சுக் குடிமகனாகவும், உலகக் குடிமகனாகவும் இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது இயன்றதாகிடும்.

பல்வகைமையில் ஒற்றுமை என்னும் ஆன்மீகக் கொள்கையை மக்கள் மதித்துணரும்போது, ​​அவர்கள் தங்கள் சமூகத்தில் முன்வைக்கப்படும் செழுமையான பன்முகத்தன்மைக்குப் பெரிதும் மதிப்பளித்திட முடிகிறது.

“இது எங்கள் சிறிய நாடான நெதர்லாந்தைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துடனான நமது உறவுகள் அனைத்தையும் நாம் பார்க்க வேண்டும்” என திருமதி டெவிட் கூறுகிறார்.

அலுவலகத்தின் உரையாடல்கள் சிறப்பித்துக் காட்டுவது என்னவெனில், அடையாளம் குறித்த பரந்த கருத்தாக்கமானது ஒருமைப்பாடு குறித்த கொள்கையின் ஒப்புதலுடன் இணைக்கப்படும்போது, ​​மனிதக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராகத் தங்களின் சொந்த அடையாளமே மற்ற அடையாளங்கள் மற்றும் சங்கங்கதங்களை விட முதன்மை பெறுவதை மக்கள் காண முடிகிறது.

“நாம் ஏதோ பெரிய ஒன்றின் ஒரு பகுதியினாராக இருப்பதைப் பார்த்திடக் கற்றுக்கொள்கிறோம். ‘நாம் அல்லது அவர்கள்’ என்னும் சிந்தனையை நம்மால் வெல்ல முடிகிறது. இது சமூக கட்டமைப்புகள், ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்குதல் செயல்முறைகள் மற்றும் ஒரு சமூகமாக இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நீதி போன்ற பரவலான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதற்கான ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

“மனிதகுலத்தின் மீதான அன்பு என்பது தப்பெண்ணங்களை படிப்படியாகக் கரைத்து, தனிப்பட்ட குடிமக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1620/

ஒரு நிலையான உணவு முறையை நோக்கிபஹாய் அனைத்துலக சமூகத்தின் ஓர் அறிக்கை

செப்டம்பர் 14-16 வரை நடைபெறும் ஐரோப்பிய விவசாயம் மற்றும் மீன்வள அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தின் அடிப்படையில் (முன்கூட்டியே) வெளியிடப்பட்ட பஹாய் சர்வதேச சமூக பிரஸசல்ஸ் அலுவலகத்தின் அறிக்கை

பிரஸ்சல்ஸ்—13 செப்டம்பர் 2022
ஐரோப்பாவில் தற்போதைய போரின் பல விளைவுகளினால், உலகின் பல பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமடைந்துள்ளது. எவ்வாறாயினும், , பாதிப்புக்கு ஆளாகியுள்ள உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியே அதன் உடனடி சவாலாக இருக்கின்றது.

சமீபத்திய ஆண்டுகளில், பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் போராட்டங்களால், உணவு முறைமையின் அடிப்படையிலான பரந்த அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளின் எல்லைக்குட்பட்டமை போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போதுமான உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அவசரத் தேவைக்கு கவனம் செலுத்தப்பட்டாலும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய விவாதங்கள், உடனடி காரணங்களுக்கான அக்கறையை விடவும், உலகளாவிய உணவில் உள்ள அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் சொல்லாடல்களுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது. அத்தகைய சொல்லாடலின்றி, கொள்கை உருவாக்கமானது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு, தற்காலிக மற்றும் பகுதியளவு தீர்வுகளை மட்டுமே அடையாளம் காண முடியும்.

சமீபத்திய தசாப்தங்களில் உலகளாவிய விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகிற்கு நிலையான, சுரண்டப்படாத, மற்றும் உலகளாவிய மக்கள் தொகை முழுவதற்குமான உணவு முறை தேவைப்படுகிறது. இதற்குப் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மட்டுமல்ல, உள்ளூர் முதல் சர்வதேச மட்டம் வரையிலான விவசாய நடைமுறை மற்றும் கொள்கையின் அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் அனுமானங்களுக்குக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உணவு முறையின் செயல்பாட்டை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளில் முதன்மையாக இருப்பது மனிதகுலத்தின் ஒருமை. உலகின் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும், தேசமும் அல்லது மண்டலமும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாகும், அதன் பகுதிகளின் நல்வாழ்வானது, முழுமையின் நல்வாழ்விலிருந்து பிரிக்கப்பட முடியாதது. மற்ற கண்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுவான விவசாயக் கொள்கை போன்ற முன்முயற்சிகள் ஐரோப்பாவின் எல்லைகளுக்கும் அப்பால் உள்ள விவசாயிகள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் மீது அவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

உலகளாவிய பொது நலனை மேம்படுத்தும் உணவு முறைமையை நோக்கிய முன்னேற்றம், வெவ்வேறு கண்ணோட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விதம் மற்றும் அளவு ஆகியவற்றின் மீது குறிப்பிடத்தக்க அளவைச் சார்ந்திருக்கும். உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதியான அடித்தளத்தில் நிலைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நுண்ணறிவுகளையும் எந்த ஒரு தனி நடவடிக்கையாளர்களோ எந்த ஒரு தனிப்பட்ட கண்டமோ கொண்டிருக்கவில்லை என்னும் ஒப்புதலுடன் உலகளாவிய உணவு முறைமையைச் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், விவசாயிகள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை, பலதரப்பட்ட பங்குதாரர்களை இணைப்பதற்கான புதுமையான வழிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளுடன், ஒரு கூட்டு விசாரணை செயல்முறை தேவைப்படுகிறது. மேலும், விரிவடையும் பங்கேற்பு என்பது ஒரு சகிப்புக்குட்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையாக மட்டும் புரிந்து கொள்ளப்படாமல், நிலையான உணவு முறைகள் எதை உள்ளடக்குகின்றன என்பது பற்றிய ஒரு கூட்டு விசாரணையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதில் அனைவரும் அர்த்தத்துடன் ஈடுபடுகின்றனர் மற்றும் அனைவரும் பங்களிக்கின்றனர்.

ஐரோப்பியக் கண்டத்தின் தற்போதைய மற்றும் வரலாறு சார்ந்த செல்வாக்கு, ஒரு நியாயமான உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பையும் பொறுப்பையும் அதன் மீது வைக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி சவாலின் அளவானது, நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் செய்முறைகள் மற்றும் அணுகுமுறைகளின் நிலையான மறுமதிப்பீட்டைத் தேவையாகக் கொண்டிருந்த போதும், தொடர்ந்து விரிவடைந்து வரும் பங்குதாரர்கள் வட்டத்திற்குள் ஒருமித்த கருத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்துவது, ஒரு நிலையான உணவு முறைமையின் அடிப்படையில் உலகளாவிய விசாரணை செயல்முறையானது பலனளிக்கும் என்பதை உறுதிப்படுத்த உதவும்.

மூலாதாரம்: https://www.bic.org/statements/towards-sustainable-food-system