பொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீக உள்ளர்த்தங்கள்


(பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை)

24 நவம்பர் 2001

அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திருப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும். உலக நீதிமன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அற்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்.

பஹாய் உலகத்திற்கும், தேசிய ஆன்மீக சபைகளுக்கும் சுமார் பத்துப் பதினான்கு நாள்களுக்கு முன் உலக நீதி மன்றம் அனுப்பிய கடிதத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அவை உலகத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, பஹாய் அனைத்துலக நிதிக்கு மேலும் அதிகமான உதவியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பது குறித்து தேசிய ஆன்மீக சபைகள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளை, உலக நீதி மன்றமும் அதனுடைய ஒதுக்கீடுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வழிவகைகளைப் பற்றி சிந்திக்கும்படி தனது செயலகங்களையும், இலாகாக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது; அந்த நடவடிக்கையும் நடந்துகொண்டிருக்கின்றது;

இந்தச் செயற்பாடுகள் இயங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, இங்கும் உலக நீதி மன்ற அடித்தள ஊழியர்களிடையேயும் ஓர் இயக்கம் தோன்றியுள்ளது; இது வரவேற்கப்படக்கூடியது, பெரிதும் மதிக்கப்படுகின்றது, மேலும், அவ்வித நடவடிக்கை உருவாகியுள்ளது மிகுந்த ஆரோக்கியமானதும்கூட. எனக்குத் தெரிந்த வரை இவ்வித ஒரு நடவடிக்கைத் தொன்றியுள்ளது இதுவே முதன் முறையென நான் நினைக்கின்றேன்.

இந்த விஷயத்தைப் பற்றி எப்படி உரையாற்றுவது என நான் நிறைய சிந்தித்தேன்; பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து சில வார்த்தைகளை குறிப்பிடுவது என நான் முடிவுசெய்துள்ளேன். அவ்வார்த்தைகள் எச்சரிக்கை விடுப்பவையாக உள்ளன:

“இறைவன்பால் அச்சங்கொள்ளுங்கள், மிதத்தன்மையின் எல்லைகளை மீறி, ஊதாரிகளோடு சேர்ந்தவர் என கணக்கிடப்படுவதிலிருந்து கவனமாக இருங்கள்.”
(பொறுக்குமணிகள், பக். 251)

அப்துல் -பஹாவிடமிருந்து:
“உதாரித்தனம் எப்போதும் கடுந்துன்பத்திற்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும். ஒரு தேவையை அல்லது கடமையை நிறைவுசெய்வதற்காகவே நாம் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உணவில் கூட, தேவைக்கு அதிகமாக ஒருவர் உண்பாரெனில், அது நிலைகுலைவுக்கும், உடல்நலக்குறைவுக்கும் வழிவகுத்து, நோய்களிலும், வியாதிகளிலும் முடியும்.”
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

மேலும், ஓர் உண்மையான ஆர்வலரின் பண்புகள் குறித்து கித்தாப்-இ-இஃகானில் பஹாவுல்லா கூறியவை குறித்து நீங்கள் பரிச்சயம் அடைந்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்று பின்வரும் பண்பு:

அவ்வார்வலர் சிறிதளவோடு திருப்தியுற்றும், மட்டுமீறிய ஆவல்களிலிருந்து விடுபட்டிருக்கவும் வேண்டும்.”
கித்தாப்-இ-இஃகான், பக். 193)

நமது புனிதவாசகங்களில் பொருளாதாரம் பற்றிய விஷயம் எவ்வாறு அனுகப்பட்டுள்ளது என்பதை இச்சில வாசகப்பகுதிகள் காண்பிக்கின்றன. இந்த இடத்திலாகட்டும் அல்லது உலகின் வேறு இடங்களிலும் சரி, அவற்றைப் படிக்கும்போது, அவற்றை நமது வாழ்க்கைமுறைகளோடு சில வேளைகளில் நாம் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.

“ஊதாரித்தனம்,” எனும் வார்த்தையை பஹாவுல்லா பயன்படுத்தியுள்ளார். “ஊதாரித்தனம்” என்பதன் அர்த்தம், “மிதம் மீறி செலவளித்தல்” என்பதாகும், மேலும், “தேவைக்கும் அதிகம்” என்பதும் ஆகும். அது ஒரு கோடியிலுள்ள நியையாகும். மறு கோடியில், “ஊதாரித்தனம்” என்பதன் எதிர்ப்பதம், “கஞ்சத்தனம்” அல்லது “கருமித்தனம்” என்பதாகும். அதுவும் நல்லதல்ல. ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையுள்ளது. ஒரு முறை, பஹாய் சமயம் என்பது நடுநிலையிலுள்ள ஒரு சமயமாகும் என ஷோகி எஃபெண்டி கூறியதாக ரூஹிய்யி ஃகானும் தெரிவித்துள்ளார்.

அவ்விரு கோடி நிலைகளுக்கும் இடையிலான நிலையை சிக்கனம் என வருணிக்கலாம். “சிக்கனம்,” என்பது “செலவுகள் குறித்து கவனமாக இருப்பது, மேலும், பணம் நமது பணமாக இருந்தாலும், சமயத்தின் நிதியாக இருந்தாலும், செலவுகள் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும்.

நாம் இன்று பகல் முழுவதும் இவ்விஷயங்கள் குறித்தே சிந்தித்தும், கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். “நாம் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளோம். இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மட்டுமே நான் பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டுமா,” என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது.

அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக்கொள்வதென்பது தனியாகவும், செயல்பாடு வாயிலாகவும் பெரும் ஆன்மீக மதிப்பினைக் கொண்டுள்ளதா? என் பனிவான கருத்து என்னவென்றால், நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, பணத்தைச் செலவு செய்வதன்பால் நாம் கொள்ளவேண்டிய மனப்பான்மை என்பது, தானாகவும், தனியதிகாரம் பொருந்தியதுமான ஒரு நற்பண்பாகும். அஃது இறைவனின் பார்வையில் தனிச்சிறப்புடையதாகும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ்வித மனப்பான்மையோடு அனுக்கமாகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது பஹாய் வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

உதாரணமாக, 1911ல் அப்து’ல்-பஹா பாரீசில் இருந்தபோது, அவர் பாரீசின் மிகவும் ஆடம்பரமான பகுதியில் ஒரு நேர்த்தியான அடுக்குமாடி விடுதி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். இந்த விடுதி இப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய ஆன்மீக சபையினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது:

அவ்வேளையில் அப்து’ல்-பஹா தம்மோடு வந்திருந்த அனைவரும் தம்முடைய காரியத்தைக் கண்டு சிறிது சஞ்சலமடைந்திருப்பதாக உணர்ந்தார். ஆகவே, அவர் தமது காரியத்திற்கு விளக்கமளிக்கவேண்டியிருந்தது. ஒன்றை நாம் உணர வேண்டும். பாரீஸ் நகரம் அப்போது பிரமுகர்கள் நிறைந்த ஓர் உலக நகரமாக விங்கியது. குறிப்பாக, கிழக்கிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஈரானிலிருந்தும் தொடர்ச்சியாகப் பிரமுகர்கள் ஒன்றுகூடும் இடமாக அது திகழ்ந்தது. சமயத்தின் நற்பெயரை நோக்கமாகக் கொண்டு, அவர், பிறர் கண்களுக்கு கௌரவமாகத் தென்படும் ஓரிடத்தை வாடகைக்கு அவர் அமர்த்த வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு விளக்கத்தைத்தான் அப்து’ல்-பஹா தமது குழுவிருக்கு வழங்கினார். அவர் பின்வருமாறு கூறினார்:

“செலவீட்டிற்கு வழிவகுக்கும் சம்பிரதாயமான செயல்களில் நான் ஈடுபடுவதை நீங்கள் கண்டீர்களென்றால், சமயத்திற்கு அது நன்மை பயக்கும், அதன் மரியாதை காப்பாற்றப்படும் எனும் ஒரே காரணத்திற்காகத்தான் என உணரவேண்டும். நான் பாக்தாத்திலும், ஏட்ரியாநோப்பிலிலும் இருந்தபோது, என் தலைப்பாகையும், என் துணிகளும் பல வருடங்கள் பழையனவாக இருந்தன. அவற்றின் பின்னல் வேலைகளெல்லாம் நைந்துபோயிருந்தன. கடனுக்குக்கூட புதியவற்றைப் பெறும் நிலையில் நான் அப்போது இல்லை. இப்போது, சில காரணங்களுக்காக அல்லாது இவ்விதமாக நான் செலவு செய்திருக்கமாட்டேன்; இந்நகரத்தில் ஆகத் தாழ்வானதும், விலை மலிவானதுமான விடுதியையே நான் வாடகைக்கு அமர்த்தியிருப்பேன்.
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

அப்து’ல்-பஹா இவ்விஷயத்தை அதிகம் விளக்க வேண்டியிருக்கவில்லை, ஏனெனில், அவருடன் இருந்த பாரசீக நண்பர்கள், அவர்மேல் பெரும் அன்பு வைத்திருந்தனர், அவரைப் பெரிதும் மதித்தனர், ஆகவே இறுதியில் பிரச்சினை எதுவுமே எழவில்லை.

ஆனால், அவர் தமது கோட்பாடு என்னவென்பதை விளக்க விரும்பினார். இப்போது, புனித நிலத்தில் உள்ள நினைவாலயங்களை நீங்கள் காணுகின்றீர்கள். அவற்றின் உள்ளும் புறமும் காணுகின்றீர்கள், அவற்றைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் நீங்கள் காணுகின்றீர்கள். என்ன கோட்பாட்டையொட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது?

வெளிப்படையாக பார்க்கும்போது அது பெரும் ஆடம்பரச் செலவாகத் தென்படும். நினைவாலயங்களிலும், நிலவடிவமைப்பு வேலைப்பாடுகளிலும், படிக்கட்டு வேலைகளிலும் பெரும் பொருள் வளத்திற்கு மேல் பொருள் வளத்தை நீங்கள் காணுகின்றீர்கள். இத்தோட்டங்கள், இவ்வுலகத்திலேயே அதிப்புனிதமான நினைவாலயங்களுக்கான சுற்றுச் சூழல்களாகும்.

ஷோகி எஃபெண்டி அவர்கள் விளக்கியது போல, இப்பூவுலகின் ஆன்மீக மையமாக இவ்விடம் விளங்குகின்றது. ஆகவே, இக்கட்டிடங்களும், தோட்டங்களும் உலக மையத்தில் வாழ்க்கை முறை இத்தகைய படாடோபம் மிக்கதாக இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு இல்லை. இது பாரீசில் அப்து’ல்-பஹா வாடகைக்கு அமர்த்திய அடுக்குமாடி விடுதியைப் போன்றது. இது சமயத்தின் நன்மதிப்பைக் காரணமாகக் கொண்டது. அவ்விரண்டையும் நாம் ஒன்றுகலக்க முடியாது.

அப்து’ல்-பஹா தமது தலைப்பாகை நைந்துபோயிருந்தது என்றார். நீங்கள் பழம்பொருள் காப்பகத்திற்குச் சென்றீர்களென்றால் ஷோகி எஃபெண்டி அவர்களின் துணிகளைப் பாருங்கள். அவை எவ்வளவு எளிமையானவை என்பதையும், எவ்வளவு நைந்துபோயுள்ளன என்பதையும் பாருங்கள்.

அவரை நண்பர்கள் காண வந்த போது அவர் அந்த பொருள்களைத் தான் அணிந்திருந்தார், அந்தக் காலனிகளைத்தான் பயன்படுத்தியிருந்தார். அவர் பொதுமக்களிடையே காட்சி தரவில்லையாதலால் அவர் அத்தகைய துணிகளை அனிந்திருந்தார்.

அங்கு நண்பர்களையெல்லாம் ஆட்கொண்டது, அவர் பிரகாசித்த மேன்மையும், அவருடைய புனிதத் தன்மையுமே, அவர் அணிந்திருந்த துணிகளல்ல. அவருக்காக எனப் பார்க்கும் போது அவர் பெரும் சிக்கனமாகவே வாழ்ந்தார், உணவும் உட்கொண்டார். அவ்விரு நிலைகளுக்கிடையிலும் பெரும் வேறுபாடு உண்டென்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக, உணவைப் பற்றிக் குறிப்பிடுகையில், பஹாவுல்லா கூறியருளிய வாக்கொன்று உள்ளது. அவர் கூறுவது என்னவென்றால்:

“உணவு ஒரே வகையாக இருக்குமானால், இறைவனின் பார்வையில் அது மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்”.
(கித்தாப்-இ-படீ – தற்காலிக மொழிபெயர்ப்பு)

இவை வெரும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடவில்லை; பஹாவுல்லா, அப்து’ல்-பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் இல்லங்களில் இவை செயல்படுத்தப்பட்டன. ஷோகி எஃபெண்டி அவர்களின் காலத்தில் நானும் இத்தகைய நாட்களைக் கண்டிருக்கின்றேன். ஒரே சமயலறைதான் இருந்தது. அச்சமயலறை ஷோகி எஃபெண்டி அவர்களின் இல்லத்திற்கு மட்டுமல்ல, உலக மையத்திற்கே அதுதான் சமயலறையாக விளங்கியது.

ஆனாலும், இப்போது இருப்பதுபோல், அப்போது உலக மையத்தில் 700 அல்லது 800 ஆட்கள் வேலை செய்யவில்லை. அது மிகவும் சிறிய மையமாக இருந்தது. ஆனால், வீடுகள் சிலரை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாஸ்டர் அவர்களின் வீட்டில் சுமார் 100 பேர்கள்தங்கியிருந்தனர்; அது சுமார் 200 பேர்களுக்காவது உணவு வழங்கவேண்டியிருந்தது. வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், என பலர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது. புனித யாத்ரீகர்களும் இருந்தனர்; அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் உலக மையத்தின் விருந்தினர்களாக இருந்தனர். உணவு ஒரு வகையாக மட்டுமே இருந்தது, ஷோகி எஃபெண்டி அவர்களுக்கும் உட்பட.

பழம்பொருள் காப்பகத்தில் ஷோகி எஃபெண்டி அவர்களின் பத்திரங்களும், தாள்களும் உள்ளன. அவர் கணக்குகள் வைத்திருந்தார்; அவர் தமக்கென பற்று வரவு கணக்குப்புத்தகம் வைத்திருந்தார்; ஒவ்வொரு புனித இடத்திற்கும் அவர் கணக்குகள் வைத்திருந்தார்; ஒவ்வொரு திட்டத்திற்கும் அவர் கணக்குகள் எழுதி வைத்திருந்தார். அவர் தமது கைகளாலேயே எழுதப்பட்ட கணக்குகளை வைத்திருந்தார். அவற்றை நாம் பழம்பொருள் காப்பகத்தில் காணலாம்.

உதாரணமா, “பிச்சைக்காரனுக்கு அறை பியாஸ்தர் கொடுக்கப்பட்டது,” என படிக்கலாம். அறை பியாஸ்தர் என்பது அறைக்காசு கூட பெறாது! “பற்பசைக்கு 15 பியாஸ்தர்கள்” எனப் படிக்கலாம். ஷோகி எஃபெண்டி அவ்வாறுதான் கணக்கு வைத்திருந்தார். அவர் நினைவாலயங்களின் காப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிதவை நிதி ஒன்றை கொடுத்திருந்தார். அஃது அக்காலத்து அமெரிக்க வெள்ளிகள் இரண்டுக்குச் சமமானது. அவ்வளவுதான். செலவீடுகள் இரண்டு வெள்ளிக்கும் அதிகமானால், பிரச்சினை அவரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்தான் முடிவு செய்வார்.

அவர் தமது வசந்தகாலத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு வைத்திருந்தார். அதை அவர் தமது பயணங்களுக்கு முன்பாகவே, உதாரணமாக சுவிட்சர்லாந்துக்குப் போகுமுன், ஒதுக்கி வைத்திருப்பார்; அவர் தமது நிதியொதுக்கீட்டை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார். அவரைக்கான விருந்தினர்கள் வருவார்கள்; உதாரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரைக்கான வருவார்கள்.

விருந்தோம்புபவர் அவரே; அவரே அவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்; அவை யாவும் அவருடைய நிதியொதுக்கீட்டுக்கு உட்பட்டே இருக்கும். அவரோடு எப்போதும் இருந்த ரூஹிய்யா ஃகானும், இவ்விதமான மேற்படி செலவுகளால் அவருடைய நிதியொதுக்கீடு குறைந்துகொண்டே போயிற்றாம். ஆகவே, அவர் குறைவாகவே உண்பார், உடன் ஃகானும் அவர்களும் அதில் பங்குகொள்வார். இத்தகையவையே ஷோகி எஃபெண்டி அவர்களின் செயல்முறைக்கொள்கைகள், அவ்வாறுதான் அவர் உலக மையத்தையும் நடத்தி வந்தார்.

தேசிய ஆன்மீக சபைகளுடனான அவருடைய உறவுகளில், இவை போன்றுதான் அவர் கூறக்கூடியவைகளும் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய ஆன்மீக சபை ஒன்றுக்கு அவருடைய சார்பாக அவருடைய செயலாளர் எழுதிய கடிதத்தில்:

அவர்… உங்களுடைய ஆன்மீக சபை தனது செலவீடுகளை… கவனமாக கண்கானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்… விவேகமான சிக்கனத்தின் வாயிலாக மட்டும், தேவையற்றவற்றை நீக்குவதன் வாயிலாகவும், தேவையானவற்றின்பால் கவனம் செலுத்துவதன் மூலமும், மிகவும் விழிப்புடனான கண்காணிப்பின் வாயிலாகவுமே உலக மையத்தில் நினைவாலயத்தையும், அனைத்துலக பழம்பொருள் காப்பகத்தையும் கட்டி, புனித நிலங்களைச் சுற்றிலும் மிகவும் படாடோபமான தோட்டங்களோ எனத் தோன்றும், ஆனால் உண்மையில் தீவிரமும், சிக்கனமும் மிகுந்த திட்டமிடுதலின் பயனான பூங்காக்களை உருவாக்கவும் பாதுகாவலரினால் முடிந்தது. இது பஹாய்களுக்கு மிகவும் அனுகூலமான ஓர் உதாரணமாக இருக்கும்… எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமும், நுண்ணறிவுமிக்க கண்கானிப்பும் நிறைந்த நடவடிக்கைகளை அவர்கள் காண்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு… அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
(மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க தேசிய ஆன்மீக சபைக்கு, 8 ஆகஸ்ட் 1957)

இவ்விதமான ஆலோசனைகளையே அவர் தேசிய ஆன்மீக சபைகளுக்கு வழங்கிவந்தார்.
உலக மயைத்திலுள்ள நாம் உலகம் உழுவதிலுமுள்ள மற்ற பஹாய்களோடு தொடர்புகொண்டுள்ளோம். நாம் இங்கு தன்னந்தனியாக இல்லை. 100 – 500 புனிதயாத்ரீகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். மூன்று நாள் யாத்ரீகர்கள் வருடம் முழுவதும் வந்து போகின்றார்கள். அவர்கள் நம்மைக் காண்கின்றார்கள். அவர்களை நாம் நமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம். அவர்களுக்கு நாம் விருந்தோம்பல் வழங்குகின்றோம். அவர்களுடைய மனதில் நாம் என்னவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றோம், அவர்கள் அந்த எண்ணங்களைத்தான் தங்களோடு தங்களுடைய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவர்கள் இங்கிருக்கும் போது தங்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்: வீடுகள் எப்படியிருந்தன, உணவு எப்படியிருந்தது, எத்தனை வகையான உணவு பரிமாறப்பட்டது போன்றவை. நாம் சிக்கனமாக இருந்தோமானால், நாம் சிக்கனமாக இருப்பது தெரியவரும், பஹாய் உலகமும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும். நமது நடத்தை, போக்கு ஆகியவற்றின் மூலமாக பல்வேறு சமூகங்களின்பால் நாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சிறப்பான நிலையை நாம் இங்கு பெற்றிருக்கின்றோம்.

உலக மையத்தை ஷோகி எஃபெண்டி நிர்வகித்த பாங்கையும், அவருடைய வாழ்க்கை முறையையும், அவர் கடைப்பிடித்து வந்த மூன்று பரந்த செயல்முறைக் கொள்கைகளின் வாயிலாக வரையறுக்கலாம். ஒன்று, உலக மையத்தின் எல்லா வரவுசெலவுகளையும் மிகுந்த கவனத்துடன் கண்கானித்தது. அடுத்தது நினைவாலயங்கள் குறித்தது.

அவர், சமயத்தின் கௌரவத்தின் காரணமாக நினைவாலயங்களை பெரும் வள்ளன்மையுடனும், பெருந்தன்மையுடனும், தாரளத்துடனும் நிர்வகித்து வந்தார். மூன்றாவது, அவருடைய தனிப்ப்டட வாழ்க்கை, அவரோடு அனுக்கமாக இருந்தோர் ஆகிவற்றைப் பொருத்த வரையில், அவர் கண்டிப்பு, கடுமை ஆகியவை கூடிய சிக்கனத்தையே கடைப்பிடித்தார். அவ்விஷயத்தில் அவர் செலவீடுகள் குறித்து விழிப்போடும், எல்லா சூழ்நிலைகளிலும் சிக்கனத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

மீண்டும், ரூஹிய்யா ஃகானும் அம்மையார் கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. பாதுகாவலர் அவர்கள் நினைவாலயங்களுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக லண்டன் நகரின் கடைகளுக்குச் செல்லும் போது, தாம் விரும்பும், தமக்குத் தேவைப்படும் பொருட்களைக் காண்பார், அவை அதிக விலை மிக்கதாக இருக்கும். அஃது அவருக்குத் தேவைப்பட்டதென்றாலும் அவர் அதை வாங்க மாட்டார். அவர் கடைக்காரரிடம் தாம் விதிக்கும் விலையைக் கூறுவார்; அஃது ஏற்கப்ட்டதென்றால் ஏற்கப்பட்டது, இல்லையெனில் அஃது ஏற்கப்படவில்லை. அவருக்கென ஒரு கோட்பாடு இருந்தது, அவர் அக்கோட்ப்பாட்டைப் பற்றியே செயல்பட்டு வந்தார்.

தெய்வச் சமயத் திருக்கரம் திரு பல்யுஸி அவர்கள், அப்துல் பஹா குறித்த ஒரு கதையைச் சொன்னார். திரு பல்யுஸியின் தந்தை மாஸ்டர் அவர்களோடும், மற்றும் சில பஹாய்களோடும் லண்டனில் இருந்ததாகவும், அவ்வேளை அவர் ஹேரட்ஸ் எனப்படும் டிபார்ட்மண்ட் ஸ்டோருக்குச் சென்றதாகவும் கூறினார். இந்த ஹேரட்ஸ் என்பது மிகவும் பெரிய விற்பனைக்களமாகும்; பல மாடிகள் கொண்ட இதில் தேவைப்படும் எந்தப் பொருளையும் நாம் வாங்கலாம். மாஸ்டர் அங்கு எதையோ வாங்கச் சென்றார். விலையை விசாரித்தார், அது மிகவும் அதிகமாக இருந்தது.

அதற்கு அவர், “நான் இவ்வளவிற்குதான் அதை வாங்க இயலும்,” என தமது விலையைக் குறிப்பிட்டார். ஆனால், ஹேரட்ஸ் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் பேரமெல்லாம் பேச முடியாது. ஆனால், அப்து’ல்-பஹா தாமே விலையை நிர்ணயித்தார். விற்பணைப் பணிப்பெண், “மன்னிக்கவும், நான் அவ்வாறு உங்களுக்கு விற்க இயலாது,” என்றாள். ஆனால், மாஸ்டர் அவர்களின் இயல் தோற்றத்தையும், போக்கையும் கண்ட அப்பெண், அவர் அப்பால் திரும்பியவுடன், நிர்வாகியிடம் ஓடிச்சென்று நடந்தவற்றைக் கூறினாள். நிர்வாகியும் உடனடியாக வெளியே வந்து, வெளியேறிக்கொண்டிருந்த மாஸ்டர் அவர்களைப் பார்த்து, “தயவு செய்து திரும்பி வாருங்கள்; நீங்கள் கேட்ட விலைக்கே நாங்கள் அப்பொருளை விற்கின்றோம்,” என்றார். ஆக, செலவு செய்வதில் நமது சமயத்தின் தலைவர்கள் அனைவருமே பெரும் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் காண்கின்றோம்.

இப்போது, சில இறுதி வார்த்தைகள். ஆடம்பரச் செலவு என்பது நல்லதன்றென்பது நமக்குத் தெரியும், இருந்தும் நம்மையறியாமலேயே நாம் சில வேளைகளில் இவ்விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர்களாக தேவையற்ற செலவுகளை மேற்கொள்கின்றோம். இஃது ஒரு வேளை மனித இயற்கையோ என்னவோ. இதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயன்றுள்ளேன். பெஞ்சமின் ஃபிராங்லின் என்பவரின் பிரபலமான கூற்றாகிய, “நேரம் பணத்திற்குச் சமம்,” என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். “சரி, நான் இப்போது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என எனக்கு நானே கூறிக்கொண்டேன். அப்போது நேரத்தைப் பற்றி பஹாவுல்லா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன:
“மூச்சுக் காற்று ஒன்றைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மறைந்தோடிக்கொண்டிருக்கின்றன… இறைவனை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்… சோம்பலிலும், சுறுசுறுப்பின்மையிலும் உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.”
(கித்தாப்-இ-அக்டாஸ், பாரா. 40 #33)

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நமக்கு ஆலோசனை வழங்கும் நமது சமய ஸ்தாபகரின் குரல் இது. சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலே ஆகும். நானும் அவருடைய நம்பிக்கையாளர்களில் ஒருவர். பஹாவுல்லா, நான் சோம்பலாக இருக்கக்கூடாது எனவும், நேரத்தை வீனாக்கக்கூடாது எனவும் கூறுகின்றார், ஆனால், நான் என்னுடைய 24 மணி நேரத்தைக் ஆய்வு செய்யும் போது, “ஆஹா!” நிமிடங்கள் அல்ல, மாறாக பல மணி நேரங்களைக் கூட ஒன்றும் செய்யாமல் நான் வீணாக்கியுள்ளேன்!

“பெரும் கலைப்பினாலோ, சோம்பலினாலோ நான் ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றேன்.” எனக்கு நானே கூறிக்கொள்ளும் சமாதானம் இது. நாம் பெஞ்சமின் ஃபிராங்க்லின் வார்த்தைகளோடு ஒத்துப்போனால், “நேரம் பணத்திற்குச் சமம்,” என நினைத்தால், நாம் நேரத்தை எவ்வாறு செலவளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நேரம் பணத்திற்குச் சமமென்றால் வீனான நேரங்களை நாம் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சுலபத்தில் சோம்பலில் ஆழ்ந்துவிடுகின்றோம். நாம் செய்வன குறித்து நாம் உணர்வற்று இருக்கின்றோம். துரதிர்ஷ்ட வசமாக இதுவே மனித இயல்பாக உள்ளது.

மற்ற நேரங்களில், பஹாய் நிதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் செயலைச் சாறாத ஒன்றை உலக மைய ஊழியர் ஒருவர் செய்கின்றார் என வைத்துக்கொள்வோம்; பிறகு அதே போன்ற ஒரு செயலை மற்ற ஓர் ஊழியரும் செய்கின்றார். சாதாரணமாக, அக்காரியத்தை இரு நபர்கள் செய்ததனால், அதைப் பொதுவான ஒரு கருத்தாக்கி, பலர் அவ்விதமாக செயல்படுகின்ற காரணத்தினால், எல்லாரும் அவ்விதமாகவே செயல்படுகின்றனர் என நாம் கற்பனை செய்யக்கூடும்.

அதனால்: “உலக மையத்தில் இதுவே நடைமுறை போலிருக்கின்றது,” என நாம் முடிவு செய்யலாம். “நாம் ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போன்றுதான் நாமும் செயல்படவேண்டும். உலக மையத்தில் இதுதான் முறை,” ஆனால், அதே வேளை அவ்வாறு நடந்துகொள்ளாத ஒருவரோ, இருவரோ, அல்லது ஐந்து அல்லது பத்து தனிநபர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் கண்டுணரக்கூடாதா? அஃது அவர்களுடைய பிரச்சினை. ஒரு மனிதனின் நம்பிக்கை அம்மனிதனாலன்றி வேறு யாராலும் முடிவு செய்யப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்

அதே போன்று, ஒரு மனிதனின் செயல்கள், மற்றவர்களின் செயல்கள் அல்லது துர்செயல்களின் அடிப்படையில் நிலைப்படுத்தப்படக்கூடாது. இறைவனின் முன்னிலையில் நானே பொறுப்பாளியாவேன். மற்றவர்கள் செய்யக்கூடியன அல்லது செய்யாமலிருப்பனவற்றுக்கு நான் பொறுப்பாளியல்ல. எனக்கு நானே பொறுப்பாளியாவேன்; நான்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்; சரியானவையோ, தவறானவையோ, மற்றவர்கள் செய்யும் காரியங்கள், தெளிவாகவே, என் பிரச்சனைகள் அல்ல! நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம், ஆனால், அவர்களை நான் பின்பற்றக்கூடாது.

பாரசீகத்தில் “ஹம் சிஸ்மி”, என பாரசீகர்களால் அழைக்கப்படும் ஒரு மனப்போக்கு உள்ளது. அது, ஏறத்தாழ போட்டி மனப்பான்மையைக் குறிக்கும், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மேலும் நன்கு செய்யவேண்டும் எனும் மனப்போக்கையும் அது குறிக்கும். இம்மனப்பான்மையை பின்வருமாறு விளக்கப்படுத்தலாம்: “அந்த மனிதர் அதை செய்கின்றார், நானும் அதையே ஏன் செய்யக்கூடாது? நான் அவரைவிட ஒன்றும் குறைந்தவனல்லவே.” அல்லது, “அவள் அதைச் செய்கின்றாள், நானும் அதையே செய்யவேண்டும்.”

அஃது ஒரு விதமான பொறாமையாகும், அல்லது போட்டியாகும். இது ஆரோக்கியமானதல்ல, மிக மிக ஆரோக்கியமற்றதாகும்; இது துராசை; இத்தகைய ஆசைகளை பஹாவுல்லா கண்டித்துள்ளார். உங்களுக்குப் பழக்கமானவையான வார்த்தைகளை உங்களுக்கு இப்போது படித்துக்காண்பிக்க விரும்புகின்றேன்: “எல்லாப் பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக”. (பாரசீக மொழி தெரிந்த அன்பர்களுக்கு: பஹாவுல்லா இங்கு உபயோகிக்கும் வார்த்தை “ஃகணா’அத்”, எனனும் வார்த்தையாகும்; பாதுகாவலர் மறைமொழி நூலில் அதை “மனநிறைவு” என மொழிபெயர்த்துள்ளார்). நான் மீண்டு அதை கூறுகின்றேன்:
“எல்லா பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக, ஏனெனில் பேரிச்சைகொண்டோர் என்றென்றும் இல்லாதவர்களாகவும், மனநிறைவெய்தியோர் நேசிக்கவும், போற்றப்பட்டும் உள்ளனர்.” (பாரசீக மறைமொழிகள், #50)

இறுதியாக, ஒன்றே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இங்கு நிற்கும் மேடையை ஓர் உதாரணமாகக் கொள்ள விரும்புகின்றேன். இதன் ஒரு மூலை படாடோபமெனவும், மறு மூலை கஞ்சத்தனம் எனவும் எடுத்துக்கொள்வோம். அந்த இரண்டு குணங்களும் ப‎ஹாவுல்லாவால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நடுவில் ஒன்று உள்ளது; அதுதான் சிக்கனம். ஆக, இதுவே நாம் இருக்க வேண்டிய நிலையாகும். ஆனால், எத்தனை முறை ப‎ஹாய்கள் நடுப்பாகத்திலிருந்து ஓரங்களான படாடோப நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மூலை புயலைப் போன்றது, அதன் மறு மூலை பஞ்ச நிலையைப் போன்றது! நடுவில் விழுவதே தூரல். அவர் நாம்னைவரும் நடுவில் இருக்க வேண்டுமென கூறுகின்றார்; கூடக்குறைய ஐந்து விழுக்காடு அங்கும் இங்கும் இருக்கலாம். பாதுகாவலர் ரூஹிய்யா ஃகானும் அவர்களுக்கு கூறியது போல, “பஹாய் சமயம் நடுநிலை சமயமாகும்”.

மோனா மஹ்முட்நிஸாட்


மோனா

பெண்கள் தங்கள் ஆன்மீக சுய உரிமைகளின்பால் விழிப்புணர்வு பெறுவதற்காகப் போராடி இறுதியில் தமது சமய நம்பிக்கைக்காக உயிரையே தியாகம் செய்தவராக தாஹிரி அம்மையார் விளங்குகிறார். இவரது வழியில் மேலும் பல பெண்கள் தங்களது சமய நம்பிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்தும் சமய சேவையில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்தும் உள்ளதை பஹாய் சமய சரித்திரம் விவரிக்கின்றது. ஆணைப்போல் வேடமிட்டு ஆண்களுக்கு நிகராக நைரிஸ் கொந்தளிப்பின் போது போராடிய ஸைனாப், அப்துல் பஹா காலமான பிறகு அச்செய்தி கேட்டு தாங்கொன்னா துயரில் துவண்டு போன பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி சுமார் இரண்டு வருட காலம் ஓய்வெடுக்க சுவிட்சர்லாந்து சென்ற போது பஹாய் உலக சமயத்தை வழிநடத்திய அதிப் புனித இலையான பாஹிய்யா காஃனும், முன்னனி போதகர் என பாதுகாவலரால் பெயரிடப்பட்ட மார்த்தா ரூட் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுக்கு நிகராக பெண்குலத்தின் மணிகள் போன்று பலர் தோன்றி மறைந்துள்ளனர். இவர்களில் ஒருவராக பதினாறே வயதில் தமது சமய நம்பிக்கைக்காக சிறை சென்று தமது உயிரையும் தியாகம் செய்த மோனா திகழ்கின்றார். அவரது கதையே இது.

மோனாவின் தந்தையான யாடுல்லா மஹ்மூட்நிஸாட் ஈரான் நாட்டில் பிறந்து ஏமன் நாட்டிற்கு பஹாய் போதகராக சென்றவர். அங்குதான் மோனாவும் அவரது சகோதரியான தராணிஃயும் பிறந்தார்கள். அரசியல் காரணங்களினால் மஹ்மூட்நிஸாட் குடும்பத்தினர் ஈரான் நாட்டிற்கே மீண்டும் திரும்ப நேர்ந்தது. ஷிராஸ் நகரில் அவர்கள் வாழத்தொடங்கினர். அந்நகரின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை அங்கத்தினராக மட்டுமின்றி அதன் செயலாளராகவும் மஹ்மூட்நிஸாட் இருந்தார். அதோடு துனைவாரிய உறுப்பினரின் உதவியாளராகவும் அவர் சேவையாற்றினார். சிறு வயதிலிருந்தே மோனா தன் தந்தையோடு பல சமயப் பணிகளில் ஈடுபட்டார். 1980-களில் சமயத்திற்கு எதிர்ப்பு வந்த போதும் இச்சேவை தளரவில்லை. அப்போதேல்லாம் மோனா மேலும் உறுதியுடன் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கத்துடன் இளம் மோனா ஒரு பஹாய் ஆக இருப்பதன் பொறுப்புகளை உணரவேண்டும் என மோனாவின் தந்தை கூறுவார்.

மோனாவின் தந்தை செல்வம் படைத்தவர் அல்ல. ஷிராஸ் நகரில் ஒரு சிறிய வீட்டிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே மோனா கல்வியில் மிகுந்த நாட்டமுடையவளாக இருந்தாள். சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமும், சித்திரம் வரைதல், கைவேளைப்பாடு , தையல், பூவேளைப்பாடு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டும் இருந்தாள். வயதுக்கு மீறிய சமய நம்பிக்கையும் மனமுதிர்ச்சி கொண்டவளாகவும் இருந்தாள். 15 வயதில் மோனாவின் வீட்டில் முதியோருக்கென நடத்தப்பட்ட சமய வகுப்புகளில் பதின்ம வயதினளான மோனாவே அதிக நாட்டம் காட்டினாள். அங்கு படிக்கப்பட்ட புனித வாசகங்கள் அனைத்தையும் மனனம் செய்ததோடு அந்த வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்ள சிறு வயதினளான மோனா கெஞ்சி அனுமதியும் வாங்கினாள். 1980-களில் நடந்த கலவரங்களில் பஹாய்கள் அனுபவித்த கொடுமைகளும், புனித பாப் அவர்களின் இல்லம் இடிக்கப்பட்டதும் மோனாவின் சமயநம்பிக்கையை தகர்க்காமல் பலப்படுத்தவே செய்தன.

குழந்தைகளின் ஆசிரியராக பாலர் வகுப்புகளை நடத்தவாரம்பித்த மோனா அவ்வகுப்புகளில் மனனம் செய்யப்பட வேண்டிய புனிதவாசகங்களையும் பிரார்த்தனைகளையும் தானாகவே தேர்ந்தெடுத்து தொகுத்து குழந்தைகளை மனனம் செய்யச் செய்தாள். பஹாய் புத்தகங்கள் ஒரு காலத்தில் கைக்கு எட்டாமல் போகும், அப்போது படிக்கவேண்டிய அனைத்தும் குழந்தைகளின் மனதிலேயே இருக்குமல்லவா!

1980 கலவரங்களின் உச்சகட்டத்தில் பாப் அவர்களின் புனித இல்லம் இடிக்கப்பட்ட அன்று அந்த இல்லம் இருந்த இடத்திற்கு மோனா ஒரு புனித யாத்திரை மேற்கொண்டாள். வீடு திரும்பிய போது உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று அவள் தன் தாயை கூவி அழைத்து, “அம்மா இன்று நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் நுழையலாமா?” என வினவினாள். ” ஏன் இன்று மட்டும் புதுமையாக காலனிகளோடு வீட்டிற்குள் வரவேண்டும்?” என தன் தாய் கேட்டபோது, “அவை புனித பாப் அவர்களின் இல்ல இடிபாடுகளிற்கிடையே நடந்து வந்துள்ளன.” “அந்த புனிதத் தூசு என் காலனிகளில் ஒட்டியுள்ளன,” என்றாள். அவளைப் பார்க்கையில் ஒரு வயது முதிர்ந்த மனோபாவமும் மனப்பக்குவமும் கொண்டவளாகவே விளங்கினாள். கவர்ச்சியும், மரியாதையும், அதே வேளையில் ஒரு குழந்தையின் இனிய சுபாவம், வெகுளித்தன்மை மற்றும் தூய்மையும் அவளுடையதாக இருந்தன. உயர்ந்த மெலிந்த தேகமும், நீண்ட செம்மையான கூந்தலும், பசுமை நிறக் கண்களும் கொண்டவள் மோனா. எப்போதும் முகத்தில் ஒரு அழகான புன்னகை மிதந்து கொண்டே இருக்கும். பள்ளியில் மிகவும் பிரபலமானவளாகவே இருந்தாள்.

பஹாய்கள் பரவலாக சிறை செய்யப்பட்ட நாட்களில் தானும் சிறை செய்யப்பட்டதை மோனா தன் வாயாலேயே விவரிக்கின்றாள்:

1982 அக்டோபர் 23 அன்று சாயங்காலம் 7.30-க்கு நான் என் பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. என் தந்தை கதவைத் திறந்தார். அப்போது ஆயுதம் ஏந்திய 4 காவலர்கள் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை என் தந்தை தாம் யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டினார். அதற்கு அவர்கள் “நாங்கள் ஷிராஸ் நகர புரட்சி நீதிமன்றத்தின் காவலர். உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும், அதற்கு எங்களுக்கு அனுமதியும் உண்டு,” என்றனர். அவ்வனுமதியைப் பார்க்கவேண்டும் என என் தந்தை அமைதியாகக் கேண்டுக் கொண்டார். ஒரு காகிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு என் தந்தை அவர்களை வீட்டிற்குள் வர அனுமதித்தார். பல மணி நேரங்கள் வீட்டைச் சொதனையிட்ட பின் சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டனர். அப்படங்கள் உயிரோடும், மரணம் அடைந்தும் இருந்த சில பஹாய் அன்பர்களுடையது. அந்தப்படங்கள் யாருடையது என கேட்டபின், “உங்கள் சமயம் எது,” என என்னை கேட்டனர். “பஹாய் சமயம்,” என நானும் பதிலுரைத்தேன். என் தந்தையின் பஹாய் கடிதப்போக்குவரத்துகள் சிலவற்றையும், படங்கள் மற்றும் நூல்கள் சிலவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு, என் தந்தையும் நானும் அவர்களோடு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவித்தனர். அதற்கு என் தாய், என் கனவரை அழைத்துச் செல்லுங்கள் ஆனால் இந்த இருட்டு வேளையில் இச்சிறுமியை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கொந்தளிப்புடன் கேட்டார். அதற்கு அவர்கள், “சிறுமி அல்ல, பஹாய் ஆசிரியை,” என்றனர். “இவள் எழுதியவற்றைப் பார்க்கும் போது இவள் வருங்காலத்தில் மிகவும் ஆக்கம் நிறைந்த ஒரு பஹாய் போதகியாக விளங்குவாள்,” எனக் கூறினர். என் தந்தை என் தாயாரைப் பார்த்து, பயப்படவேண்டாம் என ஆறுதல் கூறி, இது நிச்சயமாக இறைவனின் விதி, இச்சகோதரர்கள் மோனாவை தம் சகோதரியைப் போல் நிச்சயமாக நடத்துவர் என்றார்.

வேறு வழியின்றி நான் என் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு என் தந்தையோடு காவலர்களின் பின் சென்றேன். சிறையை அடைந்தவுடன் அதன் வாசலில் எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பிறகு சிறையின் ஓர் அரைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சில காவலர்கள் உறக்கக் கத்தி என் சமயத்தை இழிவுபடுத்தியதோடு மேலும் வேறு எதற்கோ என்னை நோக்கி கத்தினார்கள். என் தந்தையிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு ஒரு பெண் காவலரால் உடற் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். மறுபடியும் என் கண்கள் கட்டப்பட்டு கைதிகளுக்கான ஒரு பொது அறையில் கண்கட்டு அவிழ்க்கப்பட்டு விடப்பட்டேன்.

சிறிது நேரம் என்னால் எதையும் அந்த இருட்டில் பார்க்கமுடியவில்லை. ஒரு கைதி அப்போது என்னை நோக்கி வந்து நான் படுப்பதற்கு ஓர் இடத்தை சுட்டிக் காட்டி, நீ ஏன் இங்கு வந்தாய் என வினவினார். அதற்கு நானும், நான் ஒரு பஹாய், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றேன். அக்கைதி பிறகு இரு அழுக்கான போர்வைகளைக் கொடுத்தார். சிறிது நேரம் சென்ற பின் என்னால் அந்த இடத்தை நன்கு பார்க்க முடிந்தது. அது ஒரு பெரிய அறை. வயதான பெண்களும் இளம் வயதினருமாக பலர் அங்கு படுத்திருந்தனர். அங்கு வந்த முதல் பஹாய் நானாகையால் வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. என் தந்தை எங்கு இருக்கின்றார் எனவும் தெரியவில்லை. அமைதியாக அந்தப் பென்மனி சுட்டிக்காட்டிய மூலையில் படுத்துக்கொண்டு, இறைவனுக்கு நன்றி நவிழும் பிரார்த்தனை ஒன்றை கூறினேன். அப்பொழுது, நான் ஒரு பலகனியில் நின்று கொண்டு நிலவை நோக்கிச் செல்வதைப் போல் உணர்ந்தேன். ஆனால் என் தாயாரின் கவலை தோய்ந்த முகமே அப்போது என் கண்முன் தோன்றியது. என் தாய் தந்தையர் இருவரும் உறுதியுடன் இருக்க பிரார்த்தனை ஒன்றைக் கூறிவிட்டு நாளை என்ன காத்திருக்கிறதோ என நினைத்து படுக்கச் சென்றேன்.

படுக்கையில் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்த போது கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்மனி உள்ளே நுழைந்தார். அவர் ஒரு பஹாய் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர் திருமதி ஈரான் அவாரிகான் என பிறகு அறிந்தேன் சிறிது நேரம் கழித்து சிறைக் கதவு மீண்டும் திறந்து மேலும் ஒரு பெண்மனி நுழைந்தார். “அவர் என் ஒற்றைத்தலைவலி மாத்திரைகளைக் கொடுங்கள். அவை இல்லாமல் என்னால் இருக்க முடியாது”, என்று கதறினார். ஆனால் காவலர் யாரும் அவரை சட்டை செய்யவில்லை. அவர் பெயர் திருமதி ஸாயர்ப்பூர். அவர் நாங்கள் படுத்திருந்த மூலைக்கு வந்தார். அங்கு படுத்திருந்து திருமதி ஈரானைப் பார்த்தவுடன் அவர் திருமதி ஈரானை கண்டுகொண்டு உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். குரல்கள் பழக்கமானவையாக இருக்கின்றனவே என நான் அவர்கள் அருகில் சென்றேன். அவர்கள் இருவரும், “மோனா, நீயா? நீ ஏன் இங்கு வந்தாய் உன்னையுமா இவர்கள் கைது செய்துவிட்டனர்?” என அதிர்ச்சியுடன் கேட்டனர்.

அவ்வேளை என்னுள் ஒரு சாந்த உணர்வு உண்டாகக் கண்டேன். என் தாயாரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டாலும் சிறையில் எனக்கு பல தாய்மார்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டேன்.

அன்று இரவு சுமார் 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு, அதில் பெண்கள் அனைவரும் மோனா இருந்த அறைக்கு கொண்டு வரப்படுவர் என அறிந்தவுடன் மோனா வருவோர் அனைவருக்கும் ஒரு சுகமான சூழ்நிலையை உருவாக்க முடிவெடுத்தாள். அங்கிருந்த அனைவரிலும் மோனாவே மிகவும் வயது குறைந்தவள். அந்த அறையில் பிற மதத்தைச்சார்ந்தவர்கள், போதை பித்தர்கள் கொலைகாரர்கள் உட்பட அனைவருக்கும் மோனா செல்லமானவளாக விளங்கினாள். அவர்கள் மோனாவை “குட்டிக் கைதி” என அழைத்தனர்.

“சேப்பா” எனப்படும் வேறொரு சிறைச்சாலைக்கே நாங்கள் விசாரனைக்காக பெரும்பாலும் கொண்டுசெல்லப்படுவோம். அப்போது என்னை விராரணை செய்த அரசாங்க வழங்கறிஞர் என்னை இழிவாகப் பேசி, “உன் தாய் தந்தையர் உன்னை வழி தவரச் செய்து உன்னை பஹாய் சமயத்தில் இனைத்துவிட்டனர்,” என்று கூறினார். அதற்கு நான், “என் பெற்றோர் என்னை வழி தவரச் செய்யவில்லை. நான் ஒரு பஹாய் குடும்பத்தில் பிறந்தது உண்மைதான் ஆனால் நான் என் சுய விருப்பத்தின் பேரிலேயே இச்சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். பிறரைப் பற்றி ஒருவர் பஹாய் ஆவதில்லை ஆனால், சுயமாக உண்மையை ஆராய்ந்த பிறகே பஹாய் ஆகிறார். உங்களிடம் பல பஹாய் புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாமே,” என பதிலளித்தேன். “என் பெற்றோர் என்னை பஹாய் ஆகச்சொல்லி எப்போதுமே வற்புறுத்தியதில்லை,” என்றேன். குறுக்குவிசாரனை செய்தவர் பிரமித்துப்போனவராய், “இளம் பெண்ணே, உன் சமயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்,” என வினவினார். நான், “இந்த சிறையில் இருப்பதே என் சமயம் எனக்குத் தந்துள்ள உறுதியை புலப்படுத்துகிறதல்லாவா,” என்றேன். “பள்ளிச் செல்லும் நான் இந்த பயங்கர சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது உங்கள் முன் நிறுத்தப்பட்டும் உள்ளேன். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் சக்தியும் மனவுறுதியும் எங்கிருந்து வந்ததென்று நினைக்கிறீர்?” பிறகு அவர் என்னை ஒரு பிரார்த்தனை செய்யுமாறு பணித்தார்.

நான் “இறைவா என் ஆன்மாவைப் புத்துணர்வுபெறச் செய்து …” எனும் பிரார்த்தனையை அமைதியாகவும் மரியாதையுடனும் கூறினேன். இடையிலேயே என்னை நிறுத்தச்சொல்லி அவர் சிறிது நேரம் மௌனமாக நின்றார். அவர் அப்பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டாலும் தவறான அவரது முன்னபிப்பிராயங்கள் அவர் கண்களை மறைத்துவிட்டிருந்தது. பிறகு அவர், “நீ ஏன் பிரார்த்தனையை ஓதவில்லை?” என்றார். “உன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல ஒலிநாடாக்களில் உன் அழகான குரல்வளம் காணக்கிடக்கிறது. ஒலி நாடாக்கள் வழி உன் அழகான குரல் வளத்தினால் நீ பல இளைஞர்களை வழி தவரச்செய்திருக்கின்றாய். இதிலிருந்தே உன் குற்றம் புலப்படுகிறது.” அதற்கு நான், “பிரார்த்னை ஓதுவது ஒரு குற்றமா,” எனக் கேட்டேன். அதற்கு அவர், “தற்போதைய சமயத்தில் நீ என்ன குறை கண்டாய்,” என்றார். அதற்கு நான், “நான் எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் காலத்துக்குக் காலம் அவை வேறுபடுகின்றன. இக்காலத்திற்கென்று பஹாவுல்லா வந்துள்ளார்,” என்றேன். அதற்கு அவர் “நீ இந்நாட்டு சமயத்தை பின்பற்றவேண்டும் அல்லது மரணத்தைத் தழுவேண்டும்,” என்றார். அதற்கு நான், “மரண தண்டனை கட்டளையை முத்தமிட்டு வரவேற்கிறேன்,” என்றேன்.

கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் தன் கணவனும் மகளும் என்னவானார்கள் எனத் தெரியாமல் மோனாவின் தாய் தவித்துக்கொண்டிருந்தார். எத்தனை முறை அவர்களைக் காண சேப்பா சிறைக்குச் சென்று அவர்களைக் காணமுடியாமல் வீடு திரும்பினார்! அவர் கூறியது: “அன்று ஒரு நாள் நவம்பர் 19, 1982, வெள்ளிக்கிழமை, வீட்டின் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாத நிலையில் அவர்கள் தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கனமே என் நெஞ்சம் விம்மத் தொடங்கியது. விம்மலில் ஆரம்பித்து காட்டாற்று வெள்ளமோ என எண்ணும் அளவிற்கு கண்ணீர் பெருகியோடிற்று. இறைவனை உறக்கக் கூவி அழைத்தேன். இறைவா! என் குழந்தை எங்கே? அவளை என்னிடம் சேர்ப்பித்துவிடு. அவளிடம் இருந்து ஒரு செய்தி கூட இல்லையே!” எனக் கதறினேன். வானத்தைப் பார்த்து, “அந்தப் பறவைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கின்றனவே, என் சின்னப் பறவை கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றதே!” என விம்மினேன்.

அதற்கு மறுநாள், சனிக்கிழமை, மோனாவின் தாயார் சேப்பா சிறைக்குச் சென்றார். அன்றுதான் முதன் முறையாகத் தன் மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் ஒருவரோடு ஒருவர் பேச அனுமதி கிடையாது. ஒரு மொத்தமான கண்ணாடி கைதிகளையும் என்னையும் பிரித்துவிட்டிருந்தது. பஹாய் பெண் கைதிகள் வரிசையாக நின்றனர். மோனாவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அப்போது மோனா என்னை அழவேண்டாம் என சைகை மூலம் கூறினாள். அன்று அவர்கள் அனைவரும் பிற்பகல் மணி ஒன்று முதல் அடுத்த நாள் காலை மணி மூன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர் என்பது எனக்குப் பிறகு தெரிய வந்தது. பிறகு அதே வருடம் டிசம்பர் மாதம் அவளைக் காண நான் சேப்பா சென்றிருந்தபோது, அவள் அங்கு இல்லையென்றும், அடிலபாட் சிறைக்கு மாற்றப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. உடனடியாக நானும் என்னுடன் வந்திருந்தோரும் அடிலபாட் சிறைக்குச் சென்றோம். அன்று மோனாவுக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருந்தது. குளிர் காலமாகையால் அவளுக்கு ஜுரம் கண்டிருந்தது. ஒரே ஒரு பழைய போர்வை மட்டும் கொடுத்திருந்தார்கள். அது பனிக்காலத்தின் கடுங் குளிரிலிருந்து மோனாவை பாதுகாக்கமுடியவில்லை. அந்த நிலையில் மோனாவைக் கண்ட நான் என் வசமிழந்து கதறினேன். தொடர்புக்காக வழங்கப்பட்டிருந்த இருவழி தொலைபேசியில் என் கண்ணீருக்காக நான் மோனாவிடம் மண்ணிப்புக் கோரினேன். “என் நிலையை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. உன் பிரிவால் ஏங்கித் தவிக்கின்றேன் கண்ணே,” எனக் கூறினேன். அப்போது மோனாவின் கண்களிலும் கண்ணீர் பெருகத் தொடங்கியது. ஆனால் அவள் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, “அம்மா நாங்கள் இங்கு வசதியாகத்தான் இருக்கின்றோம். யாதொரு குறையுமில்லை. முன்னைய சிறையைக் காட்டிலும், இந்த சிறை ஒரு மாளிகை. எங்களுக்குக் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வரை வழங்குகிறார்கள். மிகவும் வசதி அம்மா,” என்றாள்.

மோனா என்னையும் என்னுடன் கூட வந்திருந்தோரையும் தேற்றினாள். அவளுக்கு எப்போதும் பிறரைப் பற்றிய அக்கரை அதிகம். எல்லோர் மேலும் தன் அன்பையும் களிப்புணர்வையும் பொழிவாள். “அப்பாவை இங்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் அவருக்கு உடனடியாக போர்வைகள் கொண்டுவாருங்கள், இல்லை என்றால் அவருக்கும் ஜுரம் வந்துவிடும்,” என்றாள். பிரியும் நேரம் வரும்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் தொடமுடியாததால், எங்கள் ஆள்காட்டி விரலை வாய்மேல் வைத்துப் பிறகு எங்களைப் பிரிக்கும் கண்ணாடி மேல் வைத்துப் பிரியாவிடை பெறுவோம். அப்போதெல்லாம் மோனாவின் கண்களில் பற்றின்மையும் ஓர் ஆழ்ந்த விவரிக்க முடியா களிப்பும் தெரிந்தது.

மோனாவிற்கு ஓரிரண்டு தடவைகள் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை கொடுக்கப்பட்டது. அதற்காக 5 லட்சம் டூமான்கள் கேட்கப்பட்டன. அதை எப்படியோ மோனாவின் தாயார் கொண்டுவந்தார். ஆனால் மோனாவின் தாயாரைக் கண்ட புரட்சி நீதிமன்ற காவலர், “நீ 9 வருடங்களுக்கு முன்பு சமூக வளக் குழுவில் இடம் பெற்றிருந்தாய். ஆகவே இந்த வைப்புத் தொகையை உனக்காக வைத்துவிட்டு 24 மணி நேரத்தில் சிறையில் சரணடைய வேண்டும்,” என்றார். மோனாவின் தாயார் அடுத்த நாளே சரணடைந்தார்.

மோனாவின் தாயாரும் சிறை செய்யப்பட்டபின், அவர், மோனாவும் தாஹிரி எனும் மற்றொரு பஹாய் பெண்மணியும் தங்கியிருந்து அறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு அறைக்கும் ஒரு படுக்கைதான் இருந்தது. நாங்களோ மூன்று பேர். மோனா என் அருகே தரையிலும், தாஹிரி கதவருகேயும் படுத்துக்கொண்டனர்.

மோனா, சிறை வாழ்க்கைக்கும் வெளி வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை விவரித்து, “சிறையில் ஒருவர் நிறைய நேரம் பிரார்த்தனை செய்து, அழாமல், கொடுமைகளை வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்ளவேண்டும்,” என்றாள். “நான் உங்கள் மகள்தான், ஆனால் நாம் இங்கு அந்த பந்தம் பற்றிய எண்ணம் இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும்,” என்றாள். “இங்கு பலர் தங்கள் தாய்களையும் பிள்ளைகளையும் பிரிந்து இருக்கின்றார்கள், ஆகவே நீங்கள் மற்றவர்களைப்போலவே என்னையும் நடத்த வேண்டும்,” என்றாள். ஒவ்வொருவரும் தாங்கள் கைது செய்யப்ட்ட காரணத்தை ஒட்டி முடிவெடுக்கும் நேரம் வரும்போது, அவள் என்னைப்பார்த்து, “அம்மா, நீங்கள் நீங்களாக உங்கள் சொந்த முடிவை எடுங்கள். பிறரைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்,” என்றாள். “சிறைவாசம் எதை பிடுங்கிக் கொண்டாலும், நம் ஒவ்வொருவருடைய மனசுதந்திரத்தை அது ஒன்றும் செய்ய முடியாது,“ என்றாள்.

மோனா எப்போதும் தனியாக இருக்கவே விரும்புவாள். ஒரு சிறை அறை காலியாக இருந்தால் அங்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். நீண்ட நேரம் பிரார்த்தனை செய்வாள். இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள விரும்பினாள். அவள் மிகவும் கலைத் திறமை வாய்ந்த பெண். சித்திரம் மற்றும் கைவேலைப்பாடு செய்வதில் மிகுந்தப் பிரியம் கொண்டவள். சிறையில் இதையெல்லாம் செய்யமுடியாமல் போனது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் பிரார்த்தனை நிலையில் இருந்தாலும், நேரம் கிடைத்தபோதெல்லாம், சிறையில் இருந்த மற்ற பஹாய் அல்லாத கைதிகளுடன் நிறைய நேரம் செலவளிப்பாள். அவர்களுக்குப் பாடல் கற்றுக் கொடுப்பதுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டும் இருப்பாள். இந்தக் கைதிகள், மோனாவை எப்போது இழுத்துச் சென்று அவளுடன் நேரத்தைக் களிக்கலாம் என்று காத்திருப்பார்கள். சிறையிலும் கைதிகளின் மத்தியில் அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள்.

ஒரு நாள் பஹாய் அல்லாத சிறைக் கைதி ஒருவர், பதப்படுத்தப்பட்ட பழம் ஒன்றை தம்மை சிறையில் காணவந்தோரிடமிருந்து பெற்று வந்தார். அந்தப் பழமோ மிகவும் சிறியது. ஒருவருக்கே பற்றாது. யாரிடம் கொடுப்பது என்ற கேள்வி. அப்போது அவ்வழியாக வந்த மோனா, அந்தப் பழத்தை வாங்கிச் சென்று, சிறிது நேரத்தில் ஒரு தட்டுடன் திரும்பி வந்தாள். அந்தத் தட்டில், அச்சிறிய பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லோரையும் கூப்பிட்டுப் பகிர்ந்தளித்தாள். விளையாட்டாக அந்த செயல் இருந்த போதிலும் மோனாவின் பகிர்ந்துகொள்ளும் சுவபாவத்தையே அது வெளிப்படுத்தியது.

சில காலம் சென்று, பஹாய் கைதிகளின் குடும்பத்தினர், கைதிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று மோனாவும் அவள் தாய் மற்றும் தந்தோயோடு ஒன்று கூடும் வாய்ப்பு கிட்டியது. மோனாவின் தந்தை நிச்சயமாக கொல்லப்படுவார் என்று மோனாவிற்கும் அவள் தாய்க்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. “இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல,” என்றார் மஹ்மூட்நிஸாட்., “கூடிய விரைவில் நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். நாம் ஏமன் நாட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கின்றதா? நான் முதலில் சென்று அங்கு நாம் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடுசெய்யவில்லையா? அது போல்தான் இதுவும்,” என்றார். பிறகு அவர் மோனாவைப் பார்த்து, “சுவர்க்கத்தில் இருக்கின்றாயா, இவ்வுலகில் இருக்கின்றாயா?” என வினவினார். அதற்கு மோனா, “நான் சுவர்க்கத்தில் இருக்கின்றேன்,” என்றாள். பிறகு மோனா தன் தந்தையை முத்தமிட்டு வேறு ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு இருவருமே ஒன்றும் பேசவில்லை. ஒரு பார்வையிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புறிந்துகொள்ளக்கூடியவர்கள்.

இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மோனாவின் தந்தை தூக்கிலிடப்பட்டார். இந்தச் செய்தி சிறையில் இருந்த மோனாவிற்கோ அவள் தாயாருக்கோ தெரியாது. தரானிஃ, மோனாவின் அக்கா, இதை அறியாது இருந்தார். அவர் இறந்த அடுத்த நாள் மார்ச் 13 அன்று காலை மணி பத்திற்கு, தரானிஃயின் கனவரே இந்த செய்தியை தெரிவித்தார். வீட்டிற்குள் நுழையும்போதே அவர் கதறிக்கொண்டு நுழைந்தார். என் தந்தையின் முடிவு எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்த செய்தியைக் கேட்ட என் உடல் அந்த அதிர்ச்சியினால் அதிர்ந்து போனது. தாங்க முடியாமல் நானும் கதறினேன். தூங்கிக் கொண்டிருந்த தரானிஃயின் மகள் நோராவும் அந்த சத்தத்தில் எழுந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

யாடுல்லாவின் உடலைக் கான தரானிஃ மட்டும் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் உடல் அருகே செல்லவோ அல்லது தொடவோ முடியவில்லை. இந்தச் செய்தியை மோனாவிற்கும் தன் தாய்க்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தரானிஃயின் மேல்தான் விழுந்துது.

சிறைக்குச் சென்ற தரானிஃ, தன் தந்தையார் இறந்த செய்தி அதுவரை மோனாவிற்கோ தன் தாய்க்கோ தெரியவில்லை என அறிந்தாள். மூன்று பேர் இறந்தது தெரியும் ஆனால் யார் என்று தெரியாது. தரானிஃ முதலில் தன் தாய் தங்கை இருவருக்கும் வாழ்த்துக் கூறினாள். அவர்கள் இருவரும் அவ்வாரே செய்தனர். பிறகு தரானிஃ, “அப்பா மறுமை எய்திவிட்டார்,” எனக் கூறினாள். அதற்கு மோனா, “தெரியும், நல்லது, கொடுத்து வைத்தவர்,” என்றாள். எல்லோரும் மோனாவிற்கு ஆறுதல் கூற விழைந்தனர். மோனா எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டு, “நாம் இறந்தோருக்காக வருந்தி பிரயோஜனமில்லை, இங்கு நாம் நம்முடைய சோதனகளை இன்னமும் கடக்கவில்லை. இறந்தோரை நோக்கிப் பிரார்த்தித்து, அவர்கள் நமக்காக ஆண்டவனிடம் பரிந்துரைக்க வேண்டுவோம். அதன் வாயிலாக நாம் நம்முடைய சோதனைகளை கடக்க முயற்சி செய்வோம்,” என்றாள். பிறகு தன் இனிமையான குரலால் ஒரு பிரார்த்தனையை பாடினாள். அடுத்த சில நாட்கள் துயரத்திலும் இன்பத்திலும் கழிந்தன.

இதற்குப் பிறகு ஒரு நாள், பாப் அவர்களின் மறைவு தினத்திற்கு சிறிது முன்பதாக, காலையில் விழித்தெழும்போதே மோனா, “இனி நான் எந்த உணவையும் தொடப்போவதில்லை,” எனக் கூறிக்கொண்டே எழுந்தாள். சுமார் 30 மணி நேரம் இவ்விதமாக பிரார்த்தனையும் நோன்பும் நோற்றவாறு இருந்தாள். அதன் பிறகு ரொட்டியும் பழமும் சாப்பிட்டாள். சாப்பிட்டுவிட்டு, நான் ‘இனைக்கப்பட்டிருந்தேன்’ என தன் தாயாரிடம் கூறினாள். பாப் அவர்களின் மறைவு தினத்தன்று, மோனா தான் தனியாக இருக்க விரும்புவதாகத் தன் தாயாரிடம் கூறினாள். ஆனால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்திப்போம் என்று அவள் தாயார் கூறினார். காலியாக இருந்த ஒரு சிறை அறையில் அவர்கள் அத்தினத்தை அனுசரித்தனர். மோனா பிறகு தன் தாயாரை அனுகி, “அம்மா நான் உண்மையில் தனியாக இருந்து பாப் அவர்களின் இந்த இறுதி மறைவு தினத்தை அனுசரிக்கவே விரும்பினேன்,” என்றாள். மோனாவின் தாய்க்கு, அவள் ஏன் இறுதி மறைவு தினம் எனக் கூறுகிறாள் என்று புறியவில்லை. “நீ அதை முன்பே சொல்லியிருக்கலாமே, நான் வற்புறுத்தியிருக்க மாட்டேனே,” என்றார்.

அதன் பிறகு மோனா சிறிது நடந்தாள். பிறகு தன் தாயாரிடமே வந்து, வாருங்கள் நாம் சிறிது நடந்து வருவோம் எனக் கூறினாள். சிறையின் நடைபாதை மிகவும் குறுகலாகனது. இருவரும் ஒன்றாகக் கூட நடக்க முடியவில்லை. அப்போது மோனா தன் தாயாரை நோக்கி, “அம்மா என்னைக் கொல்லப் போகிறார்கள் தெரியுமா,” என்றாள். அதைக் கேட்ட மோனாவின் தாய், தன் உடலெல்லாம் ஏதோ தீப் பிடித்து எரிவது போல் ஆகி, அதை நம்பாமல், “என்ன கூறுகிறாய், நீ திருமணம் ஆகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கப்போகின்றாய். உன் குழந்தைகளைக் காண நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன்,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா, எனக்கு அவ்வித ஆசைகள் எதுவும் கிடையாது, நீயும் இந்த ஆசையை விட்டுவிடு. இப்போது நீ என்னைப் பேச விடவில்லையானால், பிறகு நான் சொல்ல நினைக்கும் இந்த விஷயங்களை சொல்லாமலேயே நான் இறக்க நேரிடும்,” என்றாள்.

பிறகு மோனா தன் தாயாரின் கையைப் பிடித்தவாறு நடந்து, “அம்மா, என்னைத் தூக்கிலிடப் போகும் இடம் சிறிது உயரமாகவே இருக்கும். அப்பொழுதுதான் கழுத்தில் கயிற்றைப் போட வசதியாக இருக்கும். என் கழுத்தில் கயிற்றைப் போடப் போகும் அந்த கையை, அது யாருடையதாக இருந்தாலும், அதை முத்தமிட அனுமதி கேட்பேன். நிச்சயமாக அதற்கு அனுமதி தருவார்கள் என நான் நினைக்கின்றேன். பிறகு அவரிடம், பஹாய்கள் தன்னைக் கொல்லப் போகிறவரின் கரத்தைத் தவிர வேறு யாருடைய கையையும் முத்தமிடுவது அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவேன். அந்தக் கையை நிச்சயமாக முத்தமிடவேண்டும், ஏனென்றால் அந்தக் கை என்னை என் பஹாவுல்லாவிடம் விரைந்து அனுப்பவிருக்கும் கை. பிறகு என் கழுத்தில் மாட்டப்பட விருக்கும் அந்த கயிற்றை முத்தமிடுவேன். அதற்கு நிச்சயமாக அனுமதி கிடைக்கும் அம்மா. பிறகு இந்த பிரார்த்தனையைக் கூற நான் அனுமதி கேட்பேன்,” எனக் கூறிவிட்டுத் தன் நெஞ்சின் மேல் இரு கைகளையும் கட்டிக் கொண்டு இனிமையான குரலில், தன் அன்புக்கினியவருக்குக் கூறுவதுபோல ஒரு பிரார்த்தனையைக் கூறினாள். பிறகு மனித குலத்தின் உண்மையான மகிழ்ச்சிக்கு ஒரு பிரார்த்தனையைக் கூறிவிட்டு இந்த உலகத்திடமிருந்து நான் விடைபெற்றுக் கொண்டு, என் அன்புக்கினியவரை அடைவேன் அம்மா, என்றாள்.

மோனாவின் தாயார், “நான் அவளைப் பார்த்தேன் ஆனால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் சொல்வதைக் கேட்டேன், ஆனால் புறிந்துகொள்ளமுடியவில்லை. ஒருபுறம் அவள் மேல் நான் வைத்திருந்து பாசம் என்னை பீதியடையச் செய்தது, ஆனால் மறுபுறம் அவள் என்னை ஒரு ரம்மியமான ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். இருந்த போதும் அதை நம்பமுடியாமல், “நல்ல சுவாரஸ்யமான கதை,” என்றார்.

மோனா, கண்ணில் நீர் ததும்ப, மெதுவாக, அது கதையல்ல, அம்மா. இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு என்னை விட்டு நீண்ட நேரம் அந்த நடைபாதையில் நடந்த வண்ணம் இருந்தாள். என் பஞ்சவர்ணக்கிளி பறந்து செல்ல போகிறது. அது எப்படிப் பறக்கப் போகிறது என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

சிறையில் பஹாய் கைதிகளுக்கு நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதற்குள் அவர்கள் தாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறிவிட்டால் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையென்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டனர். அந்த நேரம் மோனா ஒரு கனவு கண்டாள். அதில் மோனா சிறையில் தன் கட்டாயப் பிரார்த்தனையைக் கூறிக் கொண்டிருந்தபோது, அப்துல் பஹா அந்த அறைக்குள் வந்து மோனாவின் தாயார் படுத்திருந்த படுக்கையில் உட்கார்ந்து, அவர் தலையில் கையை வைத்தார். அப்போது அவர் மோனாவின் பக்கம் தம்முடைய மறு கையை உயர்த்தினார். மோனா, தான் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் போய்விடுவார் என்று நினைத்து, ஓடிவந்து அவர் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் கையை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்துல் பஹா, “மோனா உனக்கு என்ன வேண்டும்,” என கேட்டார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். மறுபடியும் அவர், “என்னிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும் என்றார்.” அதற்கு மோனா, “எல்லா பஹாய்களுக்கும் விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி தரப்பட வேண்டும்,” என்றாள். மீண்டும் அப்துல் பஹா, “மோனா, என்னிடம் இருந்து உனக்காகவென்று என்ன வேண்டும்,” என்றார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். அப்துல் பஹா, “அளிக்கப்பட்டது, அளிக்கப்பட்டது,” என்றார்.

அடுத்த நாள் மோனா தான் கண்ட கனவை சிறையில் இருந்த எல்லோரிடமும் கூறினாள். அதற்கு பிற கைதிகள், “உனக்கும் உன் தாயாருக்கும் விடுதலை கேட்டிருக்கலாம், ஆனால் எல்லோருக்கும் எவ்வளவு பிரமாதமான வரத்தைக் கேட்டிருக்கின்றாய்,” என்றனர்.

மோனாவின் தாயார் தாம் விடுதலையான அன்று, சிறையில் இருந்த அனைவரும் தமக்காக அவர் வெளியே சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மோனா, “அம்மா, இங்கு நீங்கள் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள், அதே போல் வெளியே உள்ளோர்களும் மன உறுதியோடு இருக்க உதவுங்கள், அவர்கள் உறுதியாகவும் தைரியத்துடனும் இருக்க ஊக்குவியுங்கள்,” என கேட்டுக் கொண்டாள்.

மோனாவின் தாயார், “நான் அவள் முகத்தை முத்தமிட்டேன், ஆனால் முத்தமிட்டது அதுவே கடைசி முறை அல்ல, மீண்டும் ஒரு முறை அவளை முத்தமிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவள் சில்லிட்ட உடலை பிணக்கிடங்கில் முத்தமிட்டு, அந்த பொக்கிஷத்தை அதன் ‘சொந்தக்காரரிடமே’ திருப்பி அனுப்பிவைத்தேன்.” மோனாவை கடைசியாக சிறையில் நான் சென்று கண்டபோது, அவள், “அம்மா நாளை நாங்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்களாக இருப்போம் என்றாள்.” ஆம், அடுத்த நாள் அவள் தூக்கிலிடப்பட்டாள்.

மோனாவின் தமக்கை தரானிஃ, “வாரம் ஒரு முறைதான் மோனாவைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. அவளைப் பார்க்கத் துடித்தேன். அன்று அவளை இறுதியாகக் காண்கின்றேன் என எனக்குத் தெரியாது. கைதிகளைக் காண நாங்கள் அனுமதிக்கப் பட்டபோது, தடுப்பிற்குப் பின்னால் மோனா முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். முதலில் அம்மாவே இருவழி தொலைபேசியை எடுத்துப் பேசினார். அவள் எப்போதும் போல் மனமகிழ்ச்சியோடு பிறர் நலத்தை விசாரித்து, என்னை நோக்கி“, ‘உன்னைக் கட்டிப் பிடித்து நசுக்க ஆசையாக இருக்கின்றது,’ என்றாள். சிரித்துக்கொண்டே அவள், மீண்டும், ‘அம்மா இப்போது உன்னுடன் இருக்கின்றாள், சந்தோஷமாக இரு’,“ என்றாள். நானும் சிறிது நேரம் பேசிவிட்டு, மோனா, நேற்று ஆறு பஹாய்கள் தூக்கிலிடம்பட்டனர்,” என்றேன். ஆம் ஆறு பேர் பஹாய்கள் என்ற காரணத்திற்காக நேற்று தூக்கிலிடப் பட்டிருந்தனர். அவள் அழகிய பசுமை நிறக் கண்கள் நீரால் நிரம்பின. தன் கையை தன் இதயத்தின் மேல் வைத்து, யார் அவர்கள், என்று வினவினாள். நான் ஒவ்வொருவராகப் பெயரிட்டுக் கூற, அவள் தன் கையை மேலும் அழுத்தமாகத் தன் இதயத்தின் மேல் வைத்து, ‘அவர்கள் நன்மையடைந்தனர், அவர்கள் நன்மையடைந்தனர்,’ என கூறிக் கொண்டே வந்தாள். கண்களில் நீர் வழிய, ஓ தரானிஃ, இவை சோகக் கண்ணீரோ, துயரக் கண்ணீரோ அல்ல,’ என்றாள். ‘இவை ஆனந்தக் கண்ணீர்,’ என்றாள். நான், ‘மோனா, நீயும் கூடிய சீக்கிரம் எங்களை பிரியப் போகின்றாய்,’ என்றேன். ‘தெரியும், தெரியும்,’ என்றாள். ‘நாங்கள் கொலைக்களத்திற்கு களிப்புடன் பாடிச் செல்ல பிரார்த்தனை செய்,’ என்றாள். நிச்சயம் பிரார்த்திப்பேன்,’ என்றேன். ‘இறைவன் நியமித்தது நிச்சயம் நடந்தேறும்,’ என்றேன்.

‘நீ எனக்கு வேறொறு உதவி செய்ய வேண்டும்,’ என மோனா என்னைக் கேட்டுக் கொண்டாள். ‘நான் தூக்கிலிடப்படுவதற்கு முன் என் பாவங்கள் மன்னிக்கப்பட நீ இறைவனை பிரார்த்திக்க வேண்டும்,’ என்றாள். நான் அவளைப் பார்த்து, ‘இறைவன் உன்னை மன்னிக்குமளவுக்கு நீ என்ன பாவமடி செய்தாய்,’ எனக் கூறினேன்.

நான் அழாமல் இருக்கப் பெரும் முயற்சி செய்து, அவள் அழகிய குரலைக் கேட்பதில் கவனமாக இருந்தேன். அப்போது என் அம்மாவும் அவளுடன் பேசட்டுமே என்று அவரிடமும் தொலைபேசியைக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் பொறுமை இழந்து, ‘நீங்கள் இருவரும்தான் சிறையில் மாதக் கணக்கில் ஒன்றாய் இருந்தீர்களே, இப்பொழுது நான் பேசவேண்டும்,’ என்று போனைப் பிடுங்கி மோனாவிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தேன்.

அதைக் கண்டு மோனா சிரித்தாள். ‘ஓ தரானிஃ, எனக்கு எது சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?’ என்றாள். ‘நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பட்டியலில் இருக்கின்றோம் எனும் ஞானம்,’ என்றாள்.

நான் ஒன்றும் கூறவில்லை. என்ன கூறுவது! அப்போது மோனா, ‘தரானிஃ நம் உறவினர்கள், நன்பர்கள் அனைவரையும் நான் விசாரித்ததாகக் கூறு. எல்லோரையும் என் சார்பில் முத்தமிடு.’ என் குழந்தை பக்கம் திரும்பி, ‘இவளை நீ நம் அப்பாவைப்போலவே வளர்க்க வேண்டும்,’ என்றாள். நானோ, என் இதயத்தில், ‘இவளை உன்னைப் போலவே வளர்க்கப்போகின்றேன்,’ எனக் கூற நினைத்தும், என் பேச்சு அவள் பேசுவதை நிறுத்திவிடக் கூடாது என்பதால் ஒன்றும் கூறவில்லை.

திடீரென்று தொலைபேசி வெட்டப்பட்டு நாங்கள் எல்லோரும் பிரியும் நேரம் வந்தது. இறுதி முறையாக எங்கள் விரல்களால் உதடுகளைத் தொட்டு, கண்ணாடியின் மேல் வைத்து எங்கள் முத்தங்களைப் பரிமாரிக்கொண்டோம். ”

ஜூன் 18 அன்று, சாயங்காலப்பொழுது, நாங்கள் சிறைச்சாலையை விட்டு வந்தவுடன், பத்துப் பெண்கள் அடிலபாட் சிறையில் இருந்து கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், மோனா, ரோயா, ரோயாவின் தாயாரும், இஸ்ஸாட், ஷிரின், ஸார்ரின், மஹ்ஷீட், சீமீன், அஃக்தார், தாஹிரி மற்றும் நுஸ்ராட்.

கொலைக்களம்

அவர்களை அடிலாபாட்டிலிருந்து ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுனர், அவர்களின் மனோபலத்தையும் தைரியத்தையும் கண்டு மிகவும் வியந்து போனார். “முதலில் அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கொலைக்களம் வந்தபோதுதான் தெரியும் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படப் போகிறார்கள் என்று,” என்றார். “வழிமுழுவதும் அவர்கள் பாடியும் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் இருந்தனர்.” மற்றொருவரான, அந்தப் பென்களின் கழுத்தில் கயிரை மாட்டிய கொலையாளி, ஒரு பெண்ணின் தாயாரிடம், “நாங்கள் இறுதி வரை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம். நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம், என்று. ஆனால் அவர்கள் யாருமே அசையவில்லை. முதலில் வயதான பெண்களைத் தூக்கிலிட்டோம். பிறகு வயதுப் பெண்களை ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட்டோம். ஆக வயதுக் குறைந்தவரே இறுதியாக இறந்தார். நாங்கள் எல்லோருமே, தூக்கைக் கண்டதும் பயந்து நடுங்கி, சமயத்தை துறந்துவிடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் யாருமே அசையவில்லை. ஒரே ஒரு முறை நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம் என்று கெஞ்சினோம், ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. அவர்கள் அனைவரும் அவ்வாறு கூறுவதைவிட இறப்பதே மேல் என்று நினைத்தனர்.”

மோனாவோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த மற்ற பெண்கள்

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு உடல்கள் பிணக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அன்று, முதல் நாள் தூக்கிலிடப்பட்ட ஆறு ஆண் பஹாய்களின் உடல்களைப் பெறச் சென்ற பஹாய் உறவினர்கள், அன்று புதிதாகப் பத்து பெண்களின் உடல்களைக் கண்டனர். ஷிராஸ் முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

தரானி

தரானிஃ அந்த செய்தியை பெற்றபோது, தன் தந்தையின் இறப்பைக் கேட்டு அடைந்த அதே கடும் வேதனையை அடைந்தாள். மோனாவை நான் அறிந்தவரை, அவள் நிச்சயமாக தன் நம்பிக்கையை கடைசி வரை இழக்கப் போவதில்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் பஹாவுல்லாவிடம் அவளை சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள் என்று பிரார்த்திக்கவில்லை. அவளுக்காக விதிக்கப்பட்டது எதுவோ அது நிறைவேறட்டும் என கேட்டுக் கொண்டேன்.

ஆனால் பலமுறை, அப்படியே அவள் கொல்லப்பட்டால் நான் அதை எப்படி தாங்கிக் கொள்வேன், அவள் உயிரற்ற உடலை எப்படி என் கண்களால் பார்க்கப்போகின்றேன்? அதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா, என்றெல்லாம் மனதில் கேள்விகள். பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த பயங்கரத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக அவள் வீட்டுக்கு வரும் வேளையை எதிர்பார்த்திருந்தேன். அவள் சிரிப்பொலி, அவள் நடை ஒலி, அவள் இனிய குரல், என் அழகு தங்கையை அனைத்து முத்தமிடும் காட்சி என் மனதில் தோன்றியது. தந்தை மறைந்த துக்கத்தை அவளுடன் பகிர்ந்து, அவர்கள் எல்லோரும சிறையில் இருந்தபோது நான் பட்ட வேதனைகளை அவளிடம் சொல்லி என் மனோபாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து, எங்கள் தாயாரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அப்போது திட்டமிட்டேன்.

ஆனால் தெய்வீக திட்டம் வேறாக இருந்தது. அவள் இறந்த செய்தி கேட்டு பலவித எண்ணங்கள் என் மனதை அலைக்களித்தன. யாராவது வந்து அந்த பயங்கரம் உண்மை அல்ல என்று கூற மாட்டார்களா என்று என் மனம் அப்போது ஏங்கியது. இந்த ஏக்கம் பிணக்கிடங்கை அடைந்து அங்கிருந்தோரைக் கண்டபோது மறைந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.

தரானிஃ மேலும் கூறுவது, “மோனாவின் அருகில் மண்டியிட்டிருந்தேன், எங்களுக்கு இடையில் கண்ணாடி தடுப்பு இல்லாமல் அவளைக் கண்டது மிகவும் துயரமாக இருந்தது. என் மனப்பூர்வமாக, அவள் தன் கண்களைத் திறந்து, ஒரே ஒரு தடவை, அவள் புன்னகையை நான் காண்பதை பார்க்கமாட்டாளா என்று என் மனம் ஏங்கியது. ஆனால் அவள் மேலே இருந்து நிறந்தர புன்னகையுடன் எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரிந்தது. என் கண்களில் இருந்து ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தால் கூட அது அவள் மனதை உடைத்துவிடும்.”

“ஆகவே, என் இனிய மோனா, நீ பஹாவுல்லாவுக்காவும் மனிதகுலத்திற்காகவும் கொண்டிருந்த அன்பிற்காக நான் முகம் மலர்கின்றேன். உன் இன்னுயிரை எதற்காகத் தியாகம் செய்தாய் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளட்டும்.

ஸைனாப்


ஸஞ்ஜான் கொந்தளிப்பு

கடந்த நூற்றாண்டில், பாப்’இ சமயத்தின் ஆரம்பகாலங்களில், பாரசீகத்தின் பல இடங்களில், பாப்’இகள் எதிர்ப்புகளுக்கு உள்ளானார்கள். அந்நேரங்களில் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்றுதிரண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். அதில் முதலாவதாக டபார்ஸியிலும், அதன் பின்னர் நேய்ரீஸிலும், மூன்றவதாக ஸஞ்ஜான் என்னும் இடத்திலும் பாப்’யிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ஞ்ஜானில் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆண்களுக்கு அங்கிருந்த பெண்களும் வெவ்வேறு வழிகளில் உதவினர். அவர்கள் எப்படிப்பட்ட பெண்கள்?

முதலாவதாக, தாய்மார்கள் எனும் முறையில், பாப் பெருமானாரின் அறிவுரைகளை மிகவும் கவனமாகப்  பின்பற்றுமாறு தங்களின் பிள்ளைகளுக்குப் போதித்தனர், “நமது அன்பார்ந்த மாஸ்டரே அவற்றைப் பின்பற்றுவதில் முதலாவதாக இருக்கின்றார். அவரது தயவைப் பெற்ற சீடர்களான நாம் மட்டும் அவற்றை நமது வாழ்வின் மேலாண்மை செய்யும் கொள்கைகளாகக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்” (உதயத்தை வென்ற வீரர்கள்) என அவர்களின் பிள்ளைகளுக்குப் போதித்தனர். மிகவும் சிரமமான சூழ்நிலைகளிலும் அவர்களின் பிரபுவிற்கு துனிச்சலுடன் பணிபுரியவும் பெண் ஆண் சமத்துவம், சர்வலோக கல்வியின் முக்கியத்துவம், ஏழைகளுக்கும் வறியோருக்கும் கைகொடுத்தல் போன்ற போதனைகளைப் பின்பற்றுமாறும் தங்களின்  பிள்ளகளை வளர்த்தனர்.

அவ்விதமான பெண்களுள் ஒருவளாக, ஸைநாப் என்னும் பெயர்கொண்ட இளம்பெண்ணும் இருந்தாள். போரிடும் பாப்’யி ஆண்கள் படும் இன்னல்களைக் கண்டு மனம் பொருக்காத ஸைநாப், யாரும் அறியா வண்ணம், ஆண் வேடமிட்டு, ரஸ்டம் அலி எனும் பெயர் பூன்டு, ஆண்களோடு ஆணாக போர் செய்தாள். அவளுடைய வீர தீரச் செயலின் வரலாறே பின்வரும் கதை.

அந்த வீரம் நிறைந்த தோழர்களுக்கு உயிரூட்டும் திவ்ய பற்றின்மையெனும் ஆவி குறித்த மேல் ஆதாரங்கள், ஒரு கிராமத்துக் கண்ணியின் நடத்தையின் வாயிலாக வழங்கப்பட்டது. அவள், தன்னிச்சையாக, கோட்டைப் பாதுகாவலர்களோடு ஒன்றுசேர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தோடு தானும் இணைந்துகொண்டாள். அவளுடைய பெயர் ஸைநாப் என்பதாகும். அவளுடைய சொந்த ஊர் ஸஞ்சானுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமம். அவள் அழகுமிகுந்தவள், சிவந்த வதனமுடையவள்; மேன்மைமிக்க நம்பிக்கையினால் தூண்டப்பட்டவள்; அஞ்சாத வீரத்தைப் பெற்றிருந்தவள் தன்னுடைய ஆண் தோழர்கள் அடைந்த சோதனைகளும், கஷ்டங்களும், ஆணுடையில் மாறுவேடமிட்டும், எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிப்பதில் பங்குபெற வேண்டுமெனவும் அவளுள் ஓர் அடக்கமுடியாத ஆவலை உண்டாக்கின. நீண்ட உடையனிந்து, தன்னுடைய ஆன் துணைவர்கள் அனிந்துள்ளதைப் போல் தலைப்பாகை அனிந்து, தன்னுடைய சுருளான கூந்தலை வெட்டிக்கொண்டும், போர்வாள் தரித்தும், பிறகு, ஒரு துப்பாக்கியையும், கேடயத்தையும் பற்றிக்கொண்டு, அவர்களிடையே தன்னையும் சேர்ந்துக்கொண்டாள். தடையரணுக்குப் பின்னால் அவள் தன்னுடைய இடத்தைப் பிடித்திட பாய்ந்து முன்சென்றபோது அவள் ஒரு கன்னி என யாருமே சந்தேகிக்கவில்லை. எதிரிகள் தாக்கிய உடனே, அவள் வாளை உருவிக்கொண்டும், “யா ஷாஹிபு‘ஸ்-ஸமான்!” எனக் தனது கிரீச்சு குரலை எழுப்பியவாறு தனக்கெதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சக்திகளின் மீது வியக்கத்தக்க துணிவுடன் பாய்ந்தாள். நண்பர்களும் பகைவர்களுமாக, தங்கள் கண்கள் அதற்குச் சமமாக அதுவரைக் கண்டிராத ஒரு துணிச்சலையும், செயல்வளத்தையும் கண்டு அதிசயித்தனர். அவளுடைய எதிரிகள், சினங்கொண்ட கடவுள் தங்களுக்கு இட்ட ஒரு சாபமென அவளைப் பிரகடணப்படுத்தினர். மனத்தளர்வினால் பாதிக்கப்பட்டும், தங்களுடைய தடையரண்களைக் கைவிட்டும், வெட்கக்கேடான நிலையில் அவர்கள் சிதறியோடினர்.

பாதுகாப்பு மேடையிலிருந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்கானித்துக்கொண்டிருந்த ஹுஜ்ஜாட்*, ஸைனாபைக் கண்டுகொண்டும், அக்கன்னிப்பெண் அவ்வேளையில் வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஆற்றலைக் கண்டு அதிசயிக்கவும் செய்தார். தன்னைத் தாக்கியவர்களை அவள் விரட்டி சென்றுகொண்டிருந்தாள். அப்போது, ஹுஜ்ஜாட் தமது ஆட்களிடம் அவள் மேற்கொண்டு எதிரிகளை தொடர்ந்து பின்செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அரணுக்கு திரும்புமாறும் கூறச்சொன்னார். அவளுடைய எதிரிகள் அவள் மீது தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு அவள் பாய்ந்து சென்றபோது, “இவ்வித ஊக்கத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திடும் ஆற்றலை எந்த ஓர் ஆணும் காட்டியதில்லை“, என அவர் கூற செவிமடுக்கப்பட்டது. அவளுடைய அத்தகைய நடத்தையின் குறிக்கோள் குறித்து அவளிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவள் கண்களில் குபுக்கென கண்ணீர் பெருகிட, பின்வருமாறு கூறினாள்: “என்னுடைய சக சிஷ்யர்களின் அவதியையும், சிரமங்களையும் நான் கண்ணுற்ற போது என் உள்ளம் பரிதாபத்தினாலும், சோகத்தினாலும் இரணமானது. என்னால் தடுக்கப்பட முடியாத ஓர் உட்தூண்டலினால் நான் முன்சென்றேன். என்னுடைய ஆண் தோழர்களோடு என் அனைத்தையும் அர்ப்பணம் செய்திடும் சலுகையை நீர் எனக்கு அளிக்க மறுத்து விடுவீர் என நான் பயந்தேன்.” “நீ நிச்சயமாகவே அரணில் குடிகொண்டுள்ள மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள முன்வந்த அதே ஸைனாப்தானே?” என ஹஜ்ஜாட் விளித்தார். “ஆமாம்” என அவள் பதிலளித்தாள். “நான் பெண் என்பதை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை உங்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நீங்கள் ஒருவரே என்னைக் கண்டுகொண்டுள்ளீர். பாப் பெருமானாரின் பெயரால், மதிப்பிட முடியாத அந்த சலுகையும், உயிர்த்தியாகமெனும் கிரீடமுமான, என் வாழ்வின் ஒரே ஆவலை நான் அடைவதைத் தடுத்துவிடாதீர்கள்.”

  • உதயத்தை வென்ற வீரர், அத்தியாயம் 24, ஸஞ்ஜான் எழுச்சி

அவளுடைய வேண்டுகோளின் தொனி மற்றும் சாயலினால் ஹுஜ்ஜாட் மிகவும் ஆழமாக கவரப்பட்டார். அவளுடைய ஆன்மாவின் கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த முயன்றார், அவள் சார்பான தமது பிரார்த்தனைகளை அவளுக்கு உறுதிபடுத்தினார், மற்றும் அவளுடைய மேன்மைமிக்க மன உரத்தின் அறிகுறியாக, ரஸ்டம்-அலி எனும் நாமத்தை அவளுக்கு வழங்கினார். “இதுவே எல்லா இரகசியங்களும் கண்டறியப்படும் ஒரு நாளான மறு உயிர்ப்புறும் நாளாகும். அவர்களுடைய புறத்தோற்றத்தினால் அல்லாது, அவர்களுடைய நம்பிக்கையின் குணவியல்பு மற்றும் வாழ்க்கையின் விதத்தினாலும், ஆண் பெண் என்னும் பேதமில்லாமல் இறைவன் தமது படைப்பினங்களை மதிப்பிடுகிறார். இழம் வயதுடையவளும், முதிர்ந்த அனுபவம் இல்லாதவளுமான ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தபோதும், வெகு சில ஆண்களே விஞ்சக்கூடிய மனோ உறத்தையும், வளத்தையும் நீ வெளிப்படுத்தியுள்ளாய்.” அத்தோடு, அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அவளுடைய சமயம் அவளக்கு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளை மீறாது இருக்குமாறு அவளை எச்சரிக்கவும் செய்தார். “வஞ்சக எதிரிகளிடமிருந்து நம்முடைய உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளவே நாம் கேட்டுக்கொள்ளப்படடுள்ளோமே அன்றி, அவர்கள் மீது புனித யுத்தம் மேற்கொள்வதற்காக அல்ல.,” என அவளுக்கு ஞாபகமூட்டினார்.

சுமார் ஐந்து மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு, எதிரிகளின் சக்திகளை இணையற்ற வீரத்துடன் தொடர்ந்தாற்போல் எதிர்த்து நின்றாள் அக்கன்னி. உணவையும் தூக்கத்தையும் மறந்து, தான் மிகவும் நேசித்த சமயத்திற்காக ஆர்வம் மிகுந்த அக்கறையுடன் உழைத்தாள். தனது குறிப்பிடத்தக்க துணிவின் உதாரணத்தினால், தடுமாற்றம் அடைந்த சிலருடைய மன உறுதியை மறுபலப்படுத்தி, அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டினாள். அந்தக் காலத்தில் அவள் தரித்திருந்த வாள் அவளுடைய இடுப்பிலேயே இருந்துவந்தது. நித்திரை என அவள் கொள்ள முடிந்த அந்த குறுகிய சில நேரங்களில் தன்னுடைய வாளின் மீதே அவளுடைய தலை சாய்ந்தும், அவளுடைய கேடயமே அவளுடைய உடலின் போர்வையாகவும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு துணைவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலை ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் பாதுகாத்தும், தற்காத்தும் வரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வீரமங்கை எங்கு வேண்டுமானாலும் போய்வர சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. தன்னைச் சுற்றிலும் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் நடு மையத்திலேயே அவள் இருந்தாள். எதிரி தாக்க முயன்ற எந்த நிலையானாலும் அங்கு விரைந்தோடி காப்பற்றிடவும், தன்னுடைய ஊக்குவிப்போ, ஆதரவோ தேவைப்படும் எவருக்கும் அதை வழங்கிடவும் ஸைனாப் தயாராகவே இருந்தாள். அவளுடைய வாழ்வின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்த வேளை, அவளுடைய இரகசியத்தை அவளுடைய எதிரிகள் கண்டுகொண்டனர். அவள் ஒரு பெண் என்பதை உணர்ந்தும், தொடர்ந்து அவளுடைய ஆதிக்கத்தினால் மருளவே செய்தும், அவளுடைய வருகை கண்டு நடுநடுங்கவும் செய்தனர். அவளுடைய கிறீச்சுக் குரல் அந்த எதிரிகளின் உள்ளங்களில் பெரும் பீதியைக் கிளரி, அவர்களுள் மனத்தளர்வையும் ஏற்படுத்த போதுமானதாகவே இருந்தது.

ஒரு நாள், திடீரென எதிரி படைகளினால் அவளுடைய துணைவர்கள் சூழ்ந்துகொள்ளப்படும் நிலையைக் கண்டு, ஹுஜ்ஜாட்டிடம் அவள் சஞ்சலத்தோடு விரைந்தோடி, அவரது கால்களில் வீழ்ந்து, கண்ணீர் மல்கிய கண்களுடன் அவரைக் கெஞ்சி, அவர்களுடயை உதவிக்கு தான் விரைந்துபோக மன்றாடினாள். “என் வாழ்வு, அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பது என் உணர்வு,” ”எதிரிகளின் வாளுக்கு நானே இறையாவேன். என் எல்லைமீறலை மன்னித்து, எவருக்காக நான் என் உயிரை அர்ப்பணம் செய்ய ஏங்குகின்றேனோ அந்த என் தலைவரிடம் எனக்காக பரிந்து பேசிட உங்களை மன்றாடி கேண்டுக்கொள்கின்றேன்.”

ஹுஜ்ஜாட் பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் பேச முடியாமல் இருந்தார். அவருடைய மௌனத்தினால் உற்சாகம் அடைந்தும், அது சம்மததிற்கு அறிகுறி என்னும் முடிவிற்கும் வந்த ஸைநாப், வாசலுக்கு வெளியே பாய்ந்தும், ஏழு முறை “யா ஷாஹிபு‘ஸ் ஸமான்!” என குரலெழுப்பியும், தன்னுடைய சகாக்கள் பலரை சாய்த்துவிட்ட கரங்களை வீழ்த்திட பாய்ந்து சென்றாள். “உங்களுடைய துர்செயல்களால் உங்கள் சமயத்தின் நற்பெயரை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்?” என உரக்க குரலெழுப்பியாவாறு அவர்கள் மீது பாய்ந்தாள். “நீங்கள் உண்மை பேசுகிறவர்களாக இருந்தால், ஏன் இழிவோடு எனக்குப் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்?” என உரக்கக் கேட்டாள். எதிரிகள் எழுப்பியிருந்து தடுப்பு அரண்களை நோக்கி ஓடி, முதன் மூன்று அரண்களின் காவலர்களை விரட்டியடித்து, நான்காவதையும் வென்றிடுவதற்கு போராடிக்கொண்டிருந்தபோது, தோட்டக்கள் மாரியில் அவள் தரையில் சாய்ந்தாள். அவளுடைய எதிரிகளிடையே அவளுடைய கற்பு குறித்து எவருமே எந்தக் கேள்வியும் எழுப்பவோ, அவளுடைய நம்பிக்கையின் மேன்மையையும், அவளுடைய நடத்தையின் நித்தியத்தன்மையும் புறக்கனிக்க தைரியமற்றிருந்தனர். அவளுடைய பக்திவிசுவாசத்தின் மேன்மையினால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சுமார் இருபதுக்கும் குறையாத பெண்கள் பாப் அவர்களுடைய சமயத்தை ஏற்றனர். தங்களுக்கு பரிச்சயமான கிராமத்துப் பெண்னாக அவளை அவர்கள் காணவில்லை. மனித நடத்தைக்கான அதிமேன்மைமிக்க கோட்பாடுகளின் மறுஅவதாரமாகவே அவள் இருந்தாள், அவள் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே வெளிப்படுத்தியிருக்கக்கூடிய அதி ஆன்மீகத்தின் ஜீவ உருவாகத் திகழ்ந்தாள்.

இன்று நாம் நமது சமயத்திற்காக உயிரைத் தியாகம் செய்யவேண்டியதில்லை. ஆனால் இன்று பயனேதும் இல்லை. ஆனால் உயிர்த்தியாகத்திறுகு இணையான நமது சமயத்திற்கான சேவைகளில் ஈடுபடலாம். அமைதியான நமது பிரார்தனைகளின் போது, ஸைநாப் போன்ற உயிர்த்தியாகிகளின் செயல்களை தியானிப்போமாக.

வெண்பட்டாடை


தாஹிஃரி அம்மையார்

தாஹிரியின் மரணம்

தெஹரானுக்கு நடுவில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், கற்களுக்கும் பாறைகளுக்கும் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின்றது. அந்தக் கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்தத் தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்தும் போய்கொண்டும் இருக்கின்றன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.

தோழிகளுடன் தாஹிஃரி


பெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும். உதாரணமாக, லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான், ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால் பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால், இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல் விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின் உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடி, கண்டுபிடித்து, அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்; மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில் அவளை மிஞ்சியிருந்த நிலையில், அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு, ‘அரசே, நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும் வகையில் அவளை பார்த்திட வேண்டும்,’ என கூறினான். ஆக, அழகென்பது பார்ப்பவரது கண்களைப் பொருத்த விஷயம். எல்லா வகையிலும், தாஹிரிஃ அவரது காலத்தின் சிந்தனைகளுக்கு ஒப்ப மிகவும் அழகானவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.தாஹிரிஃயின் அழகைப் பொருத்த மட்டில் பின்வருமாறு ஏதாவது நடந்திருக்கலாம். ஏதோ ஒரு நாளன்று, எட்டு கோணம் கொண்டதும், அரக்கில் வடித்த இராப்பாடி ஒன்று அதன் மூடியை அலங்கரித்தும், அதே அரக்கால் ஆன ரோஜா ஒன்றைப் பார்த்து அந்த இராப்பாடி கீதம் இசைப்பதாக வடிவமைப்பும் கொண்ட தமது கண்ணாடிக் கைப்பேழையை திறந்திட்ட தாகிரிஃ, அதன் உட்பாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த தமது உருவத்தைப் பார்த்து, வருங்காலத்திற்கு அளித்திடவென்று தமது உருவ வர்ணனையின் குறிப்புகள் எதும் இல்லை என்பதை பற்றி சிந்தித்திருக்கலாம். தாம் இள வயதிலேயே மறையப்போவது அவருக்கு தெரிந்திருந்து, முதிய பருவம் தனது கோடுகளை அவரது முகத்தில் வரைந்து அதன் அழகை அழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தும் இருக்கலாம். அல்லது ஒரு வேளை, நீண்ட ஜன்னலின் கீழ் தரையில் மண்டியிட்ட நிலையில், அவரது புத்தகம் ஒரு பக்கம் கிடக்க, அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் தமது முகத்தை பார்த்து, லைலி, ஷிரீன், மற்றும் அவர்களைப்போன்ற பலரின் முகங்கள் போல் தமது முகமும் மறைந்திடும் நாள் வரும் என்பதைப் பற்றி அவர் சிந்தித்திருக்கலாம். அதனால், தமது எழுத்தாணிப் பேழையைத் திறந்து, நாணல் எழுதுகோலை வெளியே எடுத்து, காகிதத்தை தமது கையில் வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து நமக்கு கிடைத்துள்ள, சுருக்கமான அவரது முக லட்சன வர்ணனையை, அவர் வரைந்திருக்காலாம்:

தோழிகளுடன் தாஹிஃரி


‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, அக்காநகருக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும்

நன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல…,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார்.

தோழிகளுடன் தாஹிஃரி


மேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.

அவர் சிறிய வயதினராக இருந்த போது, விளையாடுவதற்கு பதிலாக, காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார். விரைவில், அதன் பயனாக, கடைசி ஹாடிஸ் வரை இஸ்லாத்தை பற்றி போதிக்க அவரால் முடிந்தது. அவரது சகோதரர் கூறுவது: “அவரது அறிவாற்றலுக்கு பயந்து, அவரது தமையனார்கள் மற்றும் மைத்துனர்கள் அனைவரும் அவரது முன்னிலையில் பேசவே பயப்படுவோம்,” என்பதாகும். இது, எதிலும் முதன்மை வகிக்கும், தமது சகோதரிகள் அனைவரும் அவருக்காக பனிவிடை புரிய காத்திருக்கவும் கூடிய, ஒரு பாரசீக சகோதரரின் வாயிலிருந்து வருவதாகும்.

தோழிகளுடன் தாஹிஃரி


தாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்!” என உறக்கக் கூவினார்.

தோழிகளுடன் தாஹிஃரி


ஆக, தாஹிரிஃ, காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங்கள் சூழ்ந்ததும், சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான, வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் நகரிலேயே வாழ்ந்தார். ஒரு பரந்த முற்றத்தில் அமைந்த, மண் ஜாடியின் நீரின் குளுகுளுப்பை கொண்டதும், தமது விளக்கையும், கைவேளைப்பாடு கொண்ட பருத்தித் துணியில் சுற்றப்பட்ட புஸ்தகங்களையும் வைக்கக்கூடிய மாடங்களும் கொண்ட, பொண் நிற வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். அவர் பெற்றிருந்த அனைத்தையும் பார்க்கையில் பிற பெண்களாக இருந்திருந் தால் நிச்சயமாக மனதிருப்தி அடைந்திருப்பர், ஆனால் தாஹிரிஃயோ அவற்றினால் அமைதி அடையவில்லை; அவரது மனம் அவரை அலைக்கழித்தது; இறுதியில் அவர் அனைத்தையும் துறக்க வாய்பு ஏற்பட்டு, மலைகளைக் கடந்து பாரசீகத்தை விட்டு வெளியேறி, குவிந்த கோபுரங்கள் சூழ்ந்த கர்பிலா நகரருக்கு உண்மையைத் தேடி சென்றார்.

ஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார்.

தோழிகளுடன் தாஹிஃரி


“ஊக்கம் நிறைந்த சுபாவம், தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு, குறிப்பிடத்தக்க சமநிலை, வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”, என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது, “அவரது உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில், அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும், இருந்தும் அவர் உரை நிகழ்த்தும் போது.நாம் நமது ஆன்மாவின் ஆழம் வரை நெகிழ்வுற்றும், வியப்பால் நிரைந்தும், கண்களில் நீர் மழ்கிடவும் செய்வோம்.” எவருமே அவரது வசீகர சக்தியிலிருந்து தப்பிக்க முடியாதென நபில் கூறுகிறார்; ஒரு சிலரே தொற்றிக்கொள்ளும் அவரது சமய நம்பிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அனைவருமே அவரது சீலத்தின் அசாதாரண தன்மைகளுக்கு சாட்சியம் கூறி, அவரது வியப்பூட்டும் இயல்பால் ஆச்சர்யமடைந்து, அவரது தூய்மையான சமயநம்பிக்கைக்கு சாட்சியமும் பகர்வர்.

மிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா! நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார், இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன…“

அவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் பார்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும்.

கர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்… ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை… இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.”

அதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் எனவும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார்.

அந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர். தாஹிரிஃயின் ரசிகரான இவரே பாரசீக மண்ணில் இறைவனின் சமயத்திற்காக இறந்த முதல் மனிதராவார்; அவரை தெஹரானில் கொன்றனர்; அவர் தமது கொலயாளியை தான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பரை வரவேற்ப தைப் போல் வரவேற்று, தமது இறுதி வார்த்தைகளாக, “எனது எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமாக உள்ளவரே! உங்களைக் கண்ட வினாடி முதல் மனிதர்களின் எதிர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நான் கைவிட்டுவிட்டேன்,” எனும் வார்த்தைகளை விட்டுச் சென்றார். மீதமிருந்த மற்ற கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், புதைப்பதற்கு அவர்கள் உடல்களின் ஒரு பகுதி கூட மிஞ்சவில்லை எனவும் கூறுப்படுகிறது. இருந்தும் இறந்து போன முஜ்டாஹிடின் வாரிசுகள் மன திருப்தி அடையவில்லை. அவர்கள் தாஹிரிஃயை குற்றம் சாட்டினர். அவரை அவரது தந்தையின் வீட்டில் அடைத்து வைத்து, அவரை கொலை செய்யவும் ஆயத்தமானார்கள்; ஆனால் அவரது காலம் கனியவில்லை. அப்போது ஒரு நாள் பிச்சைக்கார கிழவி ஒருத்தி வாசலில் நின்று உணவுக்காக ஓலமிட்டாள்; ஆனால் அவள் பிச்சைக்காரியல்ல பஹாவுல்லாவால் அனுப்பப்பட்ட ஒருவர் மூன்று குதிரைகளுடன் காஃஸ்வின் கோட்டைவாசலருகே நிற்ப தாக தகவல் கொண்டுவந்தவள். தாஹிரிஃ அப்பெண்மணியுடன் தப்பித்துச் சென்று, காலைப்பொழுதிற்குள் தெஹரானை அடைந்து, பஹாவுல்லாவின் வீட்டையும் சேர்ந்தார். இரவு முழுவதும், அவர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவர் மறைந்துவிட்டார்.

இப்போது காட்சி பாடாஷ்ட் பூங்காவின்பால் திரும்புகிறது. பசுமையான தோட்டங்கள், அவற்றை மறைத்திடும் மண்சுவர்கள், பாலையின் மீது ஓடிய ஒரு நீரோடை, அதற்கப்பால், வானளாவும் உயர்ந்த மலைகள். “துன்பம் தரும் மலை” என பாப் அவர்களால் வ ருணிக்கப்பட்ட ஷிஃரீக்கில் பாப் அவர்கள் சிறையில் இருந்தார். அவர் வாழ இரண்டு குறுகிய வருடங்களே எஞ்சியிருந்தன. இப்போது பஹாவுல்லா, முன்னனி பாப்’இக்கள் என எண்பத்தொரு பேருடன் பாடாஷ்ட் வந்து சேர்ந்தார். அவரது ஸ்தானம் இதுகாரும் அறியப்படாமலேயே இருந்தது. பாப் அவர்களால், முகம்மது அவர்களால், இயேசுவால், ஸாராதுஸ்ட்ராவால், மற்றும் அனேகரால் வாக்களிக்கப்பட்டவர் அவர். நூற்றாண்டுகள் தோறும் தூதருக்குப்பின் வந்த தூதர்களான அவர்களால் முன்கூறப்பட்ட அவர் அறியப்படாமலேயே இருந்தார். அவரது நாமம் உலகம் முழுவதும் நேசிக்கப்படப் போகின்றது என படாஷ்ட்டில் உள்ளோர் எப்படி அறிந்திருக்க முடியும்? உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில்? அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும்? ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார்? அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார்! தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, அவர்கள் கண்டனரே! ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே!” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோடு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “… அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்… பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே… இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்களை சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்டுள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக… நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே! நான் சொல்லப்போவதை இப்போது நீர் கேளும்… நீர் எவருக்கு சேவை செய்கின்றீரோ, அந்த யஜமான் உமது உற்சாகத்தை ஈடு செய்யப்தோவது இல்லை; மாறாக, அவரது உத்தரவின் பேரில் நீர் கொடுமையாக அழியப்போகின்றீர். உமது இறுப்பிற்கு முன், உண்மையான அறிவின்பால் உமது ஆன்மாவை ஏற்றம் அடையச் செய்ய முயற்சிப்பீர்.” என தெரிவித்தார். அதை நம்பாமல் நகரத்தலைவர் அந்த அறையை விட்டகன்றார்.

ஆனால் 1861-இன் பஞ்சகாலத்தில் மக்கள் செய்த புரட்சியில் தாஹிரிஃயின் கூற்று மெய்ப்படுத்தப்பட் டது. அந்த உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்ட புரட்சி; மற்றும் மாஹ்முட் காஃனின் இறப்பு பற்றிய நேரடி சாட்சியம்: “தெஹரானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு முடிவை நெருங்கியது, கடக்க முடியாதபடி இருந்த சாலைகளினால் உணவு மக்களைச் சென்று அடையவில்ல. ஐரோப்பியர் எவரேனும் சாலையில் தென்பட்டவுடன் பஞ்சத்தால் அடிபட்ட பெண்கள் அவரைச் சூழ்ந்து உதவி கோரி முறையிட்ட னர்… மார்ச் முதல் நாளன்று… பாரசீக தலைமை செயலாளர், முகம் வெளுத்தும் நடுங்கியவாறும் உள்ளே வந்து, புரட்சி ஒன்று வெடித்து விட்டதாகவும், கலாந்தர் எனப்படும் நகரத் தலைவர் அப்போதுதான் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தை தெருக்கள் வழியாக மக்கள் அவரது உடலை முழு நிர்வாணமாக இழுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். விரைவில் ஒரு பேரிரைச்சல் கேட்டது, சன்னல் வழியாக பார்த்தபோது, தெரு முழுவதும் மிகவும் கொந்தளித்துப் போயிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கொலைக் கள த்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டும், அங்கு நிர்வாணமாக தொங்கவிடப்பட்டும் இருக்கப்போகும் மூன்று பிணங்களைச் சூழ்ந்திருந்தனர். அவ்விஷயத்தைப் பற்றி தீர விசாரித்த போது, பிப்ரவரி 28-ஆம் திகதி அன்று, வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷா மன்னனை, உணவு பற்றாக்குறை பற்றி கோஷமிட்டும், அவரது கண் முன்னேயே ரொட்டிக் கடைகளை தீயிட்டும் சூரையாடிக் கொண்டும் இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் சூழ்ந்தது… அடுத்த நாள், மார்ச் முதல் நாளன்று… ஹாஜி பாபாவின் ஸைனாப் வீசியெரியப்பட்ட கோபுரத்தின் மீது ஷா மன்னன் ஏறி தூரதர்சினியைக் கொண்டு மக்கள் கொந்தளிப்பை பார்த்துக் கெ ணண்டிருந்தான். நன்கு உடையனிந்தும், பல வேலையாட்களுடனும் இருந்த கலாந்தர் கோபுரத்தின் மீது தானும் ஏறி, அவ்வித நிலை ஏற்படும் வரை நடவடிக்கை எடுக்காத, தன்னை கடிந்து கொண்ட அரசனோடு சேர்ந்து தானும் நின்று கொண்டிருந்தான். அரசனின் கண்டிப்பை பொறுக்க மாட்டாத கலாந்தர், அந்த புரட்சியை தானே அடக்கிக் காண்பிக்கின்றேன் என சவாலிட்டு, கீழே இறங்கி ஒரு பெரும் தடியால் பல பெண்களை தன் கைகளாலேயே தாக்கினான். அதை தாங்கமுடியாமல், தாங்கள் பட்ட காயங்களை அரசனிடம் காண்பித்து அதற்கு நியாயம் கேட்டு பெண்கள் கூட்டம் அரசனிடம் வந்தது. அரசன் கலாந்தரை அழைத்து, “என் கண் முன்னாலேயே நீர் எமது பிரஜைகளிடம் இவ்விதம் நடந்து கொள்ளும் போது உமது இரகசியச் செயல்கள் எல்லாம் இன்னும் எவ்வ ளவு கொடியனவைகளாக இருக்கக் கூடும்?” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப்! கயிறு, கழுத்தை நெறித்துக் கொல்லுங்கள்,” எனும் அந்த பயங்கர வார்த்தையை அரசன் உச்சரித்தான்.

ஓரிரவு கலாந்தரின் மனைவியை தமது அரைக்கு தாஹிரிஃ அழைத்தார். அவர் மின்னும் வெண்மை கொண்ட வெள்ளை பட்டினால் ஆன ஒரு ஆடையை அனிந்து கொண்டிருந்தார்; அவரது கேசம் ஒளிர்ந்தது, அவரது கண்ணங்கள் வெள்ளைப் படுத்தப்பட்டு மென்மையாக வெளுத்திருந்தன. அவர் சுகந்த மணம் வீசும் வாசனை திரவியங்கள் அனிந்திருந்தார், அதனால் அந்த அரையே மணம் வீசியது. “நான் எனது அன்பரைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றேன்,” எனக் கூறினார். “… நான் சிறைபடுத்தப்பட்டும், தியாகமரணம் அடையவும் கூடிய நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்றார். அதன் பின், அவர் அந்த பூட்டிய அறையினுள்ளேயே முன்னும் பின்னுமாக நடந்துகொண்டும், பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டும் இருந்தார். கதவிற்கு வெளியே கலாந்தரின் மனைவி, உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த அவரது குரல் ஒலியை செவிமடுத்து, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். “இறைவா, இறைவா, அவரது உதடுகள் தொடத் துடிக்கும் அந்தக் கோப்பையை அவரிடமிருந்து அப்பால் கொண்டு செல்லுங்கள்,” எனக் கதறினாள். நாம் அந்த பூட்டிய கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாது. அந்த கடைசி சில மணி நேரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நாம் ஒரு யூகமே செய்யமுடியும். அது அவரது சொத்துக்களை பிரிப்பதற்கோ, நண்பர்களுக்கு பிரியாவிடை சொல்வதற்கோ என்றில்லாமல், மக்கள் அனைவருடைய ஆண்டவரும், அனைவராலும் நேசிக்கப்படுபவருமான அந்த ஒரே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காகவே இருந்திருக்கும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், அவரது புனித ஆன்மாக்கள், மற்றும் அவரது தூதர்கள், அனைவரும் அங்கு இருந்தனர்; இது போன்ற நேரங்களில் அவர்கள் ஆஜராகியிருப்பார்கள்; ஊனைத் தாண்டி அவர்களுடன் தாஹிரிஃயும் ஆன்மீக நிலையில் சேர்ந்திருந்தார். அவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் முகத்திரையிட்டுக் கொண்டு தயாராகவே இருந்தார். “என்னை ஞாபக த்தில் வைத்துக் கொள், எனது களிப்பில் நீயும் சந்தோஷப்படு” என போகும் போது கூறிச் சென்றார். அந்தப் பாரசீக இருளில் அவர் அவர்கள் கொண்டு வந்திருந்த குதிரை மீதேறிச் சென்றார். நட்சத்திர ஒளி மரங்களின் மீது நன்கு விழுந்தது. இராப்பாடிகளின் சலசலப்பு மிகுந்திருந்தது. ஒட்டகங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை ஏதோ ஒரு திசையில் ஒலித்தது. குதிரைகளின் குழம்பொலி சாலையின் மண்ணில் தடதடத்தது. இப்போது தோட்டத்தில் இருந்த வீரர்களின் போதை மிகுந்த சிரிப்போலி கேட்கின்றது. அவர்களது இருக்கமான முகங்களில், விருந்து மேஜை விரிப்புகளில், கொட்டிக் கிடந்த மதுவின் மீது, வர்த்திகளின் ஒளி வீசியது. தாஹிரிஃ அவர்கள் தலைவன் முன் நின்ற போது அவன் அவரை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை. “இங்கிருந்து போங்கள், அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கத்தினான். பிறகு அவன் பார்வை அவனது மதுக் கோப்பை மீது சென்றது. தாஹிரிஃ தம்மோடு ஒரு பட்டுக் கைத்துனியை கொண்டு வந்திருந்தார்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே அவர் அதை நெடுங்காலமாக சேர்த்து வைத்திருந்தார். இப்போது, அதை, அவர் அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அதைக் கொண்டு அவரது கழுத்தை சுற்றி இரத்தம் பீரிடும் வரை நெறித்தனர். அவரது உடல் அசைவுகள் நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர், பிறகு அந்த உடலை பாதி தோண்டப்பட்ட தோட்டக் கிணறு ஒன்றில் கிடத்தி, அதை மண்ணால் நன்கு மூடிச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூசிய அவர்கள் பார்வை பூமியின் மீது படர்ந்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்து தெஹரானில் பல பருவகாலங்கள் கடந்துவிட்டன. வடக்கில் உள்ள மலைகளை பனிக் காலத்தின் பனிக்கட்டிகள், பல ஆயிரம் கண்ணடிகளைக் கொட்டியது போன்று, வெள்ளி மலைகளாக்கின. தோட்டத்தில் பேரி மலர்கள் படர்ந்திடவும், நீல மழைக் குருவிகள் வானத்தில் பாய்ந்திடவும், இளவேனிற் காலங்கள் வந்து சென்றன. கோடை காலத்தில், நகரமே புழுதித் படலம் சூழு, மக்கள், மலைகளின் நீர் படர்ந்த பாறைகளையும், பச்சை படர்ந்திட்ட பள்ளத்தாக்குகளையும் நாடிச் சென்றனர். மரக்கிளைகளெல்லாம் வெறிச்சோடிய சரத் காலத்தில், மயக்கம் தரும் அகன்ற புல்வெளிகளும் வானமும் நகரத்தை மீண்டும் வலம் வந்தன. அந்த இரவுக்குப் பிறகு பல காலம், ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள், ஆகிவிட்டது. ஆனால் அன்று இருந்த அந்த ஒரே குரலின் இடத்தில் இன்று பல ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன. பல மொழிகளில் வார்த்தைகள், பல எழுத்துப் படிவங்களில் நூல்கள், மற்றும் கோவில்களும் எழுந்துள்ளன. எந்த அன்பிற்காக அவர் இறந்தாரோ அந்த அன்பு பற்றிக் கொண்டு பரவி, தியாகம் செய்ய ஒரே ஒரு இதயம் இருந்த இடத்தில் இன்று பல ஆயிரம் இதயங்கள் தங்களை அர்ப் பணிக்க காத்திருக்கின்றன. அங்கு புழுதியின் கீழ், அவர் மௌனமாக இல்லை. அவரது உதடுகள் மண்ணோடு மண்ணாகிவிட் டன, ஆனால் அவற்றின் சுவடுகள் பொண்ணான மொழி பேசுகின்றன.

பாஹிய்யா காஃனும்


பாஹிய்யா காஃனும்

அவர் பஹாவுல்லா, ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என அறியவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘காஃனும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘காஃனும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் – நாள் முழுவதும் காஃனும் கடமை உணர்ச்சியுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து, தமது தினசரி ஜீவ உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச் சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.

Tomb of Bahiyyih Khanum
பாஹிய்யா காஃனும் அவர்களின் கல்லறை


தனிப்பாங்கு மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும் விதம், வசீகரம் கலந்த திடகாத்திரம், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும், அதே வேளையில் இலகுவாகவும், அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச் செய்வதில், – மென்மை கலந்த பெருந்தன்மை மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது, முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர் கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல், ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின; வெளித்தோற்றம் மற்றும் நடப்பு நாகரீகம் இரண்டையும் கடந்த, சக மனிதர் ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும் அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை காஃனும் அவர்களுக்கு விளங்கின.

உயர்குடி மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த காஃனும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும் கிழக்கத்திய கட்டுப்பாடுகளை, ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும், வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் வார்த்து, தமது ஆன்ம சக்திகளை அங்கு வெளிப்படுத்தி, தமது உயர் பண்புகள் பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க வெளிப்படுத்திய அவருடைய கவனம், மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன் ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க முயன்றதில்லை, அவர் முடிவான எண்ணங்கள் யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே அடியில் நொறுக்கும்போது, காஃனும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும் திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில் வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும் மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும் சுமையை ஏற்றமாட்டார், தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும். காஃனும் அவர்களின் ஆதிக்கம் யாருமே உணராத நிலையில் செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை அங்கங்களில், மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு, கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால் நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல், களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள். பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு இருக்கும். இதைப்போலவே காஃனும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும் போது அடையும் இதமான மனநிறைவை, அவரைப் பிரியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம். ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை, ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப் பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை ஆசியினைக் கண்ணுற, ஃகாணும் அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, காஃனும் அவர்கள் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக காஃனும் அவர்கள், அப்பொழுதுதான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை, வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும் நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை உதிர்த்து, வெள்ளை நிறத்திலான திருமண உடை, முகத்திரை, தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை காஃனும் அவர்கள் மெல்லத் தொட்டு, மென்மையான குரலில், “எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில் மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து, திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.

Bahiyyih Khanum
தமது வாலிபத்தில் பாஹிய்யா காஃனும்


பாரசீகரிடையே, ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த சொல்லை காஃனும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’ ‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின் ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை தனது பிடியிற் கொள்ளும்; ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி அன்பையும் அது எதிர்பார்க்கின்றது. காஃனும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம் கடந்தது. காஃனும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் மற்றும் உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன் பட்டுள்ளோமே, என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல் செய்துவிடுவார். காஃனும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே, என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் காஃனும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல் செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம், மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில் தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம் தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது; அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக கிடைக்கும். அந்த நேரத்தில் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.

அவர் நம்மை அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்; அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா அல்லவா, என்றெல்லாம் பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது இல்லை, ஆடுகளையும் ஓநாய்களையும் பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை, ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன் சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்; தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல் இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ, அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்; நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால் பரிவும், அப்படியே முயற்சியின்போது துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும், தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே கொள்வார்.

யாராவது ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால், அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித கொடுமை உணர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல் வார்த்தைகள் காஃனும் கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால் கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்துணர்வின் ஆழம், மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி அவற்றின் காரணங்களை கண்டறிந்து, அதன்மூலமாக அந்தத் துன்பமும், துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.

எல்லா தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர், தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது, அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம் நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர் வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும். தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள், தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு சென்றிருந்தபோது, அங்கு உட்கார்ந்து குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று காஃனும் அவர்கள் தங்களுடன் இருந்தது, குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர் பகிர்ந்துகொண்டார்… ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு, அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற இன்பத்திற்காகவும், குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும் அவர் நன்றி செலுத்தினார்!

தமக்குள் பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தபோதிலும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை, தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை. பரோபகாரம் என்பது அவர் சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல, அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும் அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு, அவருக்குள் பாயும், என்றும் தவறாத, தொடர்ச்சியான அன்பின் உந்துதலே என்பதை உணரலாம். குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், தின்பண்டங்கள், மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு மலர்கள், கைப்பொருள்கள், ரோஜா அத்தர், ஒரு ஜபமாலை, அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள் எதையாவது பரிசாக வழங்குவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது தேவைப்படும் பிறருக்கு, ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல, வாய்க்கால்; மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும் போக்கிஷம்.

அதே சமயம் தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை, அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின் பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில், கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக் கனல், வாழ்வின் அனைத்தையும் சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும், ஒரு பார்வையாலும், அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும் வெளிப்படுத்தினார்.

பலர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு, மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர் ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம், அப்படி இருந்திடவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல, சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும் மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல, மாறாக, மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி மிகுந்தவர், தம்மைச் சூழ்ந்திருக்கும் இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.

அபூர்வமாகவே தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர், ஆனால் காஃனும் அவர்களோ பிறர் சகவாசத்தில் அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன் தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த அமைதியில் பெற்றார், குழந்தைகள் நிறைந்த, ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில் சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ, சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச் சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர் அல்லது காஃனுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர். அவர் அறைக்கு வெளியே நாமும், காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக் கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது உலகத்தில், அந்த அறையில், நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை: அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல பீதி, கூச்சம், பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம் உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார், சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு நல்லவர், நான் அப்படி அல்லவே என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற் போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற பறவைகளாவோம்.

பரந்த அந்த வீட்டின் தலைவியாகவும், அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும், தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால், அதை உடனடியாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி உட்கார்திருந்தாலும், அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான ஐக்கியத்திற்கென்று, பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அந்த விநாடிகளை முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள், காலத் தீவுகள்.

அவர் வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கவில்லை, தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு என்றோ, வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில் இறங்கும் முன்பாக, தொடர்ந்து இதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ, அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து, தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக விளங்கி, யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் பழக்கம், ஒரு தூண்டுதலும் தேவைப்படாத இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட, பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும் ஒருவரவர், ஏனென்றால் அவர் பாவத்தின் பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு, பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார், அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது கிடையாது, அவரது போக்கில் தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப் புறப்பட்டால், அங்கு அபூர்வ பன்புகளின் மனிதப் பிரதிபலிப்பையே கண்டும், இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின் அடிப்படையில் இனைத்தும், ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும் செய்யும்.

உலக ரீதியில், அவர் கற்றுணர்ந்தவர் என்றோ அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள அறிவூற்றுகளிலிருந்து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக விளங்கினாலும், அந்த இதயம், மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை, எழுதினாருமில்லை, ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கக் காண்போம்; இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா பொருள்களும், ஜீவனுடனோ அல்லது ஜீவனற்றோ, செய்தி ஒன்றை படிப்பதற்கு அட்சரங்களாகவும், உயிர் மற்றும் மெய் எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம் சொல்லியதுமில்லை, போதித்ததுமில்லை: நம்மை வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை: வற்புருத்தலுக்கோ, கவரும் முயற்சிக்கோ அவர் தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை, ஆழத்திற்கு ஆழம், அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.

மனம் கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால், நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை தீர்க்கவோ முனையமாட்டார். அவற்றை அவருடன் இருக்கும் போது நாம் மறந்துவிடுவோம். அவருடைய நிர்மலமான அன்பில் குழப்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோம். அவரோடு நாம், கொந்தளிப்பு, சந்தேகங்கள், மற்றும் கேள்விகளுக்கும் அப்பால் உள்ள ஒரு விழிப்புணர்ச்சி நிலையை அடைவோம். நாம் மறு உறுதிப்படுத்தப்படுவோம். ஒரே வார்த்தையில் நிச்சயநிலையையும் உறுதிப்பாட்டின் மெய்மையையும் அவர் அளிப்பார்.

சூரியனின் கதிர்கள் பட்டு வெப்பம் அடைவதற்கு முன்னால் அதிகாலையில் அத்திப்பழத்தை பறிக்கும் போது, அதன் அடியில் தெளிந்த தேன் கலந்த ஒரு சொட்டு நீர் இருக்கும். அத்தியின் ஆவியோ எனும் அதன் இனிமை, இரவில் காய்ச்சப்பெற்று, அதிகாலையில் ஒரு சிறு துளியாகச் சுண்டி, அந்த குளிர்ந்த பழத்தின் அடியில் வீற்றிருக்கும்…. அவ்வாரே, மெய்மையின் திட உடலோடு கூடி அதன் சாரத்தையும் காஃனும் வழங்கினார்.

அன்பை அதன் பலவகைகளிலான வழிகாட்டும் சக்திகளுடன் கூடி, பல வர்ணங்களில் பிரதிபலிக்கப்பட்ட அதன் மகிமையோடு, நமக்குக் காட்டினார், அதன்(அன்பின்) மூச்சின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, காற்றிற்கு தன்னை ஒப்படைத்த மரம், உருவம்பெற்ற தென்றலாக எப்படி அசைகின்றதோ, அதே போன்று நாம் தற்போது முழுமையாக, புறிந்துகொள்ள, சுமக்கமுடியாத நிலையில், அன்பின் பிண்ணனியில், ஒரு மாபெரும் சக்தி, அதன் சாரம், உள்ளதென்பதை விளக்கினார்.

நாம் திருப்தியற்றும், நிலையில்லாமலும் அவரிடம் சென்றபோது, அந்த திருப்தியின்மையும் போதாமையும் ஆன்மாவின் நிலையற்ற தன்மையே என்பதைக் கண்டுகொள்வோம். இந்தச் சோதனைக்கு அப்பால் என்றும் அடுத்த சோதனைக்கும் அப்பால் என்றும் ஆசிரமத்தையும் அமைதியையும் தேடி நாம் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இதோ அவரது வெள்ளை அறையில் அவற்றைக் கண்டோம். சிறு சிறு விஷயங்களில் சுவர்க்கத்தையே கொண்டுவரவும், முடிவற்ற அதை நான்கு சுவர்களுக்குள் கவரவும் இங்கு வழிகள் கண்டோம். இதோ இங்குதான் நிவாசம்.

இவ்வுலகையும் அவ்வுலகையும் அவர் வேறுபடுத்திப் பார்த்ததில்லை, அல்லது தமது ஆயுளில் தாம் கண்ட கொடுமைகளின் பயனாக, ஒளிமிக்க அற்புதங்களைக் கொண்ட அடுத்த உலகத்திற்கு தப்பிச் செல்லவும் அவர் ஏங்கியதில்லை. தமது தினசரி வாழ்க்கையில், அன்றாட நிகழ்வுகளை கனவின்பங்களின் விளிம்பிற்கே கொண்டுசென்றார், அற்பமான நிலையற்ற விஷயங்களிலும் அவர் அற்புதங்களைக் காண்பித்தார். சிறு சிறு விஷயங்கள் அவருக்கு சிறு விஷயங்கள் என்றில்லாமல், அவையெல்லாம் அகன்ற ஏதோ ஒன்றின் வெவ்வேறு கூறுகளாகவே விளங்கின. துன்பமுற்றோர் வருங்காலத்தில் இன்பம் பெற ஆறுதல் கூறாமல், நிகழ்காலத்திலேயே சூழ்ந்துள்ள இன்பத்தை அவர் உணரச் செய்வார். அவருடன் இருக்கையில், வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய கூறுகளிலும் அற்புதங்களைக் காண்போம்,ஒரு பூ, சுவற்றில் படரும் ஒரு நிழல், அவரது முகத்திரையின் ஒரு மடிப்பு, அல்லது கீழே தோட்டத்தில் கேட்கும் ஒரு குரல்; எல்லாமே மாயாஜாலங்களுடன் இனைக்கப்பட்டன. அனைத்தையும் இயக்கும் ஆவியின் மர்மங்களை, ஒவ்வொரு கண நேரத்தின் விலைமதிப்பற்றத் தன்மைகளை, உணர்ந்துகொள்வோம். இந்தத் தருணம், இந்தப் பொழுது, அந்த அந்தமில்லாத ஒன்றின் அழகு படர்ந்து, நிரந்தர மற்றும் நிலையான மகிழ்ச்சித் துளி ஒன்றையும் கொண்டுள்ளது.

ஆடம்பரங்கள் இல்லாமலும், பொருட் செல்வங்கள் குறைவாக, அதுவும் எந்த ஒரு பிரத்தியேக மதிப்பும் இல்லாதவையாக வைத்திருந்தாலும், உலகைத் துறந்தோர் போல் தமது வாழ்க்கையில் அவர் எதையும் துறக்கவில்லை. எதிலும் அழகை மிகவும் விரும்புவார். தம்மைச் சுற்றியுள்ளவற்றிக்கு அவருக்குள் விளங்கும் ஒழுங்கின் ஒளியையும், சுகந்தத்தையும், நேர்த்தியையும் அளித்தார். ஆனால் வெளித் தடயமாக விளங்கிய இந்த ஒளிக்கான உள் விவேகத்தை விவரிக்கக் கிளம்பினால், கிடைக்காத வார்ந்தைகளுக்காக வீனே தேடி அலையவேண்டியதுதான். அவரை அறிந்தோருக்கு எந்த ஒரு அழகிய பொருளும், பூரண பண்பட்டமையும், காஃனுமையே நினைவு படுத்துபவையாகவே இருக்கும். பூரண அழகில் அவர் அமரராய் விளங்குகின்றார். அவருடைய சுகந்த மனம் மற்றும் மென்மையை இளம் பச்சையும் வெள்ளியும் சூழ்ந்த இளவேனிற் காலத்தில் காண்போம்: தோட்டத்தின் நீரூற்றில் அவருடைய குரல் ஒளி கேட்கும். குழந்தைகளின் சிரிப்பொலி, கடலின் அலையோசை அவரையே நினைவுபடுத்தும். எங்கெங்கு மகிழ்ச்சியும் தோழமையும் உண்டோ , அங்கெல்லாம் அவரும் இருப்பார்.

மேற்கு நாடுகளில் உள்ள நாம் அவரை அவரது இறுதி நாட்களிலேயே கண்டோம். ஆனால், ‘இவரை வாழ்வின் சாயுங்காலத்தில் காணாமல், அவருடைய வாலிபப் பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே அறியாமற் போனோமே,’என்ற எண்ணம் அப்பொழுது மனதில் எழக் காரணமே இல்லாமற் போனது. முதிய வயதினரோடு நாம் ஒப்பிடும் சில மனப் பழக்க வழக்கங்களின் அறிகுறிகள் அவரிடம் இல்லை. கடந்த காலத்தைப் எண்ணிப்பார்த்து, வருடத்திற்குப் பின் வருடம் திருப்பப்படும் நினைவேடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் பழைய நினைவுகளில் பெருமூச்சு, முதிய வயதில் அவர் மனதில் ஓடுவது தெரிகின்றது, அந்த நினைவுகள் தெளிவாக மனதில் நின்றாலும், உயிருள்ள உணர்வுகளின் வர்ணம் மற்றும் முழுமை அற்றுப்போனவை அவை. காஃனும் அவர்கள் பழைய ஏடுகளைத் திருப்பி, உருண்டோடிய வாழ்வின் காணாமற்போன விநாடிகளை மறுபடியும் எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்து போன வாழ்வின் முக்கிய இழைகள் நடப்பு வாழ்வு முறையின் இழைகளோடு பின்னப்பட்டுவிட்டன. அவருடைய நிகழ்காலம் எல்லா கடந்தகாலத்தையும் உள்ளடக்கியது.

அவர் இப்போதும் அழகாக இருக்கின்றார் என்று கூறமாட்டோம், ஏனென்றால் அது கடந்தகால தருணங்களை பாடம் பன்னும் ஒரு செயல். அவரது தற்போதைய அழகு சிறு வயதில் இருந்த உடல் அழகின் தொடர்ச்சி என்றில்லாது, முழுமை பெற்ற வாழ்வே அவரது அழகாக விளங்கியது. தமது சக்தியையும் வடிவமைக்கும் மேன்மையையும் ஒன்று திரட்டி, ஒரு காந்தி நிறைந்த மென்மை அவர் முகத்தில் இழையோடுவதைக் காணலாம். தெளிந்த நீலமாக இருக்கும் அவர் கண்களைத் தவிர பிற கவர்ச்சிகள் இன்று மங்கிவிட்டிருந்தாலும், அவரது மிருதுவான தேகத்தின் அமைப்பு காலச் சிற்பியினால் மாற்றப்பட்டிருந்தாலும், மிகுந்த மெலிவு மற்றும் மென்மையாலும், ஸ்பரிசத்தில் மிருதுவாகவும், அமைப்பிலும், உயர்ந்த சிந்தனை, செயல்கள் ஆகியவற்றின் இனைப்பால் உண்டான உயர்ந்தபோக்கு ஆகியவற்றால் அவர் புற அழகைவிட உயர்ந்தே இருந்தார். அவர் அங்க அசைவுகள் அர்த்தங்களை உள்ளடிக்கியிருந்தன: நீண்டு வரும் அவரது கைகள் நம்மைத் தொடும் முன்னரே நம்மை ஆசீர்வதித்திருக்கும். பேசும் மொழிக்குத் தமது சுவபாவத்தின் கவர்ச்சியை கலப்பதில் இளமையின் வேகமும் முதுமையடையாத சக்தியும் அவருக்கு இருந்தன. ஒரு சிறிய கதை சொல்கையிலோ அல்லது ஒரு சிறிய விஷயத்தை விவரிக்கும் போதோ, அவர் நிதானித்தும் புன்னகைத்தும், அந்தக் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி; ஒளியேற்றிய பிறகே நமக்குக் கொடுப்பார். அமளியும் கலவரங்களும் நிறைந்த அவருடைய இளமை பருவத்தில் அல்லது தேசப்பிரஷ்டத்திலும் சிறைவாசத்தின்போதிலும் நடந்த சம்பவங்களை விவரிக்க நாங்கள் வேண்டிய போது, விவரிப்புக்கு அடங்காத காட்சிகளை மறு விமர்சனம் செய்யவோ அல்லது தமது துன்பம் நிறைந்து வாழ்வின் ஒரு பகுதியை வெளிப்படுத்த முயற்சிக்கவோ மாட்டார். தம்முடைய அமைதி நிறைந்த உள்மனதிலிருந்து ஜீவனுள்ள காட்சிகள் மற்றும் விசனமான அம்சங்கள் சிலவற்றை வெளிவர அனுமதித்து, நம் எல்லோரையும் இந்தச் சிறு காட்சிகளைக் கொண்டு மனம் நெகிழச் செய்து, அதனால் எல்லா காலங்களிலும் அவர் அனுபவித்த கொடுந் துயரம் மற்றும் அவர் மனம் அடைந்த துக்கத்தின் முழு அளவையும் உணரச் செய்வார்: இந்தத் துயரம், இந்த வலி யாவும் அவர் தமக்கென்று அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் உணர்வோம். ஒரு பார்வையில் மனவேதனையை அப்படியே வெளிப்படுத்துவார். இந்தத் தாக்கம் நிறைந்த பார்வையில், முதலில் மனிதத் துன்பங்களைக் காண்போம், பிறகு அதன் பின்னனியில் இந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள், தமது இருளடைந்த புறிந்துணர்வினால் அறிய முடியாத அக்கொடுமைகளின் தடயங்களைக் காண்போம்.

அவருடைய சுமைகள் பார்வைக்கு எளியவையாகத் தோன்றின, காரணம் அவர் அந்த சுமைகளின் பாரத்தால் கூனிப்போகவில்லை, பெரும் காரியங்களை கடும் முயற்சிகள் ஏதும் இன்றி நிறைவேற்றுவதாகத் தோன்றும். அவர் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவோ அல்லது வேறு ஓன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவோ தெரியவேயில்லை, காரணம் அவர் முகத்தில் களைப்பு மற்றும் பிரயாசைக்கான அறிகுறிகள் கிடையா. அவர் வாழ்நாள் முழுவதும், மனிதப் போராட்டத்தின் தூசிப் படலம் சூழ்ந்த தகிக்கும் நேரங்களையோ, மூச்சு வாங்கச் செய்யும் சிறிய சாதனைகளையோ அறியவில்லை, ஆனால் இதயம் சாந்தத்தால் உயர்ந்து, அடுத்தடுத்து வரக்கூடிய சிறமம் மிக்க நாட்களை எதிர்நோக்கி, கால் இடறாமல், முன்நோக்கிச் சென்றார்.

அவர் வாழ்வை ஒரு தியாகமரணத்திற்கு ஈடான வாழ்வு என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அதை அவ்விதமாக நினைக்கவேயில்லை. அவர் உயிர்த்தியாகிகளின் புளகாங்கிதத்தில் மெய்மறந்துப் போகவில்லை மற்றும் அதன் கொடியை உயர்த்தி, எதிர்கொள்ளப் பாய்ந்து முன்நோக்கிச் சென்று வீர தீரத்துடன் அர்ப்பணம் செய்யவில்லை. அவர் ஆர்வம் ஒரே சீராக ஜுவாலை விட்டுக்கொண்டிருந்தது. சோதனைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்நோக்கும் வேளைகளில் அவசரப்படவுமில்லை அல்லது பின்தங்கவுமில்லை, மாறாக அபாயம் நிறைந்த பாதையில் மூச்சு விடுவதுகூடத் தெரியாமல் அமைதியாகச் சென்றார். அவர் மனோதைரியம் அவருடைய புறிந்துகொள்ளும் நம்பிக்கையிலிருந்து பிறந்தது மற்றும் இந்த நம்பிக்கையே, இந்த விளக்கமே வருடா வருடங்கள் முடிவில்லா உழைப்பிற்கும், நுனுக்கமான சேவைக்கும், மற்றும் கை வசம் ஒன்றும் இல்லாமல் காத்திருந்த நேரங்களில்,ஈடுசெய்யமுடியாத துக்கம் மற்றும் இழப்புகள் தோறும் அவரை சாந்தத்துடன் வழிநடத்திச் சென்றது.

அவர் தம்முடைய சொந்த வாழ்வில் சந்தித்த கொடுமைகள்பாலும், கண்டனங்கல்பாலும், மன்னிப்பு என்பதைவிட உயர்ந்த வேறு ஏதோ ஒன்றையே வழங்கினார். புண்பட்டுப் பின் மன்னிப்பது மிக உயர்ந்த செயல் ஆனால் புறிந்துகொண்டு பின் புண்படாமல் இருப்பது அதற்கும் மேலானது. இந்த சக்தியை அவர் பெற்றிருந்தார். புகார் கூறாமல் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும் ‘மாஸ்லூம்’ எனும் வார்த்தை காஃனும் அவர்களின் பெயரோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. அவர் குறைபட்டார் என்றோ புலம்பினார் என்றோ தெரிந்ததே இல்லை. அவர் இருப்பதைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவுபடுத்திக்கொண்டார் என்றில்லை, ஆனால் ஒவ்வொன்றிலும், கொடுமைகளிலும் கூட, விவேகத்தின் சிதைக்கப்படாத விதைகளைக் கண்டார். அவர் வாழ்வின் அதிர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் எதிர்க்கவில்லை மற்றும் இடையூறுகளை விட்டு ஓடவுமில்லை. அவர் எதற்கும் பொறுமையற்றுப் போகவில்லை. அப்படி பொறுமையற்றுப் போகவோ அதே சமயம் கிளர்ச்சி செய்யும் தன்மையோ அவருக்கு இல்லை. ஆனாலும் இது தொடர்-துன்பம் பொறுத்தல் என்பதைவிட நாம் காத்திருக்கும் மற்றும் செயல்படாத காலங்களில், தாம் செயல்படும் சக்திகளைப் புறிந்துகொண்டதே ஆகும்.

இறுதி இலக்கை அடைய படைப்பை இயக்கும் சக்தி மற்றும் பரந்த செயற்பாடுகளோடு அவரும் இயங்கினார். நம்பிக்கையின் அடித்தலமாய் இருக்கின்ற முழுமையான அர்ப்பணம், குறைகளற்ற இணக்கம் ஆகியவற்றோடு நிச்சயத்துடனும், மனோதிடத்துடனும், அவர் தமது வாழ்வின் ‘திருச்சூரியரின்’ சுற்றுப்பாதை வட்டத்தை வலம் வந்தார்.

ஆக, இவ்விதமாகவே அவர் வாழ்ந்தார். அவரது இறுதி நாட்களில், நழுவும் சிந்தனா சக்திகள் அவருடைய இதயம் ஆவி இரண்டையும் மேலும் கூர்மைபடுத்தவும் தீவிரப்படுத்தவுமே செய்தன. உடல் ஹீனம் மற்றும் வலி ஆகியவை அவரை மேகம் போல் மூடாமல், மனக் கருவிகளையும், நிறந்தரமற்ற இந்திரியங்களையும் துறந்தனரோ என எண்ணும்படியாக, தமது வாழ்வின் சாரங்களாக விளங்கிய அம்சங்களை மட்டுமே அவர் இறுதி வரை இருகப் பற்றியிருந்தார். அந்த நிலையிலும் அவர் புண்ணகையானது, சக்தியை, சாந்தத்தை, மென்மையை மற்றும் புறிந்துகொண்டமை அருள் ஆகிய இரண்டுமான அன்பை நினைவூட்டியது. இவ்விதமாகவே தமது இறுதித் தெளிவான குறிப்புகளாக தமது வாழ்க்கை முறையை ஞாபகார்த்தமாக விட்டுச் சென்றார்.