கஸாக்ஸ்தான்: சமுதாய மேம்பாடு ஆன்மீகக் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலைச் சார்ந்துள்ளது


கூடுதல் படங்களுக்கு இங்கு செல்லவும்
https://news.bahai.org/story/1622/

25 அக்டோபர் 2022

அஸ்தானா, கஸாக்ஸ்தான் – போப்பாண்டவர் பிரான்சிஸ் மற்றும் அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் உட்பட உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்கள், கஸாக்ஸ்தான், அஸ்தானாவில் உள்ள உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் 7-வது மாநாட்டில், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய சமீபத்தில் கூடினர். .

நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரும் அவ்வொன்றுகூடலில் பஹாய் சமூக பிரதிநிதிகளில் ஒருவருமான லியாசத் யங்கலியேவா கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மன்றம், மதச் சமூகங்கள் அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.

“அமைதியை நிலைநாட்டுவதே மதத்தின் பங்கு” என அவர் கூறுகிறார். “ஆயினும், நீண்டகால தப்பெண்ணங்கள், சமூகத்தின் பிரிவுகளுக்கு எதிரான வன்முறைகளை அங்கீகரிக்கும் மாறாமல் தொடர்ந்துவரும் மற்றும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்பட்ட தீங்கு விளைவிக்கும் மரபுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தொடர்ந்து பிரிக்கின்றன.”

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை உருவாக்குவதில் மதம் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளும் உள்ளன என திருமதி. யங்கலியேவா விளக்கினார். பெருந்தொற்று மற்றும் சமீபத்திய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை சமாளிப்பதில் சமய சமூகங்கள் பேரழிவுகளுக்கு விடையிறுப்பதில் தங்கள் வேறுபாடுகளை வென்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அம்மன்றத்தின் பிரதான அமர்வில், பஹாய் சர்வதேச சமூகத்தின் பொதுச்செயலாளர் டேவிட் ரட்ஸ்டைன் தமது கருத்துக்களில், இதே உணர்வுகளை எதிரொலித்து, நம்பகத்தன்மையானது “மற்றவர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்வதில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் காண்கிறது” என கூறினார்.

நம்பகமான தலைவர்களை விவரிப்பதில், “அவர்கள் கூட்டு முடிவெடுப்பையும் கூட்டு நடவடிக்கையையும் வரவேற்கிறார்கள் மற்றும் நீதி மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தினால் தூண்டப்படுகிறார்கள்,” என கூறினார்:

சமூக முன்னேற்றம் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய பகிரப்பட்ட பார்வையைப் பொறுத்துள்ளது என டாக்டர் ரட்ஸ்டேய்ன் மேலும் கூறினார்.

“மனித இனத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் பிரத்தியேகங்களையும் ஒழிப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும். பெண் மற்றும் ஆணின் சமத்துவத்தை நாம் நமது சொற்களிலும் செயலிலும் நிலைநிறுத்த வேண்டும். அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கத்திற்காக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி வாதிட வேண்டும்.

டாக்டர். ருட்ஸ்டீன் பஹாவுல்லாவின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டி, மேலும் தொடர்ந்தார்: “எல்லா மக்களும் எப்போதும் முன்னேறி வரும் நாகரீகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கூற்று, முழு மனித குடும்பத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்த்துகிறது. .”

மன்றத்தைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி யங்கலியேவா, கஸாக்ஸ்தானில் உள்ள மதத் தலைவர்களிடையே ஒத்துழைப்பின் உணர்வு இந்த நிகழ்விலிருந்து அதிகரித்துள்ளதாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “மன்றம் முடிந்த சிறிது நேரத்திலேயே அஸ்தானாவில் உள்ள பஹாய் தேசிய அலுவலகத்தில் நாட்டின் மத விவகார அமைச்சகம் கூட்டிய கூட்டத்தில் இது தெளிவாக உணரப்பட்டது; அங்கு பல்வேறு சமய சமூகங்களின் பிரதிநிதிகள் அந்த மன்றத்தின் எதிர்காலம் குறித்து இணக்கமாக முறையில் ஆலோசனை நடத்தினர்.”

கஸாக்ஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதி காஸிம்-ஜொமார் தொகாயெவ் அவர்கள் புரவலராக செயல்பட்ட கருத்தரங்கில், இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், பல்வேறு வகையான மதங்கள் மற்றும் தேசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1622/

BIC நியூ யார்க்: பகிரப்பட்ட அடையாளம் குறித்த கருத்தாக்கத்தை ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின் போது ஆராய்தல்


BIC NEW YORK, 19 அக்டோபர் 2022, (BWNS) – மனிதகுல ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பகிரப்ப்பட்ட அடையாளம் குறித்த தொலைநோக்கின் தேவை ஐ.நா. பொது சபையின் 77-வது அமர்வின் உயர்மட்ட வாரத்தின் பல சந்திப்புகளின் போது பஹாய் அனைத்துலக சமூகத்தின் நியூ யார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கூட்டிய ஒரு கருத்தரங்கில், BIC பிரதிநிதியான டேனியல் பேர்ரல், “மனிதக் குடும்பம் ஒன்று என்பது மையக் கொள்கையாக இருக்க வேண்டும்: நமது பகிரப்பட்ட மானிடத்தன்மையுடன் ஒப்பிடும் போது, நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய எண்ணற்ற பண்புக்கூறுகள் இறுதியில் அதற்கு இரண்டாம் பட்சமானவைவே.”

ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின்போது நடைபெற்ற மதநல்லிணக்க ஒன்றுகூடலில் BIC பிரதிநிதிகள்
மேலும் படங்களைப் பார்க்க: https://news.bahai.org/story/1621/slideshow/1/

தேசிய அல்லது இன, மத மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த பிரகடனத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மூத்த ஐ.நா அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை இந்த மன்றம் ஒன்றிணைத்தது.

உ.லக நீதிமன்றத்தின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, திரு. பெர்ரெல் மேலும் கூறியதாவது: “அனைத்து மக்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமும், மனிதகுலத்தின் சிறந்த நலன்களுடன் ஒப்பிடுகையில் தாழ்வான விசுவாசங்களை அவற்றுக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலமும், உலகின் ஒருமைத்தன்மை உணரப்பட முடியும், மற்றும் மனிதப் பன்முகத்தன்மையின் எல்லையற்ற வெளிப்பாடுகள் அவற்றின் மிக உயர்ந்த நிறைவைக் காணக்கூடும்” பஹாய் போதனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி–ஒற்றுமை என்பது  சீர்மையிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பன்முகத்தன்மை குறித்த ஓர் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்னும் உண்மையை அந்தச் செய்தி எடுத்துக்காட்டுகிறது.

2024-ஆம் ஆண்டின் `எதிர்கால உச்சமாநாடு` குறித்த ஏற்பாடுகளுக்கான மற்றொரு கூட்டத்தில் ஒற்றுமைக் கோட்பாட்டின் தாத்பர்யங்கள் மேலும் ஆராயப்பட்டன. இக்கூட்டம் பி.ஐ.சி எடுத்து நடத்தியதும் ஸ்டிம்சன் மையத்தின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சமகால சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துலக அமைப்புகளின் பங்கு குறித்து பிரதிபலிப்பதற்கு நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களுக்கு  அழைப்புவிடுத்தனர்.

உலகளாவிய சமாதானத்தை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வு தொடர்பான கருப்பொருள்களை ஆராயும் “ஒரு பொருத்தமான ஆளுகை: மனிதகுலமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்னும் தலைப்பில் பி.ஐ.சி-யின் அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல கருத்துக்கள் குறித்து விவாதங்கள் விரிவடைந்தன.

இந்த இயக்கத்தின் ஓர் இன்றியமையா அம்சம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த விழிப்புணர்வாகும் என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது—பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஐ.நா.வுக்கு செய்யப்படக்கூடிய சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக பி.ஐ.சி.யின் நியூ யோர்க் அலுவலகம் நடத்திய மற்றொரு நிகழ்வில் இது கலந்துரையாடலின் தலைப்பாக இருந்தது.

இந்த நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் ஸ்லோவேனியாவின் முன்னாள் தலைவரும் `கிளப் டெ மாட்ரிட்டின்` தலைவருமான டேனிலோ துர்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தக் கலந்துரையாடலில், பி.ஐ.சி பிரதிநிதிகள் பெருந்தொற்றானது எவ்வாறு சமுதாயங்களின் தலைமைத்துவத்தில் பெண்களின் தவிர்க்கவியலா பங்கை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும், தலைமைத்துவத்தின் மாதிரிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிலைப்படுத்தினர். சமூகத்தின் எந்த மட்டத்திலும் தலைமைக்குப் பெண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய பல நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது என பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

ஐ.நா. சீர்திருத்தங்கள், குறிப்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் முழுப் பங்களிப்பை செயல்படுத்துவதற்குத் தற்போதைய கட்டமைப்புகளை மறுவடிவமைக்க வேண்டும் என பி.ஐ.சி பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இந்தக் கலந்துரையாடல்களின் பதிவுகள் சில  இங்குஇங்கு, மற்றும் இங்கு காணப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1621/

பஹாவுல்லாவின் நகைச்சுவை


ஒரு தனிநபர் பஹாய் வலைப்பதிவை தழுவி எழுதப்பட்டது

ஒரு பஹாய் புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர் புனிதநிலத்தில் ஓர் ஒன்பது நாள்கள் கொண்ட முறையான நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வில், வழிகாட்டப்பட்ட பயணங்கள், உரைகள், படித்தளங்கள் வழி உலா, பாப் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கான நீண்ட விஜயங்கள் உள்ளன.

நான் வருடம் 2001 ஆரம்பத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட போது, திருமதி குரோஸ்மன் என் வழிகாட்டியாகப் பணிபுரிந்தார். அக்கா நகர் மற்றும் ஹைஃபாவுக்கு வருகையளித்தபோது பல அற்புதமான கதைகளை நான் செவிமடுத்தேன். இங்கு என் மனதில் நின்ற மூன்று கதைகள் உள்ளன. இக்கதைகள் பஹாவுல்லா மற்றும் அவரது சகாக்களின் புத்திசாலித்தனம் மற்றும் விகடத்தை நினைவூட்டுகின்றன. இவை என் நினைவிலிருந்து வருபவை. அவற்றுக்கான மூலாதாரங்கள் தெரிந்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும்.

மிஷ்கின்-கலாம் தமது நாள்களில் ஒரு சிறந்த கையெழுத்துக் கலைஞராக விளங்கியதுடன், அவர் பஹாய்கள் தங்கள் சமயத்தின் ஒரு சின்னமாகக் கொள்ளும் அதிபெரும் நாமத்தின் எழுத்துக் கலைவடிவத்தை அமைத்தவரும் ஆவார். அவர் பஹாவுல்லாவின் நெருங்கிய நண்பரும் அவரது பயணங்கள் பலவற்றில் கலந்துகொண்டுமுள்ளார். ஒரு நாள் பஹாவுல்லாவுக்குத் தேநீர் பாத்திரம் (சமோவார்) ஒன்று தேவைப்பட்டது. அதை மிஷ்கின்-கலாமிடமிருந்து இரவல் வாங்கி வர ஒருவரை அனுப்பி வைத்தார். அந்த மனிதர் மிஷ்கின்-கலாமிடம் வந்து, “பஹாவுல்லா உங்கள் தேநீர் பாத்திரத்தை இரவல் வாங்கி வர சொன்னார்,” என்றார். அதற்கு மிஷ்கின்-கலாம் “நான் இரவல் தர முடியாது என பஹாவுல்லாவிடம் சொல்லுங்கள்,” என கூறினார்.  திடுக்கிட்டுப் போன அந்த மனிதர், பஹாவுல்லாவிடம் திரும்பிச் சென்று, “மிஷ்கின்-கலாம் இரவல் தர முடியாது என கூறிவிட்டார்,” என தெரிவித்தார். அது கேட்ட பஹாவுல்லா முகத்தில் ஒரு புன்னகையுடன், திரும்பிச் சென்று ஏன் தர முடியாது என கேட்டு வரும்படி அம்மனிதரிடம் கூறினார். அம்மனிதரும் மிஷ்கின்-கலாமிடம் திரும்பிச் சென்று, “நீங்கள் ஏன் தர முடியாது என கூறினீர் என தெரிந்து வரும்படி பஹாவுல்லா என்னைப் பணித்துள்ளார்,” என கூறினார். அதற்கு மிஷ்கின்-கலாம், “என் வாழ்க்கையில் பல முறை நான் இறைவனிடம் ஏதாவது ஒன்றை யாசித்துள்ளேன், ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் மறுத்துள்ளார். என் வாழ்க்கையில் ஒறு முறையாவது கடவுள் என்னிடம் கேட்டவற்றை மறுதலிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்களிக்கப்பட வேண்டுமென அவரிடம் தெரிவி,” என கூறியனுப்பினாராம்.

அக்காநகருக்கு அருகே இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அங்கு பஹாய்கள் ஒரு சிறு வண்டல் மண் தீவை  உருவாக்கி, அதை ஒரு பூந்தோட்டமாக ஆக்கினர். அதற்கு ரித்வான் தோட்டம் எனவும் பெயரிட்டனர். (இதை, பஹாவுல்லா தம்மைப் பொதுநிலையில் பிரகடனப்படுத்திய பாக்தாத் நகரில் உள்ள ரித்வான் தோட்டத்துடன் குழப்பிவிடக்கூடாது) இது பஹாவுல்லா அக்காநகர் கதவுகளுக்கு வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் ஆகும். பஹாவுல்லா, சிரமப் பரிகாரத்திற்காகவும் அவ்விடத்தின் இயற்கை அழகை அனுபவிப்பதற்காகவும் இத்தோட்டத்திற்கு அடிக்கடி விஜயம் செயவார். இப்பூந்தோட்டத்தின் தோட்டக்காரர் அபுல் காஸிம் என்னும் ஒரு மனிதராவார். இவர் அப்பூந்தோட்டத்தை நேர்த்தியாக்குவதற்குப் பல நாள்கள் பாடுபட்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பூந்தோட்டத்தை அணுகிக்கொண்டிருந்தது. அது தோட்டத்தையே அழிக்கக்கூடிய ஒரு கூட்டமாக இருந்தது. அபுல் காஸிம் மிகவும் பதட்டம் அடைந்து பஹாவுல்லாவை அணுகி, செடிகளின் அழிவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்யுமாறு முறையிட்டார். அதற்கு பஹாவுல்லா, “அபுல் காஸிம், வெட்டுக்கிளிகளுக்கும் உணவு தேவையல்லவா?” என்றார். அபுல் காஸிம் தனது பூந்தோட்டத்திற்குச் சென்று கவலையுடன் அமர்ந்திருந்தார்.

வெட்டுக்கிளிகள் கூட்டம் அணுகிக்கொண்டிருந்தது. அபுல் காஸிம் மீண்டும் பஹாவுல்லாவிடம் சென்று உதவிக்காக மன்றாடினார். அப்போதும் பஹாவுல்லா அதே பதிலைத்தான் அளித்தார். வெட்டுக்கிளிகள் அபுல் காஸிமின் செடிகளை தின்றுகொண்டிருந்தபோது, அபுல் காஸிம் மீண்டும் உதவிக்காக பஹாவுல்லாவிடம் மன்றாடினார். பஹாவுல்லா தோட்டத்திற்குச் சென்று, அணுகிக்கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தைப் பார்த்து, ஓர் உரத்த குரலில் “அபுல் காஸிம் உங்களால் பெரும் மன உளைச்சலுற்றிருக்கின்றார் என கூறிவிட்டு, தமது மேலாடையை உயர்த்தி வேகமாக உதறினார். தோட்டத்தில் இருந்த பெரும்பாலான வெட்டுக்கிளிகள்  தோட்டத்தை விட்டு பறந்து சென்றன.

அதே தோட்டத்தைப் பராமரித்து வந்த அபுல் காஸிம் அங்கு சிதறிக்கிடந்த முசுக்கட்டைப் பழங்களை சுத்தம் செய்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அங்கு, பஹாவுல்லா எப்போதும் அமர்கின்ற இருக்கைக்கு மேலே ஒரு முசுக்கட்டைப் புதர் வளர்த்திருந்தது. அவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு விழுந்து கிடந்த முசுக்கட்டை பழங்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வழிந்திருந்த பழச்சாற்றை துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இது அடிக்கடி நடந்து வந்தது. இப்பிரச்சினை குறித்து அபுல் காஸிம் பஹாவுல்லாவிடம் புகார் செய்து, என்ன செய்வது என கேட்டார். அதற்கு பஹாவுல்லா, அந்த முசுக்கட்டைப் புதரின் முன்னால் நின்று, அப்புதரைப் பார்த்து, “அபுல் காஸிம் உன் காரணமாக மகிழ்ச்சியாக இல்லை,” என கூறினார். அவர் மீண்டும் முசுக்கட்டைப் புதரை நோக்கித் தமது மேலாடையை வேகமாக உதறினார். அதற்குப் பிறகு அந்தச் செடியில் பழங்கள் காய்க்கவே இல்லை.

இக்கதைகள் மூஜான் மோமனின்  பஹாவுல்லா: ஒரு குறு வாழ்க்கைச் சரிதம், பக். 121-122 என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

…ரித்வான் தோட்டத்தின் உருவாக்கத்தின் போது, தீவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அத்தீவின் உயரத்தை அதிகரிக்க எல்லா பஹாய்களும் உதவிக் கரம் நீட்டினர், அதன் மண்ணைப் பதப்படுத்தி அதை ஒரு தோட்டமாக ஆக்கிட முயன்றனர். ஒரு நாள், எல்லாரும் வேலையில் கவனமாக இருந்த போது நபில் ஸாரான்டி அத்தோட்டத்திற்கு வந்தார். வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் நபிலைக் கூப்பிட்டு அவர் கையில் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து தாமும் உதவி செய்யுமாறு அழைத்தார். …பஹாவுல்லாவினால்  நபில் (அரபு மொழியில் மேன்மை) என்னும் பெயர் வழங்கப்பட்டிருந்த அந்த முல்லா முகம்மத், பஹாவுல்லா தமக்கு `நா` `பில்` என பெயரிட்டுள்ளதால் (அரபு மொழியில் அதற்கு `மண்வெட்டி வேண்டாம்` என்பது பொருளாகும்) தாம் மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஒரு முறை, அக்காநகரில் மரணமுற்ற ஒரு பஹாயின் நினைவாஞ்சலியில் பஹாவுல்லா கலந்துகொண்டார். அஃகா முகம்மத் அலி பஹாவுல்லா எவ்வளவு கருணையுடனும் அழகுடனும் இறந்தவரைப் பற்றி உரையாற்றினார் என்பதை கவனித்தார். அதே விதமாகத் தானும் ஒரு நினைவாஞ்சலியைப் பெற வேண்டும் என நினைத்த அஃகா முகம்மத் அலி பஹாவுல்லாவிடம், “நானும் இறந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு, எனக்கான ஒரு நினைவாஞ்சலி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சலுகையை வழங்கினால் அது எனக்குப் பெரும் மதிப்புடையதாக இருக்கும் என கூறினார்.

ஒரு முறை அவர்கள் இன்னுமும் பாக்தாத்தில் இருந்த போது, சற்று தடிமனாக இருந்த மதகுரு ஒருவர் பஹாவுல்லாவைக் காண வந்து, பெரும் ஆடம்பரத்துடன் உட்கார்ந்து, “நான் முஜ்டாஹிட்டுகளின் முத்திரையாவேன்,” என அறிவித்தார். முஜ்டாஹிட்டுகள், ஷீயா மதகுருக்களுள் மிகவும் மூத்த பிரிவினர் ஆவர், மற்றும் இந்த சொல் பொதுவாக நபி முகம்மத், நபிகளின் `முத்திரை` அல்லது கடைசி என்பதுடன் தொடர்புடைய சொல்லாகும்.

இந்த வார்த்தைக்கு இங்கே குறிப்பிட்டுள்ளபடி, மிகவும் சிறந்தது எனவும் பொருள் கொள்ளலாம். இருப்பினும், பஹாவுல்லா முதல் அர்த்தமான `கடைசி` என்னும் பொருளிலான சொல்லை  எடுத்துக் கொண்டு (‘நான் முஜ்டாஹிட்களில் கடைசி’ என அவர் கூறியதைக் குறித்து), “இன்ஷா`அல்லா, இன்ஷா`அல்லா (கடவுள் சித்தம் கடவுள் சித்தம்)” என கூறினார். (அதாவது இனிமேல் அவரைப் போன்ற ஒருவர் உலகில் இருக்க வேண்டாம் என்னும் பொருளில்)

“மானிடம் அனைத்திற்குமான அன்பு”: நெதர்லாந்தில் இன ஒற்றுமைக்கான சொல்லாடலுக்குப் பங்களித்தல்


கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1620/ செல்லவும்

13 அக்டோபர் 2022

ஆம்ஸ்டர்டாம், (BWNS) – உலகம் முழுவதிலும் உள்ள பல சமூகங்களைப் போலவே, 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில், தேசிய அடையாளம், இடம்பெயர்வு மற்றும் தப்பெண்ணம் பற்றிய கேள்விகள் நெதர்லாந்திலும் பொது நனவுணர்விலும் உந்தப்பட்டன. இது அமெரிக்காவில் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டது.

அப்போதிருந்து, டச்சு பஹாய் வெளிவிவகார அலுவலகம், இன ஒற்றுமை பற்றிய உரையாடலுக்கு பங்களிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிக சமுதாய ஒருங்கிணைவை பேணக்கூடிய வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை போன்ற ஆன்மீகக் கருத்துகளை ஆராயும் கலந்துரையாடல் அரங்குகளை நடத்தி வருகிறது.

இந்த உரையாடல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என அந்த அலுவலகத்தின் ஷெரீன் டெவிட் விளக்குகிறார்: “குறிப்பாக இப்போது நெதர்லாந்து உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக மாறி வரும் நிலையில் டச்சு என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள்.”

வெளிவிவகார அலுவலகம், பிரச்சினைகளை ஆழமாக ஆராய, உரையாடல்கள் அடையாளம் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு சவாலிட வேண்டும் என கண்டறிந்துள்ளது.

“இந்தக் கலந்துரையாடல்கள், மக்கள் ‘ஒருங்கிணைப்பு’ பற்றி அடிக்கடி பேசுவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆனால் நடைமுறையில், எதிர்பார்ப்பானது ‘ஒருங்கிணைத்தல்’ குறித்ததாகும் என திருமதி டெவிட் கூறுகிறார்.

“தனிநபர்களுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த அனுமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும், அந்த அடையாளம் அவர்களின் தேசியம் அல்லது கலாச்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்,” என அவர் தொடர்கிறார், “ஆனால், மனிதர்கள் ஆன்மீக ஜீவன்களாகக் காணப்படுகின்ற, நம்மைப் பற்றிய ஓரு வித்தியாசமான கருத்தை ஏற்றுக்கொண்டோமானால் ஒருவர் எப்படி டச்சுக் குடிமகனாகவும், உலகக் குடிமகனாகவும் இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது இயன்றதாகிடும்.

பல்வகைமையில் ஒற்றுமை என்னும் ஆன்மீகக் கொள்கையை மக்கள் மதித்துணரும்போது, ​​அவர்கள் தங்கள் சமூகத்தில் முன்வைக்கப்படும் செழுமையான பன்முகத்தன்மைக்குப் பெரிதும் மதிப்பளித்திட முடிகிறது.

“இது எங்கள் சிறிய நாடான நெதர்லாந்தைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துடனான நமது உறவுகள் அனைத்தையும் நாம் பார்க்க வேண்டும்” என திருமதி டெவிட் கூறுகிறார்.

அலுவலகத்தின் உரையாடல்கள் சிறப்பித்துக் காட்டுவது என்னவெனில், அடையாளம் குறித்த பரந்த கருத்தாக்கமானது ஒருமைப்பாடு குறித்த கொள்கையின் ஒப்புதலுடன் இணைக்கப்படும்போது, ​​மனிதக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராகத் தங்களின் சொந்த அடையாளமே மற்ற அடையாளங்கள் மற்றும் சங்கங்கதங்களை விட முதன்மை பெறுவதை மக்கள் காண முடிகிறது.

“நாம் ஏதோ பெரிய ஒன்றின் ஒரு பகுதியினாராக இருப்பதைப் பார்த்திடக் கற்றுக்கொள்கிறோம். ‘நாம் அல்லது அவர்கள்’ என்னும் சிந்தனையை நம்மால் வெல்ல முடிகிறது. இது சமூக கட்டமைப்புகள், ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்குதல் செயல்முறைகள் மற்றும் ஒரு சமூகமாக இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நீதி போன்ற பரவலான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதற்கான ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

“மனிதகுலத்தின் மீதான அன்பு என்பது தப்பெண்ணங்களை படிப்படியாகக் கரைத்து, தனிப்பட்ட குடிமக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1620/

ஒரு நிலையான உணவு முறையை நோக்கிபஹாய் அனைத்துலக சமூகத்தின் ஓர் அறிக்கை

செப்டம்பர் 14-16 வரை நடைபெறும் ஐரோப்பிய விவசாயம் மற்றும் மீன்வள அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தின் அடிப்படையில் (முன்கூட்டியே) வெளியிடப்பட்ட பஹாய் சர்வதேச சமூக பிரஸசல்ஸ் அலுவலகத்தின் அறிக்கை

பிரஸ்சல்ஸ்—13 செப்டம்பர் 2022
ஐரோப்பாவில் தற்போதைய போரின் பல விளைவுகளினால், உலகின் பல பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமடைந்துள்ளது. எவ்வாறாயினும், , பாதிப்புக்கு ஆளாகியுள்ள உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியே அதன் உடனடி சவாலாக இருக்கின்றது.

சமீபத்திய ஆண்டுகளில், பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் போராட்டங்களால், உணவு முறைமையின் அடிப்படையிலான பரந்த அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளின் எல்லைக்குட்பட்டமை போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போதுமான உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அவசரத் தேவைக்கு கவனம் செலுத்தப்பட்டாலும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய விவாதங்கள், உடனடி காரணங்களுக்கான அக்கறையை விடவும், உலகளாவிய உணவில் உள்ள அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் சொல்லாடல்களுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது. அத்தகைய சொல்லாடலின்றி, கொள்கை உருவாக்கமானது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு, தற்காலிக மற்றும் பகுதியளவு தீர்வுகளை மட்டுமே அடையாளம் காண முடியும்.

சமீபத்திய தசாப்தங்களில் உலகளாவிய விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகிற்கு நிலையான, சுரண்டப்படாத, மற்றும் உலகளாவிய மக்கள் தொகை முழுவதற்குமான உணவு முறை தேவைப்படுகிறது. இதற்குப் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மட்டுமல்ல, உள்ளூர் முதல் சர்வதேச மட்டம் வரையிலான விவசாய நடைமுறை மற்றும் கொள்கையின் அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் அனுமானங்களுக்குக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உணவு முறையின் செயல்பாட்டை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளில் முதன்மையாக இருப்பது மனிதகுலத்தின் ஒருமை. உலகின் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும், தேசமும் அல்லது மண்டலமும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாகும், அதன் பகுதிகளின் நல்வாழ்வானது, முழுமையின் நல்வாழ்விலிருந்து பிரிக்கப்பட முடியாதது. மற்ற கண்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுவான விவசாயக் கொள்கை போன்ற முன்முயற்சிகள் ஐரோப்பாவின் எல்லைகளுக்கும் அப்பால் உள்ள விவசாயிகள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் மீது அவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

உலகளாவிய பொது நலனை மேம்படுத்தும் உணவு முறைமையை நோக்கிய முன்னேற்றம், வெவ்வேறு கண்ணோட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விதம் மற்றும் அளவு ஆகியவற்றின் மீது குறிப்பிடத்தக்க அளவைச் சார்ந்திருக்கும். உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதியான அடித்தளத்தில் நிலைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நுண்ணறிவுகளையும் எந்த ஒரு தனி நடவடிக்கையாளர்களோ எந்த ஒரு தனிப்பட்ட கண்டமோ கொண்டிருக்கவில்லை என்னும் ஒப்புதலுடன் உலகளாவிய உணவு முறைமையைச் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், விவசாயிகள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை, பலதரப்பட்ட பங்குதாரர்களை இணைப்பதற்கான புதுமையான வழிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளுடன், ஒரு கூட்டு விசாரணை செயல்முறை தேவைப்படுகிறது. மேலும், விரிவடையும் பங்கேற்பு என்பது ஒரு சகிப்புக்குட்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையாக மட்டும் புரிந்து கொள்ளப்படாமல், நிலையான உணவு முறைகள் எதை உள்ளடக்குகின்றன என்பது பற்றிய ஒரு கூட்டு விசாரணையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதில் அனைவரும் அர்த்தத்துடன் ஈடுபடுகின்றனர் மற்றும் அனைவரும் பங்களிக்கின்றனர்.

ஐரோப்பியக் கண்டத்தின் தற்போதைய மற்றும் வரலாறு சார்ந்த செல்வாக்கு, ஒரு நியாயமான உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பையும் பொறுப்பையும் அதன் மீது வைக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி சவாலின் அளவானது, நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் செய்முறைகள் மற்றும் அணுகுமுறைகளின் நிலையான மறுமதிப்பீட்டைத் தேவையாகக் கொண்டிருந்த போதும், தொடர்ந்து விரிவடைந்து வரும் பங்குதாரர்கள் வட்டத்திற்குள் ஒருமித்த கருத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்துவது, ஒரு நிலையான உணவு முறைமையின் அடிப்படையில் உலகளாவிய விசாரணை செயல்முறையானது பலனளிக்கும் என்பதை உறுதிப்படுத்த உதவும்.

மூலாதாரம்: https://www.bic.org/statements/towards-sustainable-food-system

BIC பிரஸ்சல்ஸ்: மனிதகுல ஒருமையின் அடிப்படையில் விவசாய கோட்பாட்டை ஆராய்தல்


தொடர்ந்து பராமரிக்கப்படக்கூடிய உணவு முறைமையை நோக்கி
பஹாய் அனைத்துலக சமூகம்
பிரஸ்சல்ஸ் அலுவலகம்

7 அக்டோபர் 2022

BIC பிரஸ்ஸல்ஸ், 7 அக்டோபர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகம் (BIC) ஒரு நிலையான உணவு முறைமையை நோக்கி என்னும் தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மனிதகுல ஒருமை குறித்த கோட்பாட்டின் தாக்கங்களை ஆராய்கிறது.

உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக செக் குடியரசில் கூடியிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) விவசாய அமைச்சர்களிடம் BIC தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை, அந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள், .. ஒட்டுமொத்த சவால்களை எதிர்கொள்ள, “சொல்லாடல்களுக்குச் சரியான நேரத்தில் வாய்ப்பை வழங்குகி,” ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயக் கொள்கைகளின் பரந்த தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் புதிய அறிக்கை, உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டின் கோட்பாட்டின் தாத்பர்யங்களை ஆராய்கிறது.

பி.ஐ.சி. அதன் அறிக்கையில், முடிவெடுக்கும் செயல்முறைகளில் பரந்த பங்கேற்பு “ஒரு சகிக்கத்தக்க ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையாக மட்டும் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, அனைவரும் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடும் மற்றும் பங்கேற்கும் நிலையான உணவு முறைகள் எவை என்பது பற்றிய ஒரு கூட்டு விசாரணையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும், என முன்மொழிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, அடிஸ் அபாபா, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஜெனீவாவில் உள்ள மூன்று பி.ஐ.சி அலுவலகங்கள் அவ்வப்போது ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள அதிகாரிகள், பலதரப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமை சமூக அமைப்புக்களை அவசியமிக்க பிரச்சினைகள் பற்றிய ஒரு கூட்டு ஆய்வுக்காக ஒன்றிணைக்கும் போது, உணவுப் பாதுகாப்பு பற்றிய விவாதத்திற்கு பி.ஐ.சி.யின் சொந்த பங்களிப்புக்கான அடிப்படையை இந்த அணுகுமுறை அமைத்துள்ளது.

பி.ஐ.சி நடத்திய சமீபத்திய கலந்துரையாடல்கள் விவசாயக் கொள்கைகளுக்கு இடையிலான உறவு, கிராமப்புற நிலைத்தன்மை மற்றும் புலம்பெயர்வுக்கான காரணங்கள் போன்ற தலைப்புகளை ஆராய்ந்துள்ளன. இந்த உரையாடல்கள், ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பிரச்சினைகள் ஆராயப்படும்போது, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த சூழலில் மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதிலும் தங்கள் முடிவுகள் மற்றும் செயல்களின் தாக்கத்தை சிறப்பாகக் கருத்தில் கொள்ள முடியும் என்பதைக் காட்டுகின்றன.

BIC இன் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் (UN) உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஒரு ஆன்லைன் விவாதம்.  இது ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து 80-க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்களையும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்து ஐரோப்பிய விவசாயக் கொள்கைகளுக்கும் ஆபிரிக்காவிலும் புலம்பெயர்வின் பாதகமான உந்துசக்திகளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தத் துறையில் பி.ஐ.சி.யின் பிற முயற்சிகளில் மனித சமூகத்தில் முதல் ஆக்கமிக்க முகவர் என தலைப்பிடப்பட்ட அறிக்கையும் அடங்கும்: உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் மையத்தில் விவசாயிகளை வைப்பது, உள்ளூர் மட்டத்தில் விவசாயிகள் மற்றும் சமூகங்களால் உணவு உற்பத்தி குறித்து உருவாக்கப்படும் அறிவு உணவு மற்றும் விவசாயம் குறித்த சர்வதேச கொள்கைகளுக்கு எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதை ஆராய்தல் ஆகியவை அடங்கும்.

பிரஸ்சல்ஸ் அலுவலகத்தைச் சேர்ந்த ரேச்சல் பயானி பின்வருமாறு கூறுகிறார்: “உலகிற்கு நிலையான, சுரண்டப்படாத, மற்றும் மனிதகுலம் முழுவதற்கும் வழங்குகின்ற ஒரு உணவு முறை தேவைப்படுகிறது. எந்த ஒரு நடவடிக்கையாளரோ எந்த ஒரு கண்டமோ தற்போது ஓர் உணவு அமைப்பை ஒரு திடமான அடித்தளத்தின் மீது வைக்க அனுமதிக்கும் அனைத்து நுண்ணறிவுகளையும் கொண்டிருக்கவில்லை.

“ஆராய்ச்சியாளர்கள் முதல் விவசாயிகள் வரை உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த சவாலைப் பற்றி ஒன்றாகச் சிந்திக்கும் மற்றும் உணவு முறைகள் குறித்து அர்த்தமுள்ள முடிவுகள் எடுக்கப்படும் விவாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ள, ஒரு கூட்டு விசாரணை மற்றும் கற்றல் செயல்முறை நமக்குத் தேவைப்படுகிறது.”

இப்புதிய அறிக்கையை சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையில் அக்கறை கொண்ட அதிகாரிகளுடன் மேலும் ஆராய்வதற்குப் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் வரவிருக்கும் மாதங்களில் பல நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. மூலாதாரம்:

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ள பஹாய் சமூகங்களின் விவசாய முன்முயற்சிகளானவை, அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு மற்றும் சமூகத்திற்கான சேவை ஆகியவற்றின் பஹாய் கொள்கையால் ஈர்க்கப்பட்டவை

https://news.bahai.org/story/1619/

ஐக்கிய அரபு எமிரேட்கள்: அமைதியைப் பேணுவதில் மதத்தின் பங்கை ஆராய்தல்


கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1618/ செல்லவும்

அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 3 அக்டோபர் 2022, (BWNS) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹாய்கள் (UAE) சமகால சமூகத்தில் மதத்தின் ஆக்கப்பூர்வமான பங்கு பற்றிய ஒரு புதிய சிந்தனை வெளிப்பட ஒரு புதிய வகையான உரையாடலைத் தேடுகின்றனர்.

“மக்களின் மேன்மையை ஊக்குவிப்பதிலும், வளமான மற்றும் அமைதியான நாகரிகத்தை உருவாக்க மனிதகுலத்தை ஊக்குவிப்பதிலும் மதம் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது” என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய் அலுவலகத்தின் உறுப்பினரான ரோயா ஸபெட் கூறுகிறார்.

செய்திச் சேவைக்கு அளித்த ஒரு நேர்காணலில், டாக்டர் ஸபெட் இந்த கருப்பொருளில் தேசிய உரையாடலுக்கு பங்களிக்கும் முயற்சிகளில் அலுவலகத்தின் நுண்ணறிவுகளையும் அனுபவங்களையும் ஆராய்கிறார்.

ஒரு பகிரப்பட்ட அடையாளத்தை ஊக்குவித்தல்

மற்ற சமூக நடவடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹாய்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும் சகவாழ்வை ஆதரிப்பதும் முக்கியம் என்றாலும், மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பகிரப்பட்ட அடையாளம் நீடித்த முன்னேற்றத்திற்கு அவசியம் என்னும் கருத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

“மனிதகுலம் ஒரு வேரூன்றிவிட்ட முரண்பாட்டின் வடிவத்தை எதிர்கொண்டு, நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஓர் உலகத்தை நோக்கி நகர வேண்டுமானால், இந்தக் கோட்பாடு குறித்த நனவுணர்வும் ஏற்பும் தேவை” என டாக்டர் ஸபெட் கூறுகிறார்.

தேசிய மட்டத்தில் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட கலந்தாலோசனை தளங்கள், பல்வேறுபட்ட முன்னோக்குகளை ஒத்திசைக்கவும், ஒற்றுமைக்கான தளங்களை விரிவுபடுத்தவும் அனுமதிக்கும் உள்ளடங்கிய சூழல்களில் மத சமூகங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமை சமூக அமைப்புகளின் தலைவர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்துள்ளன.

“அமைதியை நிலைநாட்டுவது மனிதகுலம் முழுவதின் பொறுப்பாகும். இதை அடைவதற்கு மக்கள் தங்களை (மற்றவர்களைவிட) உயர்ந்தவர்களாகக் கருத அனுமதிக்கும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் கைவிடுவது அவசியம்” என அவர் தொடர்கிறார். “வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்து பின்னணி மக்களும் நடவடிக்கை எடுத்து விஷயங்களை ஒன்றாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த கருத்தரங்குகள் ஊக்குவிக்கின்றன.”

நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் ஒரு நிலைத்தன்மையை அடைதல்

பங்கேற்பாளர்கள் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான ஒத்திசைவு குறித்த கருத்தைப் பிரதிபலிக்கும் போது மத சமூகங்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும் என வெளியுறவு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

இந்த யோசனையை 2022 அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் டாக்டர் சபெட் குறித்துரைத்தார், “உலக அமைதியை மேம்படுத்துவதில் மதத்தின் பங்கு” என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கில், “மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்படுவதற்கான வலுவான விருப்பத்தை மதம் மக்களிடையே பேண வேண்டும்” என அவர் கூறினார். மதத்தின் பலன்களை, உயர்ந்த அளவிலான ஒற்றுமை மற்றும் அமைதியை உருவாக்குவதில் அதன் பங்களிப்பின் அளவைக் கொண்டு அளவிட முடியும்.”

பல்வேறு சமூக நடவடிக்கையாளர்களிடையே அதிக ஒத்துழைப்பைப் பேணுதல் மற்றும் நட்புறவை வலுப்படுத்துதல் பற்றிய அதன் பல நுண்ணறிவுகள் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் இருந்து பெறப்பட்டவை என வெளியுறவு அலுவலகம் குறிப்பிடுகிறது.

டாக்டர் ஸபெட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த முயற்சிகள் அனைவருக்கும் திறந்திருக்கும் மற்றும் எந்த விதமான தப்பெண்ணமும் இல்லாத கலந்தாலோசனைச் சூழல்களில் தங்கள் சக குடிமக்களுக்குச் சேவை செய்வதற்கான மக்களின் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.”

இந்த நடவடிக்கைகளின் மூலம், பங்கேற்பாளர்கள் நீதி, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம் போன்ற ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் அண்டைப்புறங்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்களின் மூல காரணங்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்துகிறார்கள்.

“அந்தச் சூழலில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்க்கை குறித்த தங்களின் நோக்கம் பற்றிய தெளிவைப் பெறுகிறார்கள், தங்கள் சக குடிமக்களின் நல்வாழ்வு குறித்த விருப்பத்தை வளர்த்துக்கொள்கிறார்கள், மேலும் நடைமுறை மற்றும் ஆணித்தரமான சொற்களில் தங்கள் சுற்றுப்புறங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களின் வேறுபாடுகளைக் கடக்கிறார்கள்” என டாக்டர் சபெட் கூறுகிறார்.

வரவிருக்கும் மாதங்களில் நடைபெறும் தொடர்ச்சியான கருத்தரங்குகளில் மதம் எவ்வாறு சமூக மாற்றத்திற்குப் பங்களிக்க முடியும் என்பது குறித்த தனது ஆய்வைத் தொடர வெளியுறவு அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1618/

மஹாபாரதப் போர் எதற்காக


அப்துல்-பஹா தமது ஐரோப்பிய பயணங்களின் போது பாரீஸ் நகருக்கும் விஜயம் செய்தார். அப்போது, அவரைச் சந்திப்பதற்கு ஓர் இந்தியர் வந்திருந்தார். அச்சந்திப்பின் போது அவ்விந்தியர் “கிருஷ்ணரின் செய்தியை உலகிற்குப் பரப்புவதே தமது வாழ்க்கையின் நோக்கம்”[i] என்றார். அதற்கு அப்துல்-பஹா: “கிருஷ்ணரின் செய்தி அன்பு பற்றிய செய்தி. எல்லா இறைத்தூதர்களும் அன்பு குறித்த செய்தியையே கொண்டுவந்துள்ளனர். அவர்களுள் எவருமே போரும் பகைமையும் நல்லதென கூறவில்லை. அன்பும் பரிவிரக்கமும் சிறந்ததென கூறுவதில் எல்லாருக்குமே ஒப்புதல் உண்டு,” என்றார்.

புனித ஆன்மாக்களான மோசஸ், இயேசு, ஸோரவேஸ்தர், கிருஷ்ணர், புத்தர், கொன்ஃபியூஷஸ், அல்லது முகம்மதே ஆயினும் அவர்கள் அனைவரும் மானிட உலகின் அறிவொளிக்கான காரணங்கள் ஆவர்.”[ii]

இங்கு கிருஷ்ணர் ஏந்திவந்த செய்தி அன்பு குறித்த செய்தி எனும்போது, மஹாபாரத யுத்தமும் அதில் எண்ணற்றோரின் மரணமும் எப்படி அன்பு குறித்ததாகும் எனும் எண்ணம் மனதில் தோன்றுவது இயல்பே. இதற்கான பதிலை பஹாய் திருவெளிப்பாட்டின் கண்ணோட்டத்தில் காண முயல்வோம்.

மாணிக்ஜி சாஹிப் என்பவர் பஹாவுல்லாவுக்குப் பல கடிதங்கள் எழுதினார்.[iii] அக்கடிதங்களில் பல கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில் ஒன்று, ஹிந்து சமய அவதாரங்கள் குறித்ததாகும்.

மாணிக்ஜியின் கேள்வி

சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாவது: “யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திட படைப்பு முழுமையுமே விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும்போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்,”[iv] என ஹிந்து சமய தீர்க்கதரிசிகள் கூறியுள்ளதையும், மற்ற இறைத்தூதர்கள் கூறியுள்ளதையும் ஒப்பிட்டு, இவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பது என வினவியுள்ளார்.

இங்கு ஹிந்து தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லப்படுவது, பகவத் கீதையில் வரும் பின்வரும் செய்யுற்களுடன் ஒத்திருக்கின்றது:

ஸ்ரீ பகவான் கூறுகின்றார்:

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன் 4:7
நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன் 4:8

மேலும், “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அத்தீர்க்கதரிசிகள் கூறியுள்ளதாக மாணிக்ஜி குறிப்பிடுகின்றார்.

இதன் தொடர்பில் கீதையில் கூறப்படுவது:

ஸ்ரீ பகவான் கூறுகின்றார்:

அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் போதித்தேன், விவஸ்வான் மனுவுக்குப் போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்குப் போதித்தான். 4:1
இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பார்த்தா! அந்த யோகம் கால மிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.4:2

இதில் ஹிந்து சமயத்தின் தசாவதாரங்கள் பற்றி கிருஷ்ணர் எதுவுமே குறிப்பிடவில்லை, மாறாக அவர் விவஸ்வான், மனு, மற்றும் இக்ஷ்வாகு என ஒரு வரிசையை நமக்கு வழங்குகிறார்.

உண்மையில் தசாவதாரம் என குறிப்பிடப்படுவது பிற்காலத்தில் புராணங்களில் காணப்படும் பற்பல அவதாரங்களிலிருந்து, மட்ச அவதாரத்திலிருந்து ராம அவதாரம் வரை எழுவரையும், பின்னர் சிலர் எட்டாவதாக கிருஷ்ணரின் ஒன்றுவிட்ட சகோதரரான பலராமரையும், ஒன்பதாவதாக கிருஷ்ணரையும் குறிப்பிடுகின்றனர். வேறு சிலரோ, பலராமரை விடுத்து எட்டாவதாக ஸ்ரீ கிருஷ்ணரையும் ஒன்பதாவதாக புத்தரையும் குறிப்பிடுகின்றனர். பத்தாவதாக எதிர்ப்பார்க்கப்படுவது கல்கி அவதாரமாகும்.

இப்போது, மாணிக்ஜியின் கேள்விக்கான பஹாவுல்லாவின் பதிலைக் காண்போம்.

“ஸ்தானங்கள் ஒவ்வொன்றும், ஒரு வகையில் மற்ற தீர்க்கதரிசிகளின் ஸ்தானங்களிலிருந்து மாறுபட்டவை என்பதை முதலில் கவனிக்க வேண்டும். உதாரணமாக, மோசஸையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு திருநூலை வெளிக் கொணர்ந்து சட்டங்களை நிலைநாட்டினார். அதே நேரத்தில், அவருக்குப் பின் தோன்றிய பல தீர்க்கதரிசிகளும், தூதுவர்களும், காலத்தின் தேவைகளுக்குப் பொருத்தமாக அச் சட்டங்கள் ஏற்புடையதாக பொருந்தியிருக்கும் வரை அவரது சட்டங்களையே பறைசாற்றினர். தோரா என்னும் புனித நூலுடன் இணைக்கப்பட்டுள்ள நூல்களும், அவ்வப்போது நிகழ்ந்த நிகழ்ச்சித் தொகுப்புகளும் இம் மெய்ம்மைக்கு ஆதாரப்பூர்வமான சாட்சியம் பகர்கின்றன.”[v]

அடுத்து,

“எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்,”[vi]
என பஹாவுல்லா குறிப்பிடுகின்றார்.

மேலும்,

“இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக் கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும். அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுவதாக. மிக உயரிய தொடுவானத்தின்பால் விரைந்திடுமாறு மனிதர்களை அவர்கள் அனைவரும் ஆணையிட்டு அழைத்து நித்திய வாழ்வு குறித்த நற்செய்திகளை வழங்கியிருக்கின்றனர்,”[vii] என பஹாவுல்லா கூறுகின்றார்.

இப்பொழுது, சில இறை அவதாரங்கள் போர்களைத் தூண்டிவிடுவதற்கும் அன்பிற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இது குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம்:

“எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உ ள்ளூர அது ஒளியும் கருணையும் ஆகும். அதன்பால் விரைந்திடுவாயாக, அதனால் நீ ஒரு நித்திய ஒளியாகவும், அழிவற்ற ஆவியாகவும் ஆகக்கூடும்.”[viii]

இங்கு ‘பேரிடர்’ என பஹாவுல்லா கூறுவது சில சமயங்களில் அவதாரங்கள் தூண்டிவிடும் போர்களையும் உள்ளடக்கும். பைபிள் திருநூலின் பழைய ஏற்பாட்டிலும் இஸ்லாமிய சமயத்திலும் இதற்கான பல சான்றுகள் உள்ளன. ஆதலால், கடவுள் அவதாரங்கள் தூண்டிவிடும் போர்கள் கடவுள் மனிதர் மீது கொண்ட அன்பினால்தான் என்பது தெளிவு. அப்பேரிடர்களின் விளவாக மனிதர்கள் நித்திய ஒளியாகவும், அழிவற்ற ஆவியாகவும் ஆகக்கூடும் என்பதே நோக்கம்.

பாரத யுத்தத்தின் ஆரம்பத்தின் போது, கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகப் பணிபுரிந்தார். அப்போது யுத்தகளத்தில் தனக்கு எதிரே காணப்பட்ட தன் உறவினர்களைப் பார்த்த அர்ஜனன், தன் சொந்த உறவினரையும் சுற்றத்தாரையும் எங்ஙனம் கொல்வது என மிகவும் மனம் குழும்பிய நிலையில் தன் அம்பையும் வில்லையும் வீசி எறிந்துவிட்டு கீழே உட்கார்ந்தான்.

கிருஷ்ணர் இந்த யுத்தத்தைத் தூண்டியதன் காரணம் கௌரவர்களை போரில் வென்று பாண்டவர்களின் இராஜ்யத்தைத் திரும்பப் பெறுவதற்கு என வெளிப்படையில் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த நோக்கம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி, அதன்மூலம் மனிதர்களை தன்மைமாற்றுவதற்காகும்.  இங்கு அதர்மத்திற்கு மூலகாரணமாக இருந்தோர் திருதராஷ்டிர கூட்டத்தினரான கௌரவர்கள் ஆவர். இப்போரில் பரத கண்டத்தின் அரசவர்க்கம் முழுவதுமே ஈடுபட்டிருந்தது. அவற்றுள் பாண்டிய மன்னனான சாரங்கத்துவஜன் என்பான் பாண்டவர்களுடன் சேர்ந்து போர்புரிந்ததாக இதிகாசம் கூறுகின்றது.

அதர்ம வழியில் இழக்கப்பட்ட பாண்டவர்களின் இராஜ்யத்தைத் திரும்பப் பெறுவதில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் இடையீட்டாளராகப் பணிபுரிந்த கிருஷ்ணர் அம்முயற்சியில் தோல்வியுற்றார். கிருஷ்ணர் நல்லிணக்கத்தையும் தர்மத்தையும் வலியுறுத்தினார். ஆனால், கௌரவர்கள் செவிசாய்க்கவில்லை. கிருஷ்ணர், இதன் விளைவு போர் என எச்சரித்தார். போரும் மூண்டது.

ஹிந்து சமயத்தில் குறிப்பிடப்படும் க்ஷத்திரிய வம்சத்தினர்[ix] தர்மத்தைக் காப்பதற்காக கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால், காலப்போக்கில் இவர்கள் தங்களுக்கு இருந்த அதிகாரத்தினால் அகங்காரத்திற்கு அடிமையாகி தாங்கள் படைக்கப்பட்டதன் உண்மை நோக்கத்தை மறந்தனர். இந்த வகுப்பினர், அக்காலத்தில் குமரி முனையிலிருந்து இமயம் வரை பரவியிருந்தனர். பாண்டவர்களும் கௌரவர்களும் அரசபரம்பரையினரும் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆதலால், கிருஷ்ணரின் நோக்கம் அவர்களை அழிப்பதல்ல, மாறாக, அவர் அகங்காரத்தை, அதாவது தீய குணங்களை அழித்து ஒரு புதிய தர்மத்தை, தார்மீகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கான பௌதீக உபகரணமாக, ஓர் ஊடகமாக, மஹாபாரத யுத்தம் பயன்பட்டது. மஹாபாரத யுத்தம் ஆன்மீகவாதத்திற்கும் லௌகீகவாதத்திற்கும் இடையிலான ஒரு போராகும். எல்லா தீர்க்கதரிசிகளின் நோக்கம் போன்றே இறுதியில் வெல்ல போவது ஆன்மீகவாதமே.

பின்குறிப்பு

இந்தக் கட்டுரையின் மற்றொரு நோக்கம், கிருஷ்ணர் எல்லா இறை தூதர்கள் போன்றே அவரும் ஓர் ஆணித்தரமான அவதாரம் என்பதைக் காட்டுவதற்காகும். அப்துல்-பஹா சில இடங்களில் கிருஷ்ணரை நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். பஹாவுல்லா அவ்வாறு நேரடியாகக் கிருஷ்ணரைக் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா இறைத்தூதர்களுடனும் அவர் கிருஷ்ணரையும் சேர்த்து குறிப்பிடுவதே போதுமானது. மற்றபடி, பஹாவுல்லா கிருஷ்ணரைப் பற்றியும் ஹிந்து சமயம் பற்றியும் நேரடியாகக் குறிப்பிடாமல் பொதுவாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடுகின்றார்.

மேலும், மாணிக்ஜி…

“…எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில், அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத் தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம் மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின் பேரில்     மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை        அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம் மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும், ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.”

பஹாவுல்லா கிருஷ்ணரைப் பற்றி நேரடியாக குறிப்பிடாததன் காரணம்,

….விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம் மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்.


[i] பாரீஸ் பேருரைகள்

[ii] மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து

[iii] ஒற்றுமை என்னும் திருக்கோவில்

[iv] ibid, இது நிச்சயமாக பகவத் கீதையில் வரும் (4:7 & 4:8) ஒரு செய்யுளைக் குறிக்கின்றது

[v] ibid

[vi] ibid

[vii] Ibid

[viii] பஹாவுல்லாவின் மறைமொழிகள், அரபு 51

[ix] அரசவர்க்கத்தினர் உட்பட, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தோர்