மரணம் என்றால் என்ன?
மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களுள் மனிதனின் மரணமும் உள்ளடங்கும். ஆனால், மரணம் என்பது ஒரு மனித வாழ்வின் அல்லது உடல் ரீதியான அஸ்தமனம் என அறிவியலாளர்கள் கூறிடுவர். அந்த மனிதனுக்கு அதற்குமேல் உள்ளமை கிடையாது. மருத்துவத்தைப் பொறுத்த வரை மனித மரணத்தில் அறியப்படாத மர்மம் ஏதுமில்லை. ஓர் உடலில் இன்றியமையா அறிகுறிகள், முக்கியமாக இருதய துடிப்பு ஓய்ந்திடும் போது, மூளையில் செயல்பாடுகளுக்கான அறிகுறி நின்றுவிட்டபோது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மரணம் சம்பவித்துவிட்டது என மரணச் சான்றிதழில் மருத்துவர்கள் குறிப்பிடுவர். அது மரணத்தை வரையறுப்பதற்கென பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை. ஆனால், மனித உடல் என்பது பற்பல உயிரணுக்களால் ஆனது என்பது எல்லாருக்கும் தெரியும். இருதய துடிப்பு நின்றுவிட்டாலும் கூட, அந்த உடலின் ஆக்கக்கூறுகளான உயிரணுக்களும் மரித்துவிட்டன என அறுதியிட்டு கூற முடியாது. உயிரணுக்கள் உடனடியாக இன்றி அவை படிப்படியாகவே மரணிக்கின்றன. இதை அறிவியல் ரீதியில் அறியலாம். இவை அனைத்தும் பௌதீக ரீதியான கூற்றுகளாகும்.
மக்களிடையே, குறிப்பாக இந்து சமயத்தவரிடையே, ஒருவரின் மரணத்திற்குப் பின் அவருக்காக ஒவ்வொரு வருடமும், அவர் இறந்த நாளன்று சமய ரீதியில் விசேஷ பூஜைகள் செய்வது வழக்கம். ஏறத்தாழ நம்மில் எல்லாருமே ஏதோ ஒரு நேரத்தில் இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்போம். மருத்துவம் கூறுவது போன்று மரணத்தோடு மனித வாழ்வு முற்றிலும் அழிந்துவிட்டது என்றால் இந்த திவசங்கள் யாருக்காக அல்லது எதற்காக செய்யப்படுகின்றன? இல்லாத ஒருவருக்காக வருடா வருடம் புஜைகளும் பிரார்த்தனைகளும் ஏன் செய்யப்பட வேண்டும்? இறந்தவர் ஏதோ ஒரு நிலையில் இன்னமும் இருக்கின்றார் எனும் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.
பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் மனித ஆன்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனித உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை என கிருஷ்னர் இந்த அத்தியாயத்தில் போதிக்கின்றார். அதே போன்று உலகின் மிக இளமையான சமயமாகிய பஹாய் சமயமும் இதைத்தான் கூறுகின்றது.
மனிதனுக்கு இரண்டு மெய்நிலைகள் உண்டு. ஒன்று மிருகநிலையிலான அவது உடல். மனித உடலானது எல்லா வகையிலும் மிருகங்களின் உடல் போன்றதே. பசி, தாகம், தூக்கம் போன்ற மிருக இச்சைகள் அதற்கும் உண்டு. மிருகங்கள் போன்றே காலங் கனியும் போது அந்த உடல் உயிரிழப்புக்கு ஆளாகின்றது. அப்படி உடல் அழிந்திடுமானால் ஆன்மா எனக் கூறப்படும் ஒன்று என்னவாகின்றது?

எல்லா படைக்கப்பட்ட பொருள்களுக்கும் ஓர் ஆவி உண்டு. இதைக் கனிம ஆவி, தாவர ஆவி, மிருக ஆவி மற்றும் மனித ஆவி எனப் பிரிக்கலாம். ஒரு செடி சருகாகிடும் போது அதன் தாவர ஆவியும் இல்லாது மறைந்து போகின்றது. ஒரு மிருகம் இறக்கும் போது அதன் மிருக ஆவியும் அதோடு அஸ்தமனமாகிவிடுகின்றது. ஆனால், மனித ஆவி அல்லது மனித ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. அவ்வாறெனில் மரணத்தின் போது மனித ஆன்மா என்னவாகின்றது?
மனிதனின் மெய்நிலை அவனது ஆன்மாவே அன்றி வேறில்லை. உடலுக்கு மாற்றமுண்டு, ஆனால் ஆன்மாவின் மெய்நிலையில் மாற்றம் ஏதும் கிடையாது. மருத்துவ ரீதியில் சுமார் 7 – 10 வருடங்களுக்குள் மனித உடலின் உயிரணுக்கள் யாவும் அழிந்து மறுவுற்பத்தி செய்யப்படுகின்றன. முற்றிலும் ஒரு புதிய உடல் என்றே இதைக் கூறலாம். இந்த செயல்முறை உடலில் உயிர் இருக்கும் வரை நடைபெறுகின்றது. கனிமப் பொருள்கள் உடலாக உருபெறுகின்றன, பின்னர் மரணத்திற்குப் பிறகு அவற்றுக்கிடையிலான ஈர்ப்பு சக்தி அழிந்து அந்த உடல் மீண்டும் கனிம நிலைக்குத் திரும்புகின்றது. ஆனால் ஆன்மா இவ்வித மாற்றத்திற்கு ஆளாவதில்லை. அது பிரிக்கப்பட முடியாத ஓர் அணுவைப் போன்றது. பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்:
இரசாயன ரீதியில் H2O எனப்படும் நீரைப்பார்ப்போம்.
பனிக்கட்டி இந்த H2O’வால் ஆனது. பனிக்கட்டிக்கு உருவம் உண்டு, பரிமாணம் உண்டு. அது குறிப்பிட்ட சில கோட்பாடுகளுக்கு, அகலம், நீளம், உயரம், பாரம் போன்ற பரிமாணங்களைக் கொண்டது. அதற்கு நிலையான உருவம், தின்மநிலை உண்டு. இந்த பனிக்கட்டி கரையும் போது அது நீராகின்றது. இந்த நீர்ம நிலையில் அதற்கு கொள்ளவு உண்டு, ஆனால் இந்த நீர்ம நிலையில் அகலம், நீளம், உயரம் போன்ற பரிமாணங்கள் அதற்குப் பொருந்தாது. அது எந்த பாத்திரத்தில் உள்ளதோ அந்த பாத்திரத்தின் உருவத்தை அடைகின்றது. இது இப்போது திரவ நிலையில் இருக்கின்றது. அடுத்து, இந்த H2O ஆவியாகும் போது, அதன் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. அது தின்மநிலை, திரவநிலை ஆகியவற்றைத் தாண்டி வளிமநிலையை, ஆவிநிலைய அடைந்துள்ளது. வளிம நிலையில் அது போய்ல்ஸ் (Boyle’s Law) கோட்பாட்டிற்குப் கீழ்ப்படிகின்றது. ஆனால், இந்த நிலைகள் யாவற்றிலும் ஒரு விசேஷம் உண்டு. நீரின் உருவம் மட்டுமே வேறுபடுகின்றது ஆனால் அதன் மெய்நிலையில் மாற்றம் ஏதும் இல்லை, அது எந்த நிலையிலும் H2O’வாகவே இருக்கின்றது.

இந்த உதாரணத்தைப் பயன்படுத்தி நாம் மனித ஆன்மாவின் மெய்நிலையை உணரலாம். ஆன்மா உடல் கொண்டிருக்கும் போது அது கண்ணுக்குப் புலனாகின்றது. அதை நாம் தொட முடியும், உணர முடியும். ஆனால், உடல் மறைந்து ஆன்மா ஆவிநிலையை அடையும் போது அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை, உணரப்படுவதும் இல்லை. ஆனால் ஆன்மா உடல் கொண்டிருந்தாலும், அது ஆவிநிலை அடைந்தாலும், H2O போன்று அதன் மெய்நிலையில் மாற்றம் ஏதும் கிடையாது. சுருங்கக் கூறின் பனிக்கட்டி, நீர், நீராவி அனைத்தும் H2O’வின் நிலைமாற்றங்களே (change of state) மெய்நிலை மாற்றங்கள் அல்ல. அதே போன்று மரணம் என்பது ஒரு நிலைமாற்றமே அன்றி வேறில்லை. ஆன்மா ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையை அடைகின்றது, ஆனால் H2O போன்று அதன் மெய்நிலை மாறுவதே இல்லை. மரணம் என்பது புலப்படும் நிலையில் இருந்து உணரப்படா நிலையை அடைதலாகும். உடல் மட்டுமே அழிகின்றது, ஆன்மா நித்தியமானது.