(திரு ஃபாத்தியாஸம் உலகளாவிய பஹாய் சமூகத்தின் அதிவிழுமிய அமைப்பான, உலக நீதிமன்றத்தின் உருவாக்கத்திலிருந்து சுமார் 43 ஆண்டுகள் வரை அதன் ஒன்பது உறுப்பினர்களுள் ஒருவராக பணியாற்றியவராவார்)
திரு ஹூஷ்மண்ட் ஃபாத்தியாஸத்திற்காக திரு அலி நாக்ஜவானி எழுதிய புகழாரம்
அன்பார்ந்த நண்பர்களே,

ஒரு மகத்தான ஆன்மாவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். அதன் வாழ்வு முழுவதற்கும் உயிர்ப்பூட்டிய ஆன்மவுணர்வின் பண்புகளை நினைவுகூற நாம் இங்கு வந்திருக்கின்றோம்.
அன்பார்ந்த ஹூஷ்மண்ட் ஃபாத்தியாஸத்தின் மறைவு ஓர் ஈடு செய்திட முடியாத இழப்பாகும். அவரின் மறைவு அவரது அன்பார்ந்த குடும்பத்தினருக்கோ, நண்பர்கள் குழாமிற்கோ கெனடா நாட்டு பஹாய்களுக்கோ மட்டும் ஏற்பட்ட ஓர் இழப்பல்ல, மாறாக அது கல்வி, இலக்கியம் சார்ந்த தனிச்சிறப்புத் துறைக்கும் ஏற்பட்ட ஓர் இழப்பாகும். அவர் வெகு அபாரமாகத் தனிச்சிறப்புப்படுத்திய விலைமதிப்பற்ற பண்புகளின் இழப்பும் ஆகும்: மேன்மை மற்றும் பணிவு, நேர்மை மற்றும் வாய்மை ஆகிய பண்புகள் அரிதான, விரும்பத்தகுந்த, ஓர் ஒப்பிலா நகைச்சுவை உணர்வுடனும் வாழ்வில் ஓர் ஆழ்ந்த களிப்புணர்வாலும் இணைந்திருந்தன.
அன்பார்ந்த ஹூஷ்மண்டை என் சிறிய வயதில் தெஹரானில்தான் முதன் முதலில் சந்தித்தேன். அவருக்கு அப்போது 17 வயதாகியும் நான் அவரைவிட சில வருடங்கள் மூத்தும் இருந்தேன். அப்போது, இராக் நாட்டின் பஹாய் சமூகத்திற்கு மனிதவளங்கள் தேவைப்பட்டதால் அஃது ஆதரவு கோரி தன் சகோதர நாடான இரான் நாட்டிற்கு வேண்டுகோள் விட்டிருந்தது. ஹூஷ்மண்ட் பஹாய் வகுப்புகளுக்கு வருவதை நிறுத்திய போது, அதன் காரணத்தைத் கண்டறிய நான் முற்பட்டேன். அப்போது, ஹூஷ்மண்ட் தமது அன்பு பெற்றோர்களின் அங்கீகாரத்தோடு நாட்டைவிட்டு அப்புதிய சேவைத்துறையில் தம்மைவிட அதிக வயதுடையோருடன் சேர்ந்துகொண்டார் என்பது தெரிய வந்தது. சேவைக்கு முன்னெழுந்தோரில் ஹூஷ்மண்டின் ஒத்த வயதினர் பலர் இருந்தனர். ஆனால், அவர் தன்னிச்சையாக அம்முடிவிற்கு வந்திருந்தார். அவர் தமது குடும்பத்தினர் உடன்செல்லாத நிலையில் தமது சொந்த முயற்சியில் அப்பயணத்தை மேற்கொண்டார். பிறகு சில காலம் சென்று மற்ற முன்னோடிகளுடன் அவர் நாடு திரும்பிய போது, அவர் பல இன்னல்களையும், ஏமாற்றங்களையும், திடீர் மாற்றங்களையும் சந்தித்திருந்தார். ஆனால், அவர் தமது அர்ப்பணத்தில் வலுவடைந்தும் சமயத்தின் மீதான அன்பில் உறுதியடைந்தும், கடவுளின் புனித ஒப்பந்தத்தில் நிலையுறுதியடைந்தும் இருந்தார்.
சமயத்திற்கான சேவையில் ஹூஷ்மண்டின் ஆரம்ப முயற்சிகள் இவையே ஆகும். அவர் நாடு திரும்பியவுடன் உடனடியாகப் போனைகளைத் தீவிரமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், அதன் மூலமாக சமயத்தின் அடிப்படைகளை விரைவாகக் கிரகித்துக்கொள்ள ஆரம்பித்தார். பாரசீக மொழியில் அவரின் வல்லமையும் அதன் இலக்கியங்களின்பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் பஹாய் எழுத்தோவியங்களையும் பிறர் படைப்புகளையும் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு அவருக்கு உதவியாக இருந்தன. அவரின் இலக்கியப் படைப்புகள் வெகு சிறப்பானவை என்பது என் கருத்தாகும். அத்தகைய தரத்தை வெகு சிலரால் மட்டுமே அடைய இயலும்; அவரின் பாணி, சரளம், மென்மையாக வெளிப்படுவதும், வசீகரம் நிறைந்ததும் ஆகும். அவர் இரான் நாட்டின் தேசிய ஆன்மீகச் சபையின் மொழிபெயர்ப்புச் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பிறகு அத்துறையில் அவர் சிறந்து விளங்கினார்.
இவ்வுலக வாழ்வில் அவருக்கு ஒரு வெகு அன்புமிகு துணைவியார் அருளப்பட்டிருந்தார். ஷாஃபிகே ஃகானும் அவரது வாழ்நாள் முழுவதற்குமான உடனுழைப்பாளரும், ஆதரவாளரும், சக-பணியாளருமாக இருந்தார். அவர் ஹூஷ்மண்டின் சக-முன்னோடியாகவும் இருந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆனவுடன் அவர்கள் ஷிராஸ் நகரில் குடிபெயர்ந்ததே அவர்களின் முதல் முன்னோடி அனுபவமாகும். பாப் அன்னலின் அருளில்லத்தின் நிழலின் கீழ்தான், எனக்கும் வாயொலெட்டுக்கும் அவர்களுடன் ஒன்றாகச் செயல்படும் பாக்கியம் கிடைத்தது. இந்த நகரில்தான் தம்பதியினராக அவர்களோடு ஆர்வத்துடன் உடனுழைக்கும் முதல் அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது. அவர்களின் இல்லத்தில் எங்களுக்குக் கிடைத்த வாஞ்சைமிகு சினேகபாவச் சூழலாலும் அவர்களைப் பிணைத்திருந்த உண்மையான நட்பாலும் வாஞ்சையாலும் நான் எப்போதுமே கவரப்பட்டதுண்டு.
அதன் பிறகு விரைவிலேயே, ஹூஷ்மண்ட், ஷாஃபிகே, அவர்களின் குழந்தையான ஷெஹாப் ஆகியோர் குடும்பமாக இந்திய நாட்டின் புது டில்லிக்குக் குடிப்பெயர்ந்தனர். அங்கு அக்குடும்பத்தினருக்கு, ஷாபாஸ், ஷாஃபிக் என மேலும் இரண்டு மகன்கள் அருளப்பட்டது. விரைவில் ஹூஷ்மண்ட் இந்திய நாட்டு பஹாய்களின் அதி உயரிய நிறுவனமான தேசிய ஆன்மீகச் சபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவர் அச்சபையின் ஆக்கமிகு செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டபோது நான் ஆச்சரியப்படவே இல்லை.
அவரின் நடவடிக்கைத் துறை, நிர்வாகக் கடமைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் இந்தியாவில் சமயபோதனையில் பிரகாசமிகு விளக்குகளில் ஒருவராகத் திகழ்ந்தார். மக்கள்திரள் போதனை என அப்போது அழைக்கப்பட்ட போதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நாடுகளின் வரைபடத்தில் இந்திய சமூகமும் இடம்பெற்றிட அவர் உதவினார். வாய்ப்புகள் நிறைந்த இக்காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் அவர் படைப்புத்திறனின் முதல் கனியான, ‘புதிய தோட்டம்’ நூலை படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். வெகு தெளிவுடனும் எளிமையுடனும் விறுவிறுப்பாகவும் துலக்கத்துடனும் சமயத்தின் அடிப்படைகளை வழங்குவற்கு அவ்வற்புத நூலை வெகுமகிழ்வுடன் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றேன்.
பத்தாண்டு அறப்போர் 1963ல் ஒரு முடிவிற்கு வந்தது; பாதுகாவலரின் போதனை, விரிவாக்கக் குறிக்கோள்கள் அடையப்பட்டன. ஹைஃபாவில் முதல் அனைத்துலக மாநாடும் நடந்தேறியது. வெகு நீண்ட காலத்திற்குப் பிறகும் புனிதநிலத்திலும் அவரது அன்பானச் சூழலிலும் ஹூஷ்மண்டை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பினால் நான் பெரிதும் களிப்டைந்தேன். இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியின்போது உலக நீதி மன்றமான அந்த அதிவிழுமிய நிறுவனத்தின் முதல் தேர்தலில் அதன் ஒன்பது உறுப்பினர்களுள் ஒருவராக ஹூஷ்மண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். கித்தாப்-இ-அக்டாஸில் பஹாவுல்லா வழங்கியுள்ள வாக்குறுதியின் உரு வெளிப்பாட்டை இந்த நிறுவனத்தின் தேர்தல் அடையாளப்படுத்தியது. அவர் அந்த நிறுவனத்தில் தன்னலமின்றி, அர்ப்பணத்துடன், தனிச்சிறப்புடன் நாற்பது வருடகாலத்திற்குச் சேவையாற்றினார். அக்காலகட்டத்தில் அவரோடு ஒன்றாகச் சேவை செய்யவும், அவரின் தன்னலமின்மையைக் காணவும், அவரது பக்தியால் பயனடையவும் ஊக்கம் பெறவும், தினசரி அவரது ஆன்மீகத் தனிச்சிறப்பு, நேர்மைத்தன்மை ஆகியவற்றின் தாக்கத்தைக் காண்பதற்குமான பாக்கியம் எனக்குக் கிட்டியது.
உலக நீதிமன்றத்தின் அலுவலகங்கள் முதலில் #10 ஹாப்பார்ஸிம்மில் நிறுவப்பட்டபோதும் அதன் பிறகு கார்மல் மலைச் சரிவில் அதன் முறைப்படியான இருக்கைக்கு மாற்றப்பட்டபோதும், ஹூஷ்மண்டின் அறையும் என் அறையும் எப்போதுமே அருகருகே அமைந்திருந்தன. நாங்கள் இருவரும் அருகாமை எனும் வார்த்தையின் முழு அர்த்தத்தை பிரதிபலித்தோம். உலக நீதிமன்றத்தின் கூட்டங்களுக்கு அப்பாற்பட்டு, வெகு அணுக்கத்துடன் நாற்பது வருடகாலத்திற்கு நான் ஒன்றாகச் செயல்பட்ட உலக நீதிமன்றத்தின் ஓர் உறுப்பினர் ஆவார் அவர். அவர் எக்காலத்திலும் தனக்கு எல்லாம் தெரியும் எனும் விதத்தில் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை: ஓர் அரசருக்கு வழங்குவது போல் அவர் தமது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் முற்றாகத் தம்மீது எவ்வித கவனமும் விழாத வகையில் வழங்குவார். அவர் பணிவையும் மேன்மையையும் பூரணத்தோடு ஒன்றிணைத்தார்.
அந்த நாற்பது வருடகாலத்தின்போது நாங்கள் ஓய்வாக இருந்த பல வார இறுதி நாள்களின்போதெல்லாம், நாங்கள் ஒன்றாக கோல்ஃப் திடல்களில் பொழுதைப் போக்கியது உண்டு. அவ்வேளைகளில் நாங்கள் எங்களின் கடுமையானப் பொறுப்புக்களைச் சற்று மறந்து அவ்வெண்மை நிறப் பந்தின் மீது — அது செல்ல வேண்டிய திசை, அதன் இறுதி இலக்கு ஆகியவற்றின்பால் — கவனம் செலுத்துவோம். ஹூஷ்மண்டின் நிலையான ஆன்ம விழிப்புணர்வு, அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் புதுப்புது நகைச்சுவைகள், அவரின் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் பணிவான குரலொலியின் அதிர்வுகள் நான் என் உள்ளத்தில் போற்றிவரும் நினைவுகளாகும். அவை என்றுமே அழியாத பசுமையான நினைவுகளாகும்.
அவரின் இவ்வொளிமயமான அர்ப்பணமிக்க சேவைக்காலம் முடிந்தபின், ஹூஷ்மண்ட் தமது அன்பு மனைவியான ஷாஃபிகே ஜூனோடு வான்கூவர் நகரில் குடியேறினார். அவர்களுடனான எங்களின் தொடர்பு இப்போது தொலைபேசி உரையாடல்களாகக் குறைந்தன. ஆனால், அத்தொலைதூரத்திலிருந்து அவர்களின் குரல்களைக் கேட்கும்போதெல்லாம், ஹூஷ்மண்டின் சிரிப்பலைகள் எங்கள் செவிகளை அடையும்போதெல்லாம், எங்கள் உள்ளங்கள் களிப்பால் நிறைந்தன. எங்கள் ஆன்மாக்கள் புலகாங்கிதமடைந்தன. வான்கூவரில் அவர் குடியிருந்தது அந்நகரின் நண்பர்களுக்கும், ஏன் கெனடா நாட்டு பஹாய்களுக்கே ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இக்காலகட்டத்தில் சமயத்தை முன்னிலைப்படுத்துவதற்காக மாநாடுகளுக்கும் ஒன்றுகூடல்களுக்கும் அவர் வழங்கிவந்த தொடர்ந்தாற்போன்ற, ஜீவாதாரமான ஆதரவு குறித்து கேள்விப்பட்டும், பாரசீக நண்பர்களுக்கும் அவர்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் அவர் வழங்கிவந்த தூண்டுகோலளிப்பதும் அகத்தூண்டலளிப்பதுமான வானொலி நிகழ்ச்சிகளைச் செவிமடுக்கும்போதும் அவரின் வார்த்தைகளைப் படிக்கும்போதும் நான் பெருமகிழ்ச்சியடைந்தேன். அவர் தமது வாழ்நாளின் இறுதிவரை, தமது இறுதி துளி சக்திவரை, ஆங்கிலத்திலிருந்து பாரசீக மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவையைக் குறிப்பாக ஷோகி எஃபெண்டியின் எழுத்தோவியங்களை அவர் மொழிபெயர்த்தே வந்தார். எத்தகைய மரபுச்செல்வத்தை அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ளார்!
இரண்டு வாரங்களுக்கு முன் வான்கூவர் நகரில் நடந்த இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டதே அவர் தமது வாழ்நாளில் ஆற்றிய இறுதி சேவையாகும். உலக நீதி மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டப்பட்ட அந்நிகழ்ச்சியில் அவர் வழங்கிய நெகிழவைக்கும் சொற்பொழிவு, அங்கு ஒன்று கூடியிருந்தோருக்கு வழங்கப்பட்ட ஊக்கப்பரிசாக இருந்தது. பல வருடங்களுக்கு முன் தெஹரான் நகரில் ஓர் இளைஞராக அவர் ஆரம்பித்த அவரின் ஆன்மீகப் பயணம், கெனடா நாட்டின் இளைஞர்களிடையே தனது இறுதி இனிய கனியை ஈன்றது. அவரது உரையைச் செவிமடுப்பதற்குத்தான் அவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும், அவர் இறுதிவரை தமது சேவையை நிறுத்தாமல் மறைவுற்றதில் எத்தகைய அருட்பேரைத்தான் அடைந்துள்ளார். என் அருமை ஹூஷ்மண்ட் சமயத்தை மேம்படுத்துவதற்காகத் தமது வாழ்வையே தியாகம் செய்ய முடிந்தது கண்டு நான் சற்றுப் பொறாமையே கொள்கின்றேன்.
மனித ஆன்மாவெனும் சூரியனுக்கு மனிதவுடல் என்பது ஒரு மேகத்தைப் போன்றது என்பது நமக்குத் தெரியும். நமது உலகவாழ்வின்போது அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அவற்றின் ஒளியைப் பொழிவதற்காக நமது உடலின் தடைகளை ஊடுருவ வேண்டும். ஆனால், நாம் இந்த உலக வாழ்வை நீத்திடும் போது மரணம் என்பது அம்மேகங்களைக் கலைக்கின்றது, சூரியனின் ஒளியும் எவ்விதத் தடைகளுமின்றி பிரகாசிக்கின்றது. ஹூஷ்மண்டின் அன்பார்ந்த ஆன்மாவின் பிரகாசங்கள் முன் எப்போதும்விட இப்போது நமக்கு வெகு அருகாமையில் உள்ளன என்பதாக நான் உணர்கின்றேன்.
ஹூஷ்மண்டின் அன்புத் துணைவியான ஷாஃபிகே ஃகானும், அவர்களின் மகன்கள் ஷேஹாப், ஷாபாஸ் இருவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவரின் மென்மையான இதயம் படைத்த சகோதரி மெஹர்ஷிட் ஃகானுமிற்கும் அவரின் அன்புச் சகோதரரான ஷாஹின் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்க்கும், அருகிலும் தூரத்திலும் இருக்கும் அல்லது உலகம் முழுவதும் இருக்கும் அவரின் அன்பர்கள் அல்லது ஆர்வலர்கள் எல்லார்க்கும் நான் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விண்ணுலகில் ஹூஷ்மண்டின் பிரகாசமிகு ஆன்மாவின் வளர்ச்சிக்காகவும் அவரின் துக்கத்தில் ஆழ்ந்துள்ள சிறப்புமிகு குடும்பத்தினருக்கும், அவரின் உதாரணத்தால் வெகுவாக நெகிழப்பட்டு, அவருக்காக, சமயத்திற்குச் சேவை செய்வதற்காக, நாமும் நம்மை மறு அர்ப்பணம் செய்திட உங்கள் பிரார்த்தனைகளுடன் சேர்த்து நானும் என் பிரார்த்தனைகளை ஒன்றுசேர்க்கின்றேன்.