பஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை


பஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை

பஹாவுல்லா பற்றிய மனதைத் தொடவல்ல மொழிபெயர்ப்பினை டாக்டர் காஹ்ஜெ ஃபானானாபாஜிர் பகிர்ந்துகொண்டார். இக்கதை ஆங்கிலத்தில்/தமிழில் இதற்கு முன்னர் பிரசுரமாகாததால், நண்பர்களுக்கு ஆர்வத்தைத் தருமென நம்புகின்றேன். ஐரோப்பாவில், பாயம்-இ-பஹாய் அவர்களின் சமீபத்திய அரேபிய வெளியீட்டில் இக்கதை காணப்படுகின்றது.

பர்ஜான்ட் நகரின் ஒரு பகுதியான குசேவ் எனும் ஊரில் வாழ்ந்தவரான செல்வாக்குமிக்க பணக்காரர் ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ, அருளழகர் பஹாவுல்லாமீது நம்பிக்கைகொண்டார். பஹாவுல்லாவின் சமயத்தை அவர் ஏற்றதன் காரணமாக அவரின் பெரும்பாலான உறவினர்கள் கடவுள் சமயத்தை ஏற்றனர்.

புனிதர் பஹாவுல்லாவை நேரில் சந்திக்க ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ புனிதப் பயணம் மேற்கொண்டார். முதலாம் இரண்டாம் நாள்களில் அவர் சக யாத்திரிகர்களோடு பஹாவுல்லவைச் சந்திக்கச் சென்றார். பின் யாத்திரிகர்கள் இல்லம் திரும்பியதும் தனக்குள், தன் ஆத்மா மற்றும் மனதுக்குள்: தனித்தன்மை வாய்ந்த, தெய்வீக நிகழ்வுகள் ஏதேனும் நடக்குமென எதிர்பார்த்து ஆறு மாத கால துயரமான கடினமிக்க பயணத்தை மேற்கொண்டு ஆக்கா நகர் நோக்கி வர இணங்கினேன் … ஆனால் பஹாவுல்லா மற்ற மனிதர்களைப்போல்தான் பேசுகிறார். மற்ற மனிதர்களைப்போலவே அறிவுரைகள் வழங்குகிறார், உபதேசிக்கிறார். இங்குத் தனித்தன்மையோ அற்புதங்களோ ஏதுமில்லை, என எண்ணினார்.

இப்படிப்பட்ட எண்ணங்களில் மூழ்கியிருந்த என்னிடம் மூன்றாம் நாள் பஹாவுல்லா என்னை மட்டும் சந்திக்க விரும்புவதாக ஊழியர்களில் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார். நான் உடனே அருளழகரின் இருப்பிடம் சென்று அறையின் திரைச்சீலையை அகற்றி அவர் முன்னிலையில் நெருக்கமாக நின்றேன். நான் சிரம் தாழ்த்திய அத்தருணமே அருளழகர் வர்ணிக்க இயலாத பிரகாசத்துடன் கண்களைப் பறிக்கும் ஒளியாகவும் காட்சி தந்தார். அந்த ஒளியின் கடுமையினைத் தாங்க முடியாத நான் அடுத்த கனமே நினைவிழந்தேன். ”ஃபீ அமனில்’லா” அதாவது ஆண்டவரின் பாதுகாப்புடன் செல் என்று அவர் கூறியது மட்டுமே என் நினைவில் இருந்தது.

ஊழியர்கள் என்னை நடைகூடத்திற்கு இழுத்துச் சென்று பின் யாத்திரிகர்கள் இல்லத்தில் சேர்ப்பித்தனர். அதன் பின் இரண்டு நாட்கள் என்னால் உண்ணவோ உறங்கவோ இயலவில்லை. நான் செல்லும் இடமெல்லாம் அவரது பிரசன்னத்தின் பிரமாண்டத்தைக் கண்டேன். அவர் இதோ இங்கே இருக்கின்றார்…அங்கே இருக்கின்றார் என மற்ற யாத்திரிகர்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தேன். எனது உபத்திரவத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சக யாத்திரிகர்கள் அப்துல் பஹாவின் உதவியை நாடினர். மேலும் இரண்டு நாள்களுக்குப் பின் மீண்டும் என்னைப் பஹாவுல்லாவின் முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். நான் அவரது முன்னிலையை அடைந்ததும் அவர் அன்புக் கருணையை என்மீது பொழிந்ததோடு கனிவாகவும் பேசினார். பிறகு உட்காருமாறு பணித்தார்.
ஜனாப் இ முஹமாட் குலி கான்! தெய்வீகச் சாரத்தின் அவதாரங்கள் மானுட ஆடைகளையும் துணிகளையும் அணிய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். திரை மறைவிலுள்ள அவர்களின் உண்மையான தோற்றம் வெளிப்படுத்தப்படுமாயின் தங்களுக்கு ஏற்பட்டது போல் மானுடமே சுயநினைவிழந்து கணப்பொழுதிலேயே தன்னுணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படும். மேலும் தொடர்ந்த பஹாவுல்லா: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத் தருகிறார்களென உங்களுக்குத் தெரியுமா?” “எனக்குத் தெரியாது,” என சிரம்தாழ்த்திச் சொன்னேன். “கிளியின் சொந்தக்காரர் கூ..ண்டுக்குள் ஒரு கிளியை வைத்திருந்தார். பிறகு ஒரு பெரிய பேழையைக் கொண்டு வந்து கூண்டின்முன் வைத்தனர். பிறகு ஒரு மனிதர் கண்ணாடியின் பின்புறம் மறைந்துகொண்டு சில சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் கூறுகிறார், பேசுகிறார். தன்னைப் போன்றதோர் கூண்டுக் கிளி ஒன்று (கண்ணாடியில் தோற்றமளிப்பது) பேசுவதாகக் கற்பனைசெய்து அக்கிளியும் பேச கற்றுக்கொள்கின்றது. கண்ணாடியின் பின்னால் இருக்கும் அந்த மனிதர் தொடக்கத்திலிருந்தே தன்னை வெளிப்படுத்தி இருப்பாரேயாயின் அக்கிளி பேசக் கற்றுக்கொண்டு இருக்காது. இதனால்தான் தெய்வீக அவதாரங்களும் தங்களின் அற்புதமான தோற்றத்தினைக் கொண்டு மனிதகுலத்தினை மிரளச் செய்யாதிருக்க வேண்டி அவர்கள் மனித உடையிலும் துணிகளிலும் இவ்வுலகில் தோன்றுகின்றார்கள்…”

பஹாவுல்லாவின் முன்னிலையிலிருந்து திரும்பிய இம்மனிதர் பரிபூரண மாற்றமடைந்திருந்தார். தனது இறுதிமூச்சுவரை மற்றவர்களுக்குப் போதிப்பதிலேயே ஈடுபட்டதோடு ஆன்மீக உள்ளுணர்வையும் பெற்றிருந்தார். இவ்வுலக வாழ்விலிருந்து தான் விடைபெறப்போவதாக அந்த இறுதி இரவில் முன்கணிப்பு செய்தார்.

பயாம்-இ-பஹாய்.