அருகதைமிகு காலணிகள்…
அப்துல் பஹா இரண்டாவது முறை நியூ யார்க் வந்தபொழுது அவர் கின்னி தம்பதிகளின் இல்லத்தில்தான் தங்கினார், இதே இல்லத்திலிருந்துதான் அவர் ஹைஃபாவுக்கும் திரும்பினார். கப்பல் மூலம் அவர் ஹைஃபா திரும்புவதற்கு முதல் நாள் திரு கின்னிக்கு தமது பொருள்களிலிருந்து பிரியாவிடைப் பரிசாகக் தாம் ஏதாவது கொடுக்க முடியுமாவென அப்துல்-பஹா கேட்டார். முதலில் திரு கின்னி எதையும் தேர்ந்தெடுப்பதற்குத் தயக்கம் காட்டினார், ஆனால் இறுதியில் தமக்கு அப்துல்-பஹாவின் ஒரு ஜோடி காலணிகள் கொடுக்கப்படக்கூடுமா என தெரிவித்தார். கடவுளின் பாதையில் சாந்தமான உறுதிப்பாட்டோடு நடந்திட்ட கால்களை பாதுகாத்த காலனிகள்காலணிகள் அல்லவா? அவற்றைத் திரு கின்னி எல்லாவற்றுக்கும் மேலாக நெஞ்சார நேசிப்பார்.

புன்னகையுடனான அன்புடன், ஒரு ஜோடி காலணிகளை அப்துல் பஹா எட்வர்ட் கின்னியிடம் கொடுத்தார். அவற்றை மெல்லிழைத்தாள்களால் கொண்டு கவனமாகச் சுற்றி தமது படுக்கையறையிலுள்ள ஒரு நிலைப்பேழையின் இழுப்பறையினுள் வைத்தார். பிரத்தியேகமான விலைமதிப்பற்றவையான அவற்றை வெகு அபூர்வமாகவே பிறரிடம் காண்பித்தாலும் தாம் பிரார்த்தனைச் செய்யும் போது மட்டும் அவற்றை அடிக்கடி தொட்டுக்கொள்வார்.
பிறகு ஒரு நாள், அவற்றை ஒருவரிடம் காண்பிக்க விரும்பினார். அவர் அந்த நிலைப்பேழையருகே சென்று, இழுப்பறையை இழுத்தார், ஆனால் காலணிகள் முற்றாகக் காணப்படவில்லை. மெல்லிழைத்தாளில் அவை இருப்பதற்கான அறிகுறி இல்லை, பிற இழுப்பறைகளிலும் அவற்றின் அறிகுறிகள் இல்லை, கவனமாகத் தேடியும் அறையின் வேறு எங்குமே அவற்றின் அறிகுறிகள் இல்லை. காலணிகள் எங்குமே காணப்படவில்லை.
ஆகவே ‘தந்தை’ கின்னி (அவரை நேசித்த நூற்றுக்கணக்கானோருக்கு அவர் ‘தந்தையாகி’ இருந்தார்) பிரார்த்தனைச் செய்ய ஆரம்பித்தார், மிகவும் குழம்பிப்போயிருந்த தமது ஆன்மாவின் ஆழங்களிலிருந்து அவர் பிரார்த்தித்தார். அந்த அன்பார்ந்த காலணிகள் தம்மிடமிருந்து ஏன் பறிக்கப்பட்டன? அவை எங்குதான் சென்றிருக்கக்கூடும்? என்னதான் நடந்திருக்கும்? அவற்றைப் பெற்றிருக்க தாம் தகுதியற்றவராகிவிட்டாரா? இறுதியில், அதுதான் பதில் என்பது அவருக்குத் தெரிந்தது. அவர் அதற்குமேலும் அக்காலணிகளை வைத்திருக்க தகுதியற்றவராகிவிட்டார். அப்படியானால் அதற்கான தகுதியை அவர் எவ்வாறு இழந்திருக்கக்கூடும்? அக்காலணிகளை அவர் கடைசியாக தமது கைகளால் தொட்டதிலிருந்து அந்த இடைப்பட்ட காலத்தில் அவை காணாமல் போய்விட்டன என்பதை உணர்ந்த அவர் என்ன தவறு செய்திருக்கக்கூடும்?
ஏறக்குறைய, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இருக்கும் என அவர் யூகித்தார். ஆகவே ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மணியாக, ஒவ்வொரு விநாடியாக அவர் அவ்விரண்டு வாரகாலத்தில் ஆழ்ந்து சிந்தித்தார். அவர் தமது செயல்களை நினைவுகூர்ந்தார்; தமது நோக்கங்களை அவர் ஆய்வுசெய்தார்; தமது சிந்தனைகளை மறு ஆய்வுச் செய்தார். பளிச்சென உருவாகிய சிந்தனைத் தெளிவில், அது என்னவென்பது அவருக்குத் தெரிந்தது. ஆழ்ந்த தன்னலம் மிகுந்த லௌகீகம்; பாசாங்கு நிறைந்த குறிக்கோள்கள்; நியாயமற்ற நடவடிக்கைகள். அவர் இவற்றினாலெல்லாம் குற்றவாளியாக இருக்கின்றார். ஆனால் அவற்றை அழகு நிறைந்த பெயர்களைக் கொண்டு அழைத்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டிருந்தார். இப்போதல்லவா தெரிகிறது, ஏன் அக்காலணிகள் காணாமல் போயினவென்று. அவ்விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் பெற அவர் எவ்வகையிலும் தகுதியற்றவர் என்பதை நிரூபித்திருந்தார். பணிவுடனும் வெட்கத்துடனும் தாழ்மையோடும் மன்னிப்புக்காக பிரார்த்தனைச் செய்தார். அதன் பின், சோகத்துடன், நிலைப்பேழை அருகே சென்று காலணிகளைப் பாதுகாத்து வந்த அந்த மெல்லிழைத்தாள்களையாவதுதொட்டிட இழுப்பறையைத் திறந்தார். என்னே ஆச்சரியம்! காலணிகள் இழுப்பறையினுள் இருக்கக் கண்டார். அவை, அங்கு மெய்யாகவும் தெளிவாகவும் காணப்பட்டன; அவரது விரல் நுனிகள் அவற்றின் மென்மையான தோலை ஸ்பரிசித்தன, அவற்றின் நன்கு தேய்ந்திருத்த அடிப்பாகங்கள் தொடுவதற்கு மிருதுவாக இருந்தன. காலனிகள் திரும்பியிருந்தன, ஆனால் அவை வழங்கிய எச்சரிக்கை மறக்கப்படவில்லை – நல்லதொரு பாடம் கற்கப்பட்டுவிட்டது.
திரு எட்வர்ட் கின்னியால் நியூ யார்க்கில் 1937 கூறப்பட்டது