குழந்தைகளுக்கு கல்வியளித்ததற்காக கைது


ஜெனேவா – பல வருடங்களுக்கு முன் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓரிடத்தில் குழந்தைகளுக்கு கல்வியளித்த பல பஹாய்கள் இரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹரான் நகருக்கு தென்-கிழக்கில் உள்ள கெர்மான் மாநிலத்தில் பாலர்-நிலை கல்வியளித்தின் தொடர்பில் இதுவரை நான்கு பஹாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பஹாய் அனைத்துலக சமூகம் உறுதிபடுத்தியுள்ளது. அந்த நகரில் மேலும் இரண்டு பஹாய்கள் கைது 13-மார்ச் அன்று செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை, மற்றும் அவர்கள் அக்கல்வியளிப்பில் பங்கு கொண்டனரா என்பதும் உறுதிபடுத்தப்படவில்லை.

“2003ல் நடந்த இந்த நில அதிர்வில் பாம் நகரில் இருபது விழுக்காடு ஆசிரியர்கள் உட்பட சுமார் 26,000 மக்கள் உயிரிழந்தனர்,” என ஜெனேவாவில் உள்ள ஐநாவின் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான திருமதி டையேன் அலாயி கூறினார்.

“இப் பஹாய்கள் அப்பகுதியில் கல்விமுறை ஏறத்தாழ முற்றாக அழிந்துவிட்ட அந்த இடத்தின் குழந்தைகளுக்கு இந்த அத்தியாவசியமான சேவையை வழங்கி வந்தனர்.”

சென்ற வாரம், பாம், கெர்மான் மற்றும் தெஹரான் போன்ற இடங்களில் பாலர் கல்வி எனும் பெயரில் தங்களின் சொந்த திட்டங்களை செயல்படுத்தி வந்த “பஹாய் குழு” ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாம் நகர புரட்சிமன்றத்தின் பொது-பிராசிக்யூட்டர் அறிவித்ததாக, இரான் நாட்டின் மாணவர் மன்ற செய்தி நிறுவனம் அறிவித்தது. பஹாய்கள் நில அதிரிவின் தொடர்பில் கலாச்சார, சமூக மற்றும் கல்வி தேவைகளுக்கான திட்டங்களை பஹாய்கள் துஷ்பிரயோகம் செய்ததாக முகமது ரேஸா சஞ்சாரி கூறிக்கொண்டார்.

“இப்போது நடக்கும் இந்த கைது நடவடிக்கைகள் இரான் அரசு அந்ந நாட்டில் வாழும் 3,00,000 பஹாய்கள் மீதிலான சமயரீதியான கொடுங்கோன்மை செயல்களை விரிவாக்கும் மற்றும் மேலும் அதிகப்படுத்தும் செயலின் ஓர் உதாரணமாகும்,” என திருமதி அலாயி குறிப்பிட்டார்.

இதுவும் சமீப காலமாக நடைபெறும் பிற நடவடிக்கைகளும், பஹாய்கள் தாங்கள் வாழும் இடங்களில் மக்களுக்கு தேவைப்படும் உடனடி அத்தியாவசியமான சேவைகளை வழங்கிடும்போது கூட, அவர்கள் முஸ்லிம் மக்களை நெருங்கவிடாமல் தடுப்பதில் அரசு அதிகாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.”

இஸ்பாஃஹான் நகரில் 18 வயதான இருவர் உட்பட மூன்று பஹாய்கள் குழந்தைகளுக்கு கல்வியளித்ததற்காக இம்மாத முற்பகுதியில் கைது செய்யபட்டனர். இவர்கள் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இரான் நாட்டில் இதுவரை சுமார் 79 பஹாய்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரான் நாட்டு பஹாய் கைதிகள் பற்றிய ஒரு கடிதம்


அன்புமிகு நண்பர்களே,

நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் மற்றும் இந்த பஹாய் உண்ணா நோன்பு காலத்தில் களிப்புணர்வோடு இருப்பீர்கள் என்பது என் பிரார்த்தனை. பாஃரிபா மற்றும் மாஹ்வாஷ் (யாரான் அல்லது தோழர்கள் எனப்படும் இரான் பஹாய்களின் தலைமத்துவத்தின் உறுப்பினரான இரண்டு பெண்கள்) பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அவர்கள் சிறை மாற்றப்பட்டு கடுங் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கொடிய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது நமக்கு தெரியும். (இங்கு பார்க்கவும்) அவர்கள் குற்றவாளிகளுடனும் போதைப் பித்தர்களுடனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நீண்ட நடைபாதை, அதன் இரு புறத்திலும் சிறை கூடங்கள் உள்ளன. பாஃரிபாவும் மாஹ்வாஷும் இந்த நடைபாதையின் முடிவில் உள்ள கழிவறை மற்றும் குளியலறைக்கு அருகே சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவ்விடம் மிகுந்த துர்நாற்றமும் அசுத்தம் மிகுந்தும் உள்ளது. அவர்களுக்கு எதிரே உள்ள அறையில் உள்ள கைதி இரண்டு கொலைகள் புரிந்தவர்.

பல வருடங்களாக சிறையில் வாடும் பஹாய் யாரான் அல்லது தோழர்கள் எனப்படும் பஹாய் தலைமைத்துவம்

உண்ணா நோன்பை (பஹாய் உண்ணா நோன்பு – மார்ச் 2லிருந்து 20ம் தேதி வரை – 19 நாட்களுக்கு பஹாய்கள் சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சுமார் 12 மணி நேரத்திற்கு உண்ணா நோன்பு நோற்பார்கள்) ஆரம்பிப்பதற்காக அதிகாலையில் 4:30 மணிக்கு எழுந்தனர். எதிர் அறையில் உள்ள கொலை குற்றவாளியான பெண் கைதி எழுந்து எதிர் அறையில் வெளிச்சம் தெரிவது கண்டு தன் அறையில் விளக்கை போட்டு பாஃரிபா மற்றும் மாஹ்வாஷின் அறைக்கு சென்று ஏன் அதிகாலை வேளையில் எழுந்துள்ளனர் என வினவினார். அதற்கு அவர்கள் இருவரும் தாங்கள் உண்ணா நோன்பு நோற்பதாகவும் அதற்காக எழுந்துள்ளதாகவும் ஆனால் உண்பதற்கு எதுவும் இல்லாததால் பிரார்த்தனை மட்டும் செய்யப்போவதாகவும் கூறினர். இதைக் கேட்ட அப்பெண்மனி தனது அறைக்கு சென்று காய்ந்த ரொட்டித் துண்டுகள் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவர்கள் இருவரையும் முடித்துவிட வேண்டும் (கொலை செய்யவேண்டும்) என அதிகாரிகள் தனக்கு கூறியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் எவ்வளவு நல்லவர்கள் என்பதை இப்போது தான் காண்பதாகவும் கூறினார்.

அன்புமிகு நண்பர்களே: பஹாய் புத்தாண்டான நவ்-ருஸ் பண்டிகை விரைவில் வருகிறது. உண்ணா நோன்பின் முடிவில் அப்புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.

இவர்கள் அனைவருக்காவும் நாம் காலையும் மாலையும் பிரார்த்தனை செய்வோம்.

அன்புடன்

அன்புடன்

பெண்கள் உரிமைக்காக போராடிய தாஹிரி


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

தம்மை திருமணம் செய்துகொண்டால் தாஹிரியை விடுதலை செய்வதாகக் கூறும் நாஸிரிட்டின் ஷா – நாடகத்தின் ஒரு காட்சி

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.