(திரு வில்லியம் சீயர்ஸ் எழுதிய ‘கதிரவனை விடுவியுங்கள்’ எனும் நூலிலிருந்து.)
(பஹாய் சமயத்தின் முன்னோடித் தூதரான பாப் அவர்கள் அரசாங்கத்தால் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய உலக வாழ்வின் இறுதித் தருணங்களின் விவரிப்பு)
வெரிச்சோடிக் கிடந்த அச்சாலையின் வழி ஒரு சுழல்காற்றின் தூசிப் படலம் சப்தமின்றி நகர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு பூணையின் மீது ஒரு காகிதத்தை அக்காற்று உந்தித்தள்ளியது. பயத்தால் அப்பூணை வாசல்வழி வீட்டிற்குள் ஓடி மறைந்தது. பிறகு அங்கு அசைவுகளற்ற நிசப்தமே சூழ்ந்தது.
சாலையின் ஒரு மூலையிலிருந்து ஒரு சிறுவன் திடீரெனத் தோன்றி, வெரிச்சோடிக்கிடந்த அச்சாலையின் வழி விரைந்தோடினான். அச்சிறுவனின் காலனிகளற்ற கால்கள் வெப்பம் மிகுந்த மண்ணிலிருந்து சிறு சிறு தூசிப்படலங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தன.
“அவர் வருகிறார்! அவரை இவ்வழியாகத்தான் கொண்டு வருகிறார்கள்!” என அச்சிறுவன் உரத்த குரலில் கூவினான்.
ஓர் எரும்புப் புற்றின்மீது கால்கள் பட்டுவிட்ட எரும்புக் கூட்டம் போன்று பதட்டமுற்ற மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக் கிளம்பினர். எதிர்பார்ப்புடன் சிலிர்ப்புற்ற முகங்கள் அச்சாலைக்கு உயிர்ப்பூட்டின. அணுகிவரும் கொந்தளிக்கும் மக்கள் கும்பலின் சினம் நிறைந்த கூச்சலைக் கேட்டு அவர்களின் ஆர்வமும் அதிகரித்தது.
சாலை வளைவில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் என மக்கள் வெள்ளம் வழிந்தோடியது. அவர்கள் பின்பற்றிச் சென்ற இளைஞர் இவர்களின் அவமதிக்கும் கூச்சல்களினால் திணறலுக்குள்ளானது போல் தோன்றியது. மக்கள் கூட்டம் அது கண்டு களிப்புக் கூச்சல் எழுப்பியது. அவ்விளைஞர் தங்களைவிட்டு தப்பியோட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் ஒரு கைதி. அவர் கழுத்தில் ஒரு வளையம் மாட்டப்பட்டு அதில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. காவலர்கள் அக்கயிற்றைப் பற்றியிழுத்து அவ்விளைஞரை அதிகாரிகளிடம் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அங்கு அவ்விளைஞரின் மரண தண்டனைக்கான ஆணைப்பத்திரம் கையெழுத்திடப்படும்.
அவ்விளைஞரின் கால்கள் தடுமாறிய போது காவலர்கள் அவருக்கு ‘உதவியாக’ கயிற்றை வெடுக்கென்று பிடித்து இழுத்தனர் அல்லது காலால் எட்டி உதைத்தனர். அவ்வப்போது யாராவது கூட்டத்திலிருந்து பிரிந்து காவலர்களைத் தாண்டி வந்து அவ்விளைஞரை கையாலோ கம்பாலோ அடித்தனர். அவ்வாறு செய்தவர்களை கூட்டம் கரகோஷத்தாலும் சப்தம் போட்டும் ஊக்குவித்தது. கூட்டத்திலிருந்து ஒரு கல்லோ குப்பைக் கூளமோ அவ்விளைஞரைத் தாக்கியபோது காவலர்களும் கூட்டத்தினரும் எக்காளமிட்டுச் சிரித்தனர். “மாவீர்ரே, இப்பொழுது உம்மைக் காப்பாற்றிக்கொள்வதுதானே” “உமது கட்டுக்களை உடைத்தெரியுங்கள்! எங்களுக்கு மாயாஜாலம் எதையாவது செய்து காட்டுங்கள்,” என அவரைப் பின்தொடர்ந்த ஒருவர் அவரைப் பார்த்து கேலி செய்து அவர் மீது ஏளனத்துடன் எச்சிலை உமிழ்ந்தார்.
அவ்விளைஞர் இராணுவ முகாமிற்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு அவரைக் கொலை செய்யப்போகும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பொது கதிரவனால் காய்ந்துபோன அந்நகரின் சதுக்கத்தில் உச்சிவேளை நிலவியது.
நிமிர்த்தப்பட்ட துப்பாக்கிகளில் கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் சூரியன் ஒளி பிரதிபலித்தது. அத்துப்பாக்கிகள் அவ்விளைஞரின் மார்பினை நோக்கி குறிவைக்கப்பட்டிருந்தன. அவ்விளைஞரை சுட்டு அவரின் உயிரைப் பறிப்பதற்கான ஆணைக்காக காவலர்கள் காத்திருந்தனர்.
அப்போது சதுக்கத்தில் பெருங்கூட்டம் தொடர்ந்தாற்போல் கூடிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளின் கூறைகளில் ஏறி அக்கொலைகளத்தினை நோக்கியபடி நின்றுகொண்டிருந்தனர். தங்கள் நாட்டையே கலக்கியிருந்த அவ்விசேஷ இளைஞரின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு அவர்கள் ஆவலாக இருந்தனர். அவர் ஒன்று நல்லவராக இருக்கவேண்டும் அல்லது தீயவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு அவர் எப்படிப்பட்டவர் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை.
முப்பது வயைத்கூட தாண்டாத ஓர் இளைஞராக அவர் காணப்பட்டார். முடிவு நெருங்கிவிட்ட இவ்வேளையில், அவர்களி வெறுப்புக்கு ஆளான அவ்விளைஞர் அப்படியொன்றும் அபாயகரமானவராகத் தோன்றவில்லை. பார்ப்பதற்கு பலமற்றவராக ஆனால் மென்மை குணம் படைத்தவராகவும் அதே வேளை உறுதியுடனும் பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றினார். தம்மை தாக்கவிருந்த அத்துப்பாக்கிக் குழல்களை அவர் நிதானமாக பார்த்துக்கொண்டிருந்த போது அவர் முகத்தில் சாந்தமும், பார்க்கப்போனால் ஆர்வமுமே தோன்றின.