ஓர் அடிமை இறைத்தூதருக்குப் போதிக்கின்றார்


ஓர் அடிமை இறைத்தூதருக்குப் போதிக்கின்றார்

நன்றி: Christopher Buck • ஜனவரி 16, 2014 •

ஆரம்பத்திலிருந்தே பஹாய் சமயம் அடிமைமுறையை எதிர்த்து வந்துள்ளது.

பஹாவுல்லாவின் முன்னோடியான பாப் பெருமானாரின் தந்தையார் 1828ல், பாப் அவர்கள் சிறுவராக இருந்தபோதே, இறந்துவிட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய மாமாவான (இவர் பின்னாளில் பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களுள் ஒருவராகி, அவரது புதிய சமயத்தின் உயிர்த்தியாகிகளுள் ஒருவரானார்) ஹாஜி மிர்ஸா சைய்யிட் அலி என்பவரால் வளர்க்கப்பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாரசீகத்தின் சீமான்கள் அனைவருமே தங்கள் இல்லங்களில் அடிமைகளை வைத்திருந்தனர்.

abdi

பாப் பெருமானார் மாமாவின் இல்லத்தில் முபாரக் எனும் பெயர் கொண்ட அடிமை ஒருவர்  இருந்தார் (பின்னாளில் இவர் ஹாஜி முபாரக் என அழைக்கப்பட்டார்). UCLA எனப்படும் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மொழி மற்றும் கலாச்சாரத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக். நாடெர் சாயிடி, இதுவரை அறிந்திராத, பாப் அவர்களின் படைப்பான கித்தாப்-இ-து’ஆ (முப்பது பிராத்தனைகள் நூல்) எனப்படும் நூலைக் கண்டுபிடித்துள்ளார். பாப் அவர்கள் இப்புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, சுயவரலாறு அடங்கிய பிரார்த்தனைகள் திரட்டில், தமது சிறு வயதில் தம்மை வளர்க்கவும் தமக்குக் கல்வியூட்டவுமான பொறுப்பை அடிப்படையில் யார் ஏற்றிருந்தது என்பதை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க தகவல்களை  வெளிப்படுத்துகின்றார்.

பாப் பெருமானாருக்கு ஏழு வயதாகிய போது என்ன நடந்தது என்பதை பிரார்த்தனை #7 பிரதிபலிக்கின்றது. அவர் எப்போதும் செய்வது போன்று, தமது பெற்றோருக்காக முதலில் பிரார்த்தித்த பிறகு தமது சிறு வயதிலும் அதன் பின் தமது மலர்ச்சிப்பருவத்திலும் தம்மைப் பேணிப் பயிற்றுவித்தவரை ஆசீர்வதிக்குமாறு பின்வரும் மனதைக் கிளறும் வார்த்தைகளால் இறைஞ்சுகின்றார்:

என் மீதும் எனது ஏழு வயதில் என்னை உமது சார்பாக வளர்த்திட்ட, முபாரக் எனும் பெயர் கொண்டவர் மீதும், உமது மேன்மைமிகு புனிதத்தன்மையின் பேரொளிக்கும் உமது திருவெளிப்பாட்டின் வல்லமையின் அற்புதங்களுக்கும் உகந்தவற்றை அருள்வீராக.”  (– The Bab (from Nader Saiedi, “The Ethiopian King,” Baha’i Studies Review 17 (2011): 181–186 [183]. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பாப் பெருமானாரின் பிற படைப்புகளின் தற்காலிக  மொழிபெயர்ப்புகள் உட்பட, இது ஓமிட் காயிம்மகாமியின் மொழிபெயர்ப்பு.)

அதாவது, அடிப்படையில் தம்மை வளர்த்தவரும் பயிற்றுவித்தவரும் தமது மாமாவின் எத்தியோப்பிய சேவகரான முபாரக் என்பவரே என பாப் பெருமானார் நமக்குக் கூறுகின்றார்.

மற்றொரு வாசகப் பகுதியில், பாரசீக மன்னனான முகம்மத் ஷா (இறப்பு கி.பி. 1849), அவரது கொடிய பிரதம மந்திரியான, ஹாஜி மிர்ஸா ஆகாஸி (இறப்பு கி.பி. 1848) இருவரும், தம்மைக் கடவுளின் தூதர் எனும் முறையில் ஏற்க மறுத்ததன் பயனாக, நரகப் படுகுழியில் வீழ்ந்தனர் எனவும், அதே சமயம் வெளிப்படையில் எவ்வித சக்தியோ அந்தஸ்தோ அற்ற முபாரக், “நம்பிக்கை எனும் இராஜ்யத்தில் நன்மை செய்ததன் பயனாக” சுவர்க்கமெனும் ஜோதியை அடைந்தார், என டாக் சாயிடி குறிப்பிடுகின்றார். (டாக். சாயிடி, ப. 181)

மேலும், முப்பது பிரார்த்தனைகள் அடங்கிய இத்தொகுதியில் (அவர் வெளிப்படுத்திய மற்ற பிரார்த்தனைகள் உட்பட), பாப் பெருமானார் பின்வரும் வரிசை முறையில் பிரார்த்திக்கின்றார்: முதலில், தமது தாயாருக்கும் தந்தைக்காகவும் பிறகு “தம்மை வளர்த்தவருக்காகவும்” கடவுளின் ஆசிகளை வேண்டுகின்றார். இதற்கு முன், இச்சொற்றடர் பாப் பெருமானாரின் மாமாவைக் குறிப்பிடுவதாக பஹாய் கல்விமான்கள் கருதினர், ஆனால் அது அவ்வாறில்லை.

“எம்மை வளர்த்த அவர்” எனும் பாப் பெருமானாரின் மேற்கண்ட குறிப்பு, உண்மையில் அவரது மாமாவின் விசுவாசமும் அர்ப்பனமும் மிக்க எத்தியோப்பிய சேவகரான முபாரக்கே ஆவார். மேலும், “உண்மையில், பாப் பெருமானார், தமது தந்தைக்குரிய அதே ஸ்தானத்தில் முபாரக்கையும் கருதுகின்றார்,” என டாக். சாயிடி குறிப்பிடுகின்றார். (சாயிடி, ப. 183)

இப்பகுதியைத் தொடர்ந்து, “அவ்வயதில் தாம் விளையாடுவதற்காகத் தமக்கு ஒரு வில்லையும் அம்பையும் செய்து தந்த அவருக்காக (முபாரக்)” வாஞ்சையுடன் இறைவனுக்கு நன்றி கூறுவதோடு, “அருள் மற்றும் கருணை குறித்த உமது அறிவில் இருப்பவற்றிலிருந்து,” முபாரக்கை ஆசீரிவதிக்குமாறு கடவுளை வேண்டுகின்றார். (சாயிடி, ப. 183)

பாப் பெருமானார் (தமது காலத்தில்) அடிமைத்தளையை தடை செய்யவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருந்தது – அவர் ஜூலை 9, 1850ல் (அரசாங்கத்தால்) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மேலும் அதிக காலம் வாழ்ந்திருந்தால், சமயக்கோட்பாடு, தெய்வீகக் கட்டளை ஆகியவற்றிற்கு இணங்க நிச்சயமாகவே அடிமைத்தளையை ஒழித்திருப்பார். வேறெதுவும் இல்லாவிட்டாலும், பின்னாளில் சமய ரீதியில் அடிமைத்தளையை பஹாவுல்லா ஒழித்தது குறித்து தமது முழு ஒப்புதலையும் வழங்கியிருப்பார் என்பது உறுதி.

“நீங்கள் அடிமை வியாபாரம் செய்வதிலிருந்து – அவர்கள் ஆண்களோ பெண்களோ என்ற வித்தியாசமின்றி – தடை செய்யப்படுகின்றீர். தானே ஒரு ஊழியனாய் இருக்கும் பொழுது இறைவனின் ஊழியர்களில் மற்றொருவனை விலைக்கு வாங்குவது பொருத்தமன்று; அவரது புனித நிருபத்தில் இது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறுதான் அவரது கருணையினால், நீதி என்னும் எழுதுகோலினைக் கொண்டு இக் கட்டளை குறிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மனிதனும் தன்னை மற்றொருவனுக்கு மேலாக உயர்த்திக் கொள்ளலாகாது; தேவரின் முன்னிலையில் எல்லாருமே அடிமைகள். எல்லாருமே, அவரைத் தவிர ஆண்டவன் வேறிலர் எனும் உண்மைக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர். மெய்யாகவே, அவரே, சர்வ விவேகி, அவரது விவேகமே சகலத்தையும் சூழ்ந்துள்ளது.” (பஹாவுல்லா, கித்தா-இ-அக்டாஸ், ப. 45)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: