…எத்தகைய காரணங்களால் விளைந்தபோதும், வேதனை என்பது முறையாக பயன்படுத்தப்பட்டால் அதுவே ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக அமையும்.
திரு பிரென்ட் போய்டியே அவர்களின் பதிவு
கடவுளே, என் கடவுளே! தாழ்மையுடனும், மன்றாடியும் தரையில் முகம் பதித்து, எனக்கு ஊறு செய்த எவரையும் மன்னித்தருளுமாறு என் முழு மனதுடனான பிரார்த்தனையின் வாயிலாக உம்மை வேண்டிக்கொள்கின்றேன்;எனக்கெதிராக சதி செய்து என்னைப் புண்படு்த்தியவரை மன்னிப்பீராக; எனக்கு அநீதி விளைவித்தோரின் துர்செயல்களை துப்புரவு செய்திடுவீராக. உமது நல் வெகுமதிகளை அவர்களுக்கு அருள்வீராக, அவர்களுக்கு ஆனந்தமளிப்பீராக, அவர்களின் துன்பத்தைக் களைவீராக, அவர்களுக்கு அமைதியையும் செழிப்பையும் வழங்குவீராக, அவர்களுக்கு உமது பேரின்பத்தையளித்து அவர்கள் மீது உமது கொடைகளைப் பொழிவீராக. நீரே வலிமைமிக்கவர், அருள்மிக்கவர், ஆபத்தில் உதவுபவர், தன்னிறைவானவர்.
நம்பமுடியாத வகையில் பல வருடகாலமாக தமக்கு பெருந்தீங்கு செய்தோரை மன்னித்தும் ஆசீர்வதிக்குமாறும் கடவுளிடம் மன்றாடும் அப்து’ல்-பஹாவின் பிரார்த்தனை இது. ஒருவர் துன்பத்தை — அதாவது துரோகச் செயல்களால் விளையும் துன்பத்தை — எவ்வாறு எதிர்கொள்ள தூண்டுகின்றன என்பது குறித்த பஹாய் திருவாக்குகளை காண விரும்பும் எவர்க்கும் இது பெரிதும் அறிவூட்டுவதாக இருக்கின்றது.
நமது அன்பிற்குகந்த ஆனால் துரோக சிந்தனையாளர்கள் என நிரூபிக்கப்படுவோரால் ஏற்படுத்தப்படும் வேதனையை; நமது குறைபாடுகள் அல்லது பிறரால் ஏற்படுத்தப்படும் ஏமாற்றத்தின் வேதனையை; துயரம் மற்றும் பேராசைகளால் ஏற்படும் வேதனையை நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படும்போது நாம் தனிமையை நாடி, மனக்காயங்களை ஆறவைத்து, வலியை மறக்க முற்படுவோம். அவதூறுக்கு ஆளான ஒரு பஹாய் அன்பரை அத்தகைய சூழ்நிலைகளின்போது கடவுளின் பாதையில் அவருடைய சேவைகளை அதிகரிக்குமாறும், பிறரால் போற்றப்படவோ, அவர்களின் தூற்றுதல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகமலோ இருக்குமாறும் வலியுறுத்துகிறார்:
“ஒருவர் கடவுளால் போற்றப்பட்டும் தேர்ந்தெடுக்கவும் பட்டால் உலகின் படைப்பினங்கள் அனைத்தின் குற்றச்சாட்டுகளும் அவருக்கு எத்தகைய நஷ்டத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை; மாறாக கடவுளின் முன்னிலையில் அம்மனிதர் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால், மனிதர்கள் அனைவரின் போற்றுதலும் மெச்சுதல்களும் அவருக்கு எப்பயனையும் விளைவிக்கப்போவதில்லை. இவற்றால் குறிக்கப்படுவது என்னவென்றால் உமக்கெதிராக பிரசுரிக்கப்பட்டவைகளால் நீர் வருத்தமும் துன்பமும் படலாகாது என்பதே ஆகும்; மாறாக கடவுளின் மீது உமது நம்பிக்கையை வைத்தும் மக்களின் போற்றுதல்கள் அல்லது அவர்களால் உமக்கெதிராக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளால் நீர் தளர்வுறாமலும் இருக்கவேண்டும்; கடவுளின் மீதே முழுமையான நம்பிக்கை வைத்து அவரது புனித ‘திராட்சைத்தோட்டதில்’ அவருக்கு சேவை செய்யும் முயற்சியில் உம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.”
அது எத்தகைய காரணங்களால் விளைந்தபோதும், வேதனை என்பது முறையாக பயன்படுத்தப்பட்டால் அதுவே ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக அமையும். கடவுளின் அறிவை அடையும் முயற்சியில் ஈடுபடும் ஓர் ஆன்மா கடக்க வேண்டிய பல கட்டங்கள் குறித்து விவரிக்கும் தமது படைப்பான “ஏழு பள்ளத்தாக்குகள்” எனும் நூலில் பஹாவுல்லா, “வேதனையின்றி (அல்லது வலியின்றி), இப்பயனம் முடிவுறாது,” என குறிப்பிடுகின்றார்.
இதே வாக்குப்பகுதியில், அத்தர் எனும் பெயர்கொண்ட பாரசீக மர்மக் கவிஞரை பஹாவுல்லா சுட்டுகின்றார் மற்றும் அது இங்கே குறிப்பிடப்படுகின்றது: விசுவாசி தனது நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளட்டும்; அவிசுவாசி தனது சந்தேகப்போக்கை தக்கவைத்துக்கொள்ளட்டும். ஓர் அனுவளவே ஆயினும் அத்தரின் இதயம் ‘வலி’யையே நாடுகிறது. தனிமனித வளர்ச்சிக்கான பாதையில் துன்பங்களின் வலியின் மதிப்பை அத்தர் புரிந்துகொண்டுள்ளார். மன வேதனையை எதிர்கொள்ளவும் ஆன்மாவுக்கு ஆறுதலை அளிக்கவும் உதவக்கூடிய பஹாவுல்லாவின் பின்வரும் பிரார்த்தனை ஒன்றில் இதுவே வெளிப்படுத்தப்படுகின்றது:
“என் இறைவா, மகிமை உமக்கே உரியதாகட்டும்! உமது பாதையில் அனுபவிக்கப்படும் பேரிடர்கள் மூலமாக அன்றி, உமது அன்பர்கள் எவ்வகையில்தான் கண்டுகொள்ளப்படக் கூடும்; உமது அன்பிற்காக தாங்கப்படும் சோதனைகளின் வாயிலாக அன்றி, உமக்காக ஏங்குவோரின் ஸ்தானங்கள் எவ்வகையில்தான் வெளிப்படுத்தப்படக்கூடும்? உமது வல்லமையே எனக்கு சாட்சியமளிக்கின்றது! உம்மை பூஜிப்போர் அனைவருக்கும் அவர்கள் விடும் கண்ணீரே தோழர்களாகும், உம்மை நாடுவோருக்கு அவர்களுடைய துயரக்குரல்களே ஆறுதலளிக்கின்றன, உம்மை சந்திக்க விரைவோருக்கு உணவாக அவர்களின் சிதைந்த இதயங்களின் கூறுகளே உள்ளன.”
வேதனையின் வலி, நன்முறையில் பயன்படு்த்தப்படுமானால், அதுவே மாறுதலுக்கான ஓர் ஊக்குமுகத் தூண்டுகோலும், இறைவன்பால் நம்மை நெறுக்கமுறச் செய்வதற்கான தூண்டுகையும், நமது குறிக்கொள்களை சுத்திகரிப்பதற்கான வழியும் ஆகும். மனவேதனையை குறைப்பதற்கு நேரடியாக முயலுவது அதற்கு எதிர்மாறான விளைவையே உண்டாக்கும் என்பதை நான் சுயமாக அறிந்துள்ளேன். மாறாக, வேதனை உணர்வை அரவணைத்தபடியே அவ்வலிக்கு தீர்வு காண முயலுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஒரு பாரசீக பழமொழியை படித்தது ஞாபகத்திற்கு வருகிறது: “ஒன்று மனதை வேதனைப்படுத்திடுமானால் — அதை அவ்வாறே விட்டுவிடுங்கள்.” இதை சாலச் சிறந்ததொரு அறிவுரையாக நான் கண்டுள்ளேன். என் வேதனைக்கான மூலகாரணம் யாது என என்னை நானே கேட்டுக்கொண்டு, எனக்குள் அவ்வேதனையை உருவாக்கிய அம் மூலகாரணத்தை அகற்றுவதற்கு தீர்க்கமாக முடிவெடுப்பேன். எனது குறைபாடுகள் வெட்ட வெளிச்சமானதனாலோ, வேறொருவரே அவ்வேதனைக்கு காரணமாக இருந்தாலோ சரி; அவ் வேதனை தொடர்ந்து என் மனதுள் வலியை உண்டாக்கிட விட்டுவிட்டு, அவ்வேதனையின் தீயில் என் அகந்தை எரிந்து சாம்பலாகிப் போவதாக நான் ஒரு கண்ணோட்டம் கொண்டால், அவ் வேதனை விலக்கின்றி எனக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நான் மேம்பாடு அடைந்திடவே உதவுகின்றது. இது ஷோகி எஃபெண்டி அவர்களின் பின்வரும் வழிகாட்டுதலோடு ஒத்திருக்கின்றது:
“…துன்பம் என்பது தவிர்க்க இயலாத ஒரு மெய்ம்மை என்றபோதிலும், அதுவே மகிழ்ச்சிநிலையை அடைவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்படலாம். அவதாரங்களும் ஞானியர்களும் துன்பத்திற்கு தந்துள்ள விளக்கம் இதுவே. அவர்கள் கடுந்துன்பங்கள் மற்றும் சோதனைகளுக்கிடையே ஆனந்தத்தையும் களிப்பையும் உணர்ந்து வாழ்க்கையில் அதிசிறந்த மற்றும் அதிபுனிதமானவற்றை அனுபவித்தனர். துன்பம் என்பது ஓர் எச்சரிக்கை மற்றும் அது ஒரு வழிகாட்டியும் ஆகும். அது நம்மை நமது சூழ்நிலைகளுக்கு ஒப்ப வாழ்ந்திட தூண்டி, அதன் மூலம் சுயமேம்பாட்டிற்கு வழிகாட்டுகிறது.
பஹாவுல்லாவின் திருமகளாகிய பாஹிய்யா காஃனும் அவர்களைப் பற்றியும் வேதனையை எதிர்கொள்ளும் அவருடைய அதிவுயர்ந்து ஆன்மீகப் பேற்றை பற்றியும் மார்ஜரி மோர்ட்டன் பின்வருமாறு கூறுகிறார்:
“வாழ்க்கையில் தாம் சந்தித்த கொடுமைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அவர் எதிர்கொண்டதில் அவர் மன்னிக்கும் தன்மைக்கும் அப்பாற்பட்ட, அதற்கும் மேலான ஒன்றையே வெளிப்படுத்தினார். மனம் புன்படுவதும் மன்னிப்பதும் தெய்வீகமாகும், ஆனால் புரிந்துகொண்டும் மனம் புன்படாமல் இருப்பதும் இவற்றையெல்லாம் விட அதி மேலான ஒன்றாகும்.”
மற்றும்,
“… ஒருவர் அவரை நோகடிக்க முயன்றால், அவர் அம்மனிதரின் கொடூரத்திற்காக அம்மனிதனுக்கே ஆறுதல் கூற விரும்புவார்.”
சில நேரங்களில் வேதனை உணர்வைவிட அவ்வேதனைக்கான மூலகாரணம் ஆழமானதாக இருக்கும், மற்றும் கடவுளை கண்டுகொள்ளாத ஓர் ஆன்மாவின் நிலையையே அது வெளிப்படுத்துகிறது. பஹாவுல்லா, கிருஸ்தவர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் “அதிபெரும் இடுக்கண் (The Great Tribulation)” என்பதோடு அதை அடையாளப்படுத்துகிறார். தமது “உறுதிப்பாட்டிற்கான நூலில் (Book of Certitude) “ஏசுநாதரின் மறுவருகை குறித்த அடையாளங்கள் பற்றிய தமது விளக்கவுரையில் இதையே “கொடுங்கோன்மை” என பின்வருமாறு பஹாவுல்லா எழுதியுள்ளார்:
இறைவனின் அறிவை அடைய விரும்பும், உண்மையை தேடும் ஓர் ஆன்மா அதற்காக எங்கே செல்வது மற்றும் யாரிடமிருந்து அதை பெறுவது என்பது தெரியாமல் தவிப்பதைவிட “வேறு கொடுங்கோன்மை” என்னதான் இருக்க முடியும்?
ஒவ்வொரு யுகத்திலும் உலகத்திற்கு வழங்கப்படும் கடவுளின் வார்த்தையானது மனித ஆன்மாவினுள் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் அகத்திலும் உலகத்தில் பொதுவாகவும், தெளிவும் மேன்மைமிக்கதுமான ஓர் அமைப்புமுறை தோன்றுவதற்கு முன் பெரும் அமளியே நிலவுகிறது என பஹாவுல்லா தமது திருவாக்கு ஒன்றில் வெளிப்படுத்துகிறார்:
உமது சித்தத்தின் உள்ளாற்றல் மற்றும் குறிக்கோள் வாயிலாக முதல் வார்த்தையானது அவரது திருவாயிலிருந்து வெளிப்பட்டவுடனும் அவரது உதடுகளிலிருந்து முதல் அழைப்பு முன் சென்றவுடனும் படைப்பு முழுமையும் புரட்சிகரமான மாற்றம் கண்டு, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தும் ஆழ்ந்த நெகிழ்ச்சியுற்றன. அவ்வார்த்தையின் மூலமாக படைப்பனைத்தின் மெய்ம்மைகளும் ஆட்டம் கண்டு, பிளவுகளுற்று, பிரிந்து, சிதறி, ஒன்றுசேர்க்கப்பட்டு ஒற்றுமைப்படுத்தப்பட்டு, மண்ணுலகு தெய்வீக உலகு இரண்டிலும், ஒரு புதிய படைப்பின் உருபொருள்களை வெளிப்படு்த்தி, கண்ணுக்கு புலனாகா இராஜ்ஜியங்களில் உமது ஐக்கியம் மற்றும் ஒறுமைத்தன்மையின் அடையாளங்களையும் சின்னங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அவ்வழைப்பின் வாயிலாக நீர் உமது சேவகர்கள் அனைவருக்கும் உமது மாபெரும் திருவெளிப்பாட்டின் வருகையையும் உமது முழுநிறைவான சமயத்தின் தோன்றலையும் அறிவித்துள்ளீர்.”
துன்பம் என்பது வாழ்வின் தவிர்க்கவியலா ஒரு பகுதியாகும். நமது வேதனையின் தோற்றுவாயை கண்டுகொண்டும், நமது வாழ்க்கையில் தேவையான சீர்களை செய்தும், அதையே மேலும் அதிகமான சேவைகள் செய்வதற்கான ஊக்குமுகமாக பயன்படுத்திட முயலுவதன் மூலமும், கடவுளின் அன்மையை மேலும் நெருக்கமாக அடைந்திட மனவேதனையை கடவுள் நமக்கு வழங்கியுள்ள கருவிகளில் ஒன்றாக நாம் காணலாம். ஷோகி எஃபெண்டி அவர்களின் வழிகாட்டலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
(சமய)போதனை களத்தில் ஆற்றப்படும் இம்மாபெரும் காரியங்களின் விளைமதிப்பின்மையின் ஒரு கூறாக அச்சேவை மனவேதனைகள் சூழ்ந்த உண்மையான தியாகங்களின் மூலமாக ஆற்றப்படவேண்டும். மனிதவாழ்வு குறித்த இக்கால அமெரிக்க கண்ணோட்டத்தில் துன்பம் என்பது ஒழுங்கின்மையால் உருவாகின்றது எனவும் அது தவிர்க்கப்படக்கூடும் என்பது மட்டுமல்ல மாறாக அது நல்லதல்ல, மேலும் தேவையான ஒன்றும் அல்ல எனும் ஒரு மனப்போக்கு உள்ளது. இத்தகைய மனப்பான்மையில் சிறிது உண்மை இருந்தபோதிலும், துன்பம் என்பது நமது சேவையின் ஓர் இன்றியமையா பகுதி என்பதை பாஹாய்கள் எனும் முறையில் நாம் நம்பியே ஆகவேண்டும். கடவுள் அவதாரங்கள் கொடுந்துன்பங்களை அனுபவித்தனர், அது போன்றே அருட்தொண்டர்களும் உயிர்த்தியாகிகளும் (அனுபவித்தனர்), மற்றும் தமது அழகிய பிரார்த்தனை ஒன்றில் பஹாவுல்லா கூறுவது போன்று ‘உடைந்து போன அவ்விதயங்களின் துண்டுகளையே அவர்கள் பெரும்பாலும் உண்டுய்த்தனர்’.
நன்று ..!
அருமையான பதிவு நணபரே ..
வாழ்க வழமுடன் ……
எவ்வளவு பெரிய உண்மையை மிகவும் எளிமையாக விளக்கியுள்ளீர்கள். உங்களது சேவைக்கு எனது கோடி நன்றிகள். மனிதனின் புரிந்துகொள்ளலை ஆழப்படுத்தும் இந்த பதிவு அற்புதம்.
மீண்டும் மீண்டும் படித்தாலும் இனிமை குன்றாத ஒரு கட்டுரை.