கடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம்
பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.
என் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங்களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன். நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன். உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன். உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.
மரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர். எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.
அதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன. அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.
இல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.
உம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர்! எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.
உமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது! உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் – தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் – உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.
உமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது. தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர். அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.
(Gleanings from the Writings of Baha’u’llah)