சேவை செய்தல்
ஒரு மனிதனிடம் அவனுக்குத் தெரிந்த பொருள்கள் அனைத்தின் நோக்கத்தை கேட்போமானால் அவன் அவை ஒவ்வொன்றுக்கும் அவனுக்குத் தெரிந்த ஒரு காரணத்தைக் கூறுவான். ஒரு வீடு, வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி, என எதைக் கேட்டாலும் அதற்கு அவன் பதில் கூறிவிடுவான். ஆனால் அவன் தானே எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான் என கேட்போமானால், அதற்குப் பெரும்பாலும் பதில் தெரியாது. அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது… என ஔவையார் கூறியுள்ளார். ஆனால் தான் எவ்வகையில் அறிதானவன் என்பது மனிதனுக்குப் பொதுவாகத் தெரியாது.
பழமரங்கள் கனி கொடுக்கவே படைக்கப்பட்டுள்ளன. மேகம் மழை பொழிவதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. சூரியன் ஒளியும் வெப்பமும் தருவதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. நிலம் மனிதனுக்கு உணவளிக்கப் படைக்கப்பட்டுள்ளது. காற்று மண்டலம் மனிதன் உயிர்வாழத் தேவையான உயிர்க்காற்றைக் வழங்குகின்றது. இவ்வாறாக, படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காகவும் எதையாவது கொடுப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் கர்ணனின் கதை அனைவரும் அறிந்ததே. கர்ணன் வேறு யாருமல்ல. அவன் ஒவ்வொரு மனிதனையும் பிதிநிதிக்கின்றான். கொடுப்பதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதன் எடுத்துக்காட்டாக கர்ணன் எனும் ஒரு பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இதிகாசங்கள் மனிதர்களுக்கு இதுபோன்ற பாடங்கள் புகட்டுவதற்காகவே எழுதப்பட்டுள்ளன.
செல்வம் என்னும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொள்வோம். குழந்தை செல்வம், பொருட் செல்வம், என செல்வங்களுள் பல உள்ளன. செல்வம் என்பது பொருட்செல்வம் மட்டுமல்ல. நமது ஆன்மீகப் பண்புகள், நமது அறிவு, மானிடத்திற்கான நமது சேவை ஆகியவை நமது உண்மையான செல்வங்களுள் சிலவாகும். இவையாவும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்டவையல்ல. அவை பிறருக்கு பயன்படும்போதே அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளதன் உண்மையான நோக்கம் நிறைவேறுகின்றது.
அடுத்து, கடவுளை அறிந்து வழிபடுவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. இங்கு கடவுளை வழிபடுவது என்றால் என்ன? யாவற்றையும் படைத்த கடவுளிடம் நாம் எவ்வகையில் வழிபடவோ அன்பு செலுத்தவோ இயலும். நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் எதை எதிர்ப்பார்க்கின்றார்? வெறும் பூஜை புனஸ்காரங்கள் செய்தல் மட்டும் போதுமா? யாவற்றையும் படைத்தவர் அவரே. எல்லாம் படைத்த அவருக்கு நாம் செய்யக்கூடியது என்ன?
அவர் எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான், நாம் அவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பது.
யான் உன் படைப்பினை விரும்பினேன்; ஆகவே உன்னைப் படைத்தேன். ஆகையால் நீ என்னை நேசிப்பாயாக; அதனால் யான் உனக்குப் பெயரையும் சூட்டி, உனது ஆன்மாவையும் உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.”
“என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.”
“நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன்.”
“உனது உள்ளமெனும் கோவிலில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே..”
என பஹாவுல்லாவின் மறைமொழிகள் கூறுகின்றன.
ஆக, இங்கு அன்புக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நாம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும் என்பது பற்றி நாம் சிந்திப்போமானால் ஒன்று ஞாபகத்திற்கு வரும். கடவுளுக்கு நாம் பொருள் எதனையும் நேரடியாக கொடுக்க முடியாது. அவர் நம்மிடம் வேண்டுவதெல்லாம் நமது அன்பையே. ஆனால் இந்த அன்பை எப்படி வெளிக்காட்டுவது?
இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு:
கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மனிதருக்கு உதவுவதன் மூலம், நமது செல்வம், அறிவு, நேரம் போன்றவற்றை மனித இனத்தின் மேம்பாட்டிற்காக நாம் அர்ப்பணிக்கும் போது, நாம் கடவுளிடம் நமது அன்பைத் தெரியப்படுத்துகிறோம். மானிடத்திற்கு சேவையாற்றுதல் மூலம், கடவுளிடம் நாம் உண்மையான அன்பு செலுத்துகின்றோம்.
சேவையைப் பற்றி பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி பின்வருமாறு கூறுகின்றார்: