

இலண்டன், 29 ஜூலை 2022, (BWNS) – குறிப்பாக அடிக்கடி பரபரப்பான ஒரு ஊடக சூழலில் புரிதல் மற்றும் உரையாடலை ஊக்குவிப்பதில் பத்திரிகையாளர்களின் பங்கு என்ன?
முன்னாள் பிபிசி நிருபரும் தி கார்டியன் செய்தித்தாளின் எழுத்தாளருமான ஐக்கிய இராஜ்யத்தின் இரண்டு அனுபவமிக்க பத்திரிகையாளர்களும், அந்த நாட்டின் பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகத்தின் உறுப்பினர்களும், அந்த அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட சமீபத்திய வலையொலியில் (podcast) ‘நல்நோக்குடன்: உண்மையும் ஊடகத்தில் தரநிலைகளும்’ என்னும் தலைப்பில் ஆராய்ந்த கேள்விகளில் இதுவும் ஒன்றாகும்.
“எழுத்தாளர்கள் தப்பெண்ணத்திலிருந்து விடுபட்டவர்களாகவும், நியாயமான மனப்பான்மை கொண்டவர்களாகவும், பிரச்சினைகளை நீதி உணர்வுடன் பார்க்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்” என பொது விவகார அலுவலகத்தின் கார்மல் கலானி கூறினார்.
மிஸ். கலானி, பொது நனவை உயர்த்துவதில் செய்தி ஊடகத்தின் ஆற்றலை விவரிக்க பஹாய் போதனைகளில் இருந்து ஓர் ஒப்புமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறினார்: “செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற வடிவிலான ஊடகங்கள் “உலகின் கண்ணாடி” போன்றவை. அவை ‘செவிப்புலன், பார்வை, பேச்சு ஆகியன உள்ளன’.
இதன் உள்குறிப்புகளில் ஒன்று, பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் மற்றும் அவர்களின் பிற வெளிப்பாடு வடிவங்கள் நம் அனைவரிலும் நமது சக மனிதர்களுடன் ஒருமை உணர்வைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளன என அவர் கூறினார்.
“பத்திரிகையாளர்கள் ஒரு கதையைச் சொல்லும் போது, அவர்கள் நாம் வாழும் உலகத்தை வடிவமைக்கிறார்கள், நாம் பார்ப்பதைச் சாத்தியம் உடையவையாக வடிவமைக்கிறார்கள்” என திருமதி கலானி கூறினார், ஊடகங்கள் “ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டு வருவதற்கான மக்களின் மகத்தான திறனை” விடுவிக்க முடியும் என விளக்கினார்.
இந்த மகத்தான ஆற்றல் இருந்தபோதிலும், சில நடைமுறைகள் பத்திரிகையாளர்கள் மீது துன்பத்தில் ஆழ்ந்துள்ளோரை ஒரு நேர்காணலுக்கு எதிர்பாராமல் அழைத்தல் போன்ற பரபரப்பான அறிக்கைகளை தயாரிக்க அழுத்தம் கொடுக்கின்றன.
“இதழியலில் ‘கதவைத் தட்டுதல்’ என அழைக்கப்படும் ஒன்று உள்ளது. இதன் மூலம் நீங்கள் சென்று ஒரு கதையின் மத்தியில் இருக்கும் ஒருவருடைய கதவைத் தட்ட வேண்டும்; இது பொதுவாக ஒருவரின் சொந்தத் தவறாக இல்லாமல் செய்தல்… மற்றும் அவர்களின் வீட்டு வாசலில் நின்று அவர்களின் கருத்தைக் கேட்பது” என முன்னாள் பிபிசி நிருபரும் பிரிட்டனில் உள்ள இயேசு சபைக்கான தகவல்தொடர்புத் தலைவருமான ஜான் மெக்மானஸ் கூறினார்.
“இது முற்றிலும் நேரத்தையும் ஒரு செய்திக் கதையையும் நிரப்புவதற்காகத்தான்,” என திரு. மெக்மானஸ் தொடர்ந்தார், இந்த அணுகுமுறை பொதுவாக எந்தப் புதிய பொருண்மைகளையும் தராது என அவர் விளக்கினார். அதற்கு பதிலாக, இது பார்வையாளர்களுக்கு அவர்களின் வியப்பூட்டும் பசியைப் பூர்த்தி செய்கின்றது, மற்றும் இது உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பக் கூடியது.
பல பத்திரிகையாளர்கள் தங்கள் துறையில் பரபரப்பான செய்தி அளிப்பிற்கு வழிவகுக்கும் நடைமுறைகளினால் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர் என திரு. மெக்மானஸ் மேலும் கூறினார். அறிக்கையிடும் போது பச்சாத்தாபம் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். “இந்த எல்லா கதைகளின் இதயத்திலும் உணர்வுகளுடைய மனிதர்கள் உள்ளனர். … அவர்கள் அனைவருக்கும் குடும்பம் உள்ளது. எனவே நான் எப்போதும் அதை நினைவில் கொள்ள முயல்கிறேன், இது என் சிந்தனையையும் செயல்களையும் மிதப்படுத்துகிறது.”
‘தி கார்டியனின்’ நிருபரான ரெமோனா அலி பின்வருமாறு கூறினார்: “நீங்கள் யாரை நேர்காணல் செய்தாலும், அவர்களின்பால் உங்களுக்கு இந்த பொறுப்புணர்ச்சி உள்ளது. … நான் உண்மையில் அந்த பாதுகாப்பை பராமரிக்க கடினமாக முயல்கிறேன். நான் [நேர்காணல் செய்பவரிடம்] ‘நீங்கள் பின்னர் கட்டுரையைப் பார்க்க முடியும், இதனால் நீங்கள் அக்கட்டுரை உங்களுக்கு ஏற்புடையதாக இருந்திடக் காணலாம்’ என கூறுவேன்.
சமூக, அரசியல், பொருளாதார, மற்றும் மத பிளவுகளை வலுப்படுத்தி, பரபரப்பான செய்தி கவரேஜிற்கு வழிவகுக்கும் பாரபட்சங்கள் மற்றும் தவறான இருமைகள் எவ்வாறு பன்முகப் பிரச்சினைகளை எளிமையான பிரதிநிதித்துவங்களாக தரங்குறைக்க முடியும் என்பதையும் விவாதங்கள் ஆராய்ந்தன.
நோக்க இலக்கை பராமரிப்பதற்கான பத்திரிகையாளர்களின் பொறுப்பு பற்றி பேசிய திரு. மெக்மானஸ் பின்வருமாறு கூறினார்: “விஷயங்கள் கருப்பும் வெள்ளையுமாக இல்லை. உங்கள் மனதில் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களை நீங்கள் வைத்திருக்கலாம், அவை இரண்டுமே சரியானவை. ஏனெனில், மனித வாழ்க்கை எல்லையற்ற மாறுபாடு உடையது மற்றும் பலக்கியம் (complex) உடையது என்பதை நாம் அறிவோம்.”
இந்த விவாதத்தின் மீது பிரதிபலித்து, பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகத்தின் நேன்சி வாரன், இந்த ‘போட்காஸ்ட்’ தொடர் சமூகத்தில் ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த விவாதத்திற்குப் பங்களிப்பதற்கான அலுவலகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என விளக்கினார்.
“மக்கள் மிக உயர்ந்த இலட்சியங்களுடன் தங்கள் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ற ஒரு வழியில் எழுதுவது கடினமாகின்றது” என அவர் கூறுகிறார்.
“அலுவலகத்தால் வழங்கப்படும் மன்றங்கள்—அவை பாட்காஸ்ட்கள், இணைய விவாதங்கள், அல்லது தனிப்பட்ட கூட்டங்களாக இருப்பினும்—பத்திரிகையாளர்கள், தங்கள் தார்மீக நம்பிக்கைகளுடன் எதிரொலிக்கும் ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய ஓர் இடத்தை வழங்குகின்றன.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1605/