இரண்டு உலகளாவிய தீர்க்கதரிசன சுழற்சிகளின் (உலகின் பதிவுசெய்யப்பட்ட மத வரலாற்றின் முதல் விடியல்கள் வரை நீண்டுகொண்டிருக்கும் ஆதாமிய சுழற்சி மற்றும் பிறக்காத பகுதிகள் முழுவதும் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குக் குறையாத காலம் தன்னைத்தானே செலுத்திக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட பஹாய் சுழற்சி) சங்கமத்தில் நிற்பதாக இனிவரும தலைமுறையினர் அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை இவ்வாறு முடிந்தது. ஏற்கனவே கவனிக்கப்பட்டபடி, அத்தகைய ஒரு வாழ்க்கை அதன் நிறைவை அடைந்ததானது, பஹாய் காலகட்டத்தின் வீர யுகத்தின் மிகவும் வீரம் நிறைந்த கட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இது முதல் பஹாய் நூற்றாண்டின் முழு வரம்பிற்குள்ளும் நடந்த மிகவும் வியத்தகு, மிகவும் சோகமான ஒரு நிகழ்வைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் கருதப்பட முடியாது.உலகில் தற்போதுள்ள மத அமைப்புகளின் அனைத்து ஸ்தாபகர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இது இணையற்ற ஒன்றென முறையுடன் பாராட்டலாம்.
அத்தகைய ஒரு நிகழ்வு, அது நிகழ்ந்த நாட்டின் எல்லைக்கு அப்பாலும் பரவலானதும் ஆழமானதுமான ஓர் ஆர்வத்தைத் தூண்டாமல் இருந்திட முடியாது. “அது மானிடம் சிந்திப்பதற்காக வழங்கப்பட்ட துணிச்சலின் ஒரு மகத்தான உதாரணங்களில் ஒன்றாகும்,” என்பது பாரசீகத்தில் வாழ்ந்தும் பாப் பெருமானாரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தம்மைப் பரிச்சயப்படுத்திக்கொண்ட ஒரு கிருஸ்துவ கல்விமானும் அரசாங்க அதிகாரியுமான ஒருவரின் சான்றாகும், மற்றும் இது நமது இந்த கதாநாயகர் தமது சக குடிகளின்பால் கொண்டிருந்த அன்பிற்கான மனதைக் கவரும் ஆதாரமும் ஆகும். அவர் மானிடத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தார்: அவர் தமது உடலையும் ஆன்மாவையும் வழங்கினார், மானிடத்திற்காக கொடுமைகளையும் அவமானங்களையும் துன்புறுத்தல்களையும் தாங்கிக் கொண்டார், தியாகமரணமும் அடைந்தார். சர்வலோக சகோதரத்துவம் குறித்த ஒப்பந்தத்திற்கு தமது இரத்தத்தினால் முத்திரையிட்டார், இயேசு நாதரைப் போன்றே நல்லிணக்கத்தின் ஆட்சி, சமத்துவம், அண்டையர்பால் அன்பு ஆகியவற்றுக்காக தமது உயிரையே அர்ப்பணித்தார்.” “மானிட வரலாற்றில் தனித்துவமான ஒரு மர்மமிகு பொருண்மை,” என்பது பாப் பெருமானாரின் தியாகமரணத்தின் சூழ்நிலையை பற்றி கருத்து தெரிவிக்கும் போது அதே கல்விமானின் எழுதுகோலிலிருந்து வரும் மேலும் ஒரு சான்றளிப்பு. “ஓர் உண்மையான மர்மநிகழ்வு,” என்பது ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு கிழக்கியலாளரின் அறிவிப்பு. “ஓர் உண்மையான கடவுள்மனிதன்,” என்பது ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் பயணியர் மற்றும் எழுத்தாளரின் தீர்ப்பாகும். “அவரது நாட்டின் (பாரசீகத்தின்) மிகச்சிறந்த வெளிப்பாடு” என்பது ஒரு பிரபலமான பிரெஞ்சு விளம்பரதாரர் அவருக்கு செலுத்திய அஞ்சலி. “இக்காலத்தின் இயேசு … ஒரு தீர்க்கதரிசி, ஒரு தீர்க்கதரிசிக்கும் மேலான ஒருவர்,” என்பது ஒரு தனிசிறப்புற்ற ஆங்கில மதத்தலைவர் வழங்கிய தீர்ப்புரை. “கிருஸ்துவம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, மிகவும் முக்கிய சமய இயக்கம்,” என்பது பாப் பெருமானார் ஸ்தாபித்த சமயத்திற்காக மிகவும் பிரபலமான ஆக்ஸ்ஃபர்ட் கல்விமானாகிய காலஞ்சென்ற பால்லியோல் மாஸ்டர் தொலைநோக்காகக் கண்ட ஒரு சாத்தியமாகும்.
“உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பலர், பாரசீகத்திற்குப் புறப்பட்டு, முழு மனதாக இவ்விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர்” என்பது ‘அப்துல்-பாஹாவின் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலாகும். ரஷ்ய ஸார் மன்னர், பாப் பெருமானாரின் தியாக மரணத்திற்குச் சற்று முன்பாக, தப்ரீஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தை விளித்து அவ்விஷயத்தைப் பற்றி முழுமையாக விசாரித்து, அத்தகைய திடுக்கிடச்செய்யும் ஓர் இயக்கத்தின் சூழ்நிலைகளைத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டார் என அக்கால எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். ஆனால், பாப் பெருமானார் மரண தண்டனையின் நிறைவேற்றம் காரணமாக இக்கட்டளை நிறைவேற்றப்பட முடியாது போயிற்று. மேற்கு ஐரோப்பாவைப் போன்ற தொலைதூர நாடுகளிலும் கூட இவ்விஷயம் குறித்து சற்றும் குறையாத ஆர்வம் தூண்டப்பட்டதுடன், இலக்கிய, கலை, இராஜதந்திர மற்றும் அறிவுசார் வட்டாரங்களுக்கும் அது மிக வேகமாகப் பரவியது. “ஐரோப்பா முழுவதும், பரிதாப உணர்வினாலும் கோபத்தினாலும் தூண்டப்பட்டது என மேலே குறிப்பிடப்பட்ட பிரெஞ்சு விளம்பரதாரர் சான்றளிக்கிறார். …எனது தலைமுறையின் இலக்கியவாதிகள் மத்தியில், 1890-ஆம் ஆண்டு பாரீஸில் வெளிவந்த பாப் பெருமானாரின் தியாக மரணம் குறித்த முதல் செய்தியைப் போலவே அவரது மரணம் இன்னும் பசுமையான தலைப்பாக இருந்தது. அவரைப் பற்றி நாங்கள் கவிதைகள் புனைந்தோம். சாரா பெர்ன்ஹார்ட் இந்தச் சரித்திரபூர்வ சோகக் கதையின் கருப்பொருளில் ஒரு நாடகத்திற்காக கட்டுல்லே மெண்டேஸை வேண்டிக்கொண்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தத்துவ, ஓரியண்டல் மற்றும் விவிலிய சங்கங்களின் உறுப்பினரான ஒரு ரஷ்ய கவிஞர், 1903-இல் “தி பாப்” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தை வெளியிட்டார். இந்த நாடகம் ஒரு வருடம் கழித்து அந்த நகரத்தின் முக்கிய திரையரங்குகள் ஒன்றில் அரங்கேற்றப்பட்டது. அது லண்டனில் பிரபலப்படுத்தப்பட்டது, பாரிஸில் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது, கவிஞர் ஃபீட்லரால் ஜெர்மன் மொழிக்கும் மொழிபெயர்க்கப்பட்டது, ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, லெனின்கிராட்டில் உள்ள நாட்டுப்புற அரங்கில் மீண்டும் அரங்கேற்றப்பட்டது, மேலும் புகழ் பெற்ற டால்ஸ்டாயின் உண்மையான அனுதாபத்தையும் ஆர்வத்தையும் தூண்டுவதில் அது வெற்றி பெற்றது. பின்னர், அவ்விஷயம் குறித்த அவரது கவிதைக்கான அஞ்சலி ரஷ்ய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
ஷோகி எஃபென்டி – கடவுள் கடந்து செல்கின்றார்