

BIC அடிஸ் அபாபா, 31 ஆகஸ்ட் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கம், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் என்னும் கோட்பாடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இன்றியமையாதது என வலியுறுத்தி, பெண்கள் மீதான காலநிலை நெருக்கடியின் சமத்துவமற்ற பாதிப்பை ஆராய்ந்தது.
” காலநிலை மாற்றமானது, பாலின ஏற்றத்தாழ்வுகள் உட்பட தற்போதுள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பெருக்கி என பெருமளவில் ஒப்புக் கொள்ளப்படுகிறது” என எமோரி பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் பாலினத்தின் பேராசிரியரும் பஹாய் சமூகத்தின் உறுப்பினருமான அட்டியெனோ இம்போயா கூறினார்.
“பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் சட்டமியற்றல் மற்றும் சட்டவியல் செயல்முறைகள் முக்கியமானவை என்றாலும், பெரிய பிரச்சினை இங்கு மெய்யியல் (ontology) குறித்தது, மற்றும் மனிதர்கள் என்னும் முறையில் நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம்” என்பதாகும் என டாக்டர் எம்போயா கூறினார். சுற்றுச்சூழல் சீரழிவு என்பது சமூக, தார்மீக மற்றும் ஆன்மீக தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாத வாழ்க்கை குறித்த முற்றிலும் லௌகீகவாத அணுகுமுறையின் விளைவு என அவர் விளக்கினார்.
“நம்மை நாம் மனிதர்கள் என்னும் முறையில் எப்படிப் பார்க்கின்றோம்? நமது யதார்த்தம் என்ன? நாம் வெறும் லௌகீக, சுயநலம் மிக்க உயிரினங்களா?” என டாக்டர் எம்போயா கேள்வி எழுப்புகிறார்.
நாகரிகத்தின் முன்னேற்றம் பற்றிய பஹாய் போதனைகளை குறிப்பிட்டு, “நமக்கு ஓர் ஆன்மீக யாதார்த்தம் உள்ளது. அது பாலினம் இல்லாத ஒரு ஆன்மா உள்ளது என்னும் யாதார்த்தம். இந்த நிலைப்பாட்டில் இருந்து உலகில் செயல்படுவதால், புதிய மதிப்புகள், புதிய சமூக விதிமுறைகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் புதிய ஸ்தாபன ஏற்பாடுகளை நாம் பின்பற்ற முடியும்,” என அவர் கூறினார்.
இதன் ஒளியில், பருவநிலை தொடர்பான பிரச்சினைகள், மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் இடம்பெயர்வு போன்றவற்றினால் உண்டாகும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் இடையூறுகள் ஆண்களை விட பெண்களை எவ்வாறு அதிகம் பாதிக்கின்றன என்பதைப் பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
உதாரணமாக, கிராமப்புறங்களில் இருந்து தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஆண்கள் இடம்பெயர்வது பெண்கள் மேலும் அதிகமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை டாக்டர் எம்போயா விளக்கினார்.
“இது பெண்களுக்குக் கிடைக்கும் நேரத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்பது அர்த்தமாகும்,” என அவர் கூறினார். “குழந்தை பராமரிப்பு மற்றும் உணவு தயாரிப்பதற்கான நேரம் குறைக்கப்படுகின்றது.. பெண் பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுக்கு உதவும்போது அவர்களின் பள்ளிப் படிப்பும் தடைபடும்.
இடம்பெயர்வு ஒரு காரணியாக இல்லாவிட்டாலும் கூட, காலநிலை மாற்றம் பாலின ஏற்றத்தாழ்வுகள், பெண்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக விதிமுறைகளால் வரையறுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறைதல் போன்றவற்றினால் ஆண்களை விட பெண்களின் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தப் போராட்டங்கள் இருந்தபோதிலும், ஆப்பிரிக்காவில் காலநிலை நடவடிக்கைகளில் முன்னணியில் பெண்களே உள்ளனர், என்பதை பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.
“நாங்கள் பெருமளவு செய்கிறோம். யாராவது வந்து எங்களைக் காப்பாற்றுவார்கள் என நாங்கள் காத்திருக்கவில்லை,” என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கான ரோம் மையத்தின் இயக்குனர் முசோண்டா மும்பா கூறினார்.
டாக்டர். மும்பா, சஹேல் மண்டலம், மாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் புதிய வலையமைப்பைப் பற்றி பேசினார், இது இந்த மண்டலங்களில் அடித்தட்டு காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றது. இந்த முயற்சி, சுற்றுச்சூழல் சவால்களைத் தணிப்பதற்கு ஆப்பிரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட எண்ணற்ற நடவடிக்கைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.
மேற்கொண்டு கருத்துகளில், “சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக மனித திறனாற்றலைத் திறக்கும் செயல்திறன் கொண்ட” சமூக வாழ்க்கையின் புதிய அணுகுமுறைகள் மற்றும் வடிவங்கள் மூலம் காலநிலை மாற்றப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என டாக்டர் எம்போயா வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தணிக்க வேண்டுமானால், இயற்கையோடு நாம் பழகும் போது, மனிதர்கள் என்னும் முறையில் நமது பங்கிற்குப் பணிவு தேவை என அவர் மேலும் கூறினார். COP27 என அழைக்கப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக அடிஸ் அபாபா அலுவலகம் நடத்தும் தொடர் விவாதங்களின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கம் நடைபெற்றது, மேலும் இது காலநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொல்லாடல்களில் BIC பங்களிப்பின் ஒரு பகுதியாகும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1614/