பிரார்த்திப்பது எப்படி
நியூயார்க் நகரில் அப்துல் பஹா தங்கியிருந்தபோது, அதே நகரில் வசித்து வந்ந ஒரு தீவிர நம்பிக்கையாளரை அழைத்து, மறுநாள் விடியற்காலையில் அந்த தீவிர பஹாய் நம்பிக்கையாளர் தமது அறைக்கு வந்தால் அவருக்கு எப்படி பிரார்த்திப்பது என்பதைத் தாம் கற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறினார்.
அதனைக் கேட்ட அந்த பஹாய் அன்பர் மகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் மறுநாள் விடியற்காலை ஆறு மணிக்கு அப்துல் பஹாவின் இருப்பிடத்திற்கு வந்தார். அவர் வந்து சேர்வதற்குள் அப்துல் பஹா பிரார்த்தனையில் மூழ்கி இருந்தார். உடனே, அந்த பஹாய் அன்பரும் அப்துல் பஹாவுக்கு முன்பாக பிரார்த்திப்பதற்காக அமர்ந்தார். அப்துல் பஹா ஆழமான தியானத்தில் திளைத்திருந்த அவ்வேளையில், அந்த பஹாய் அன்பர் தனது நண்பர்களுக்காகவும், தனது குடும்பத்திற்காகவும், ஐரோப்பாவின் மன்னர்களுக்காகவும் பிரார்த்தித்தார். தனக்கு முன் அமர்ந்திருக்கும் அந்த மனிதர்பால் அப்துல் பஹா எந்தவொரு வார்த்தையையும் கூறாமல் தமது பிராரத்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த பஹாய் நம்பிக்கையாளர் தனக்குத் தெரிந்த எல்லா பிரார்த்தனைகளையும் கூறி விட்டு மீண்டும் அவற்றை இரண்டு முறை மவுனமாகப் பிரார்த்தித்தார். அவ்வாறிருந்தும் அப்துல் பஹா எதுவும் கூறவில்லை. பிறகு, அந்த பஹாய் நம்பிக்கையாளர் தனது முட்டிக் காலைத் தேய்த்து விட்டு தனது முதுகின் மீதும் கவனத்தைச் செலுத்தினார்.
மீண்டும் மீண்டும் அவர் பிரார்த்தித்தபோது, அறைக்கு வெளியே விடியற்காலையில் பறவைகளின் ஒலி அவருக்குக் கேட்டது. இவ்வாறாக ஒரு மணி நேரம் கடந்து, இரண்டு மணி நேரமும் கடந்தது. நேரம் செல்லச் செல்ல அந்த நம்பிக்கையாளரின் கால்களும் விறைத்துப் போயின. அவரது கண்களும் அறையின் சுவர்களில் கண்ணோட்டமிடத் தொடங்கி, அந்தச் சுவரில் ஏற்பட்டிருந்த ஒரு வெடிப்பைக் கண்ணுற்றது. அம்மனிதரது மனமும் படிப்படியாக அலைபாய ஆரம்பித்து தனக்கு முன்னால் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும் அப்துல் பஹாவை அவரது கண்கள் கண்ணுற்றன. அப்துல் பஹாவிடம் காணப்பட்ட மாபெரும் மகிழ்ச்சி மற்றும் சாந்தத்தின் ஓர் உணர்வு அம்மனிதரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
திடீரென்று, அதுபோல் தாமும் பிரார்த்திக்க வேண்டும் என அவர் விரும்பினார். அந்நிலையில் சுயநல ஆசைகள் அவரை விட்டுப் போயின. சோகமும், முரண்பாடும், அவரைச் சுற்றியிருந்த சூழலும் கூட மறைந்து விட்டது. இறைவன்பால் நெருங்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
தனது கண்களை மீண்டும் ஒரு முறை மூடிய நிலையில் அவர் இவ்வுலகினை அப்பால் ஒதுக்கி வைத்து விட்டு, பிரார்த்திக்கத் தொடங்கினார். அவரது இதயம் ஆர்வத்தினால் நிரப்பப்பட்டு, மகிழ்ச்சி நிரம்பி தீவிர நிலையை அடைந்தது. பணிவுநிலையினால் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதையும், ஒரு சாந்த உணர்வு தம்மை ஆட்கொண்டு விட்டதையும் அவர் உணர்ந்தார். பிரார்த்திக்க அப்துல் பஹா அவருக்குக் கற்றுக்கொடுத்து விட்டார்!
அக்கா நகருக்கே மாஸ்டரான அப்துல் பஹா உடனே எழுந்து அம்மனிதரிடம் வந்தார். “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, வலிக்கும் உங்களுடைய உடல் பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடாது. ஜன்னலுக்கு வெளியே வட்டமிடும் பறவைகளையோ, சுவற்றின் மீதுள்ள வெடிப்பையோ நீங்கள் எண்ணக்கூடாது!” அப்துல் பஹா சற்றுக் கடுமையுடன், “நீங்கள் பிரார்த்திக்க விரும்பிடும்போது, எல்லாம்வல்லவரது முன்னிலையில் நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.