அப்துல்-பஹாவின் நகைச்சுவை உணர்வும் உளவலிமையும்
அப்துல்-பஹா தமது உடல்நலக் குறைவின் காரணமாக நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இயலாமல் இருந்தார். அவர் மொண்ட்ரியலிலிருந்து கிளம்புவதற்குப் பல நாட்களாயின. அவர் அவ்வப்போது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், காரில் சிறிது ஓய்வாகப் பிரயாணம் செய்யவோ நடக்கவோ செய்வார். ஒரு நாள் அவர் தன்னந்தனியாகச் சென்று டிராம் வண்டியில் ஏறினார். டிராம் வண்டி அவரை நகரத்திலிருந்து சிறிது வெளியில் கொண்டு சென்றது. பிறகு அவர் அவ்வண்டியிலிருந்து இறங்கி நகரத்திற்கு வெளியே செல்லும் வேறொரு வண்டியில் ஏறினார். அதன் பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தினார், ஆனால் தாம் தங்கியிருந்த விடுதியின் பெயரை அவரால் நினைவுகூறமுடியவில்லை. இருந்தபோதும், விடுதிக்கு செல்லும் சரியான திசையை அவரால் குறிப்பிட முடிந்தது. பிறகு, அவர் தமது உதவியாளர்களிடம் அந்த நிகழ்வை அதிக நகைப்போடு குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வு புனித நிலத்தில் நடந்த வொறொரு நிகழ்வை அவருக்கு நினைவூட்டியது. ஆக்கா நகர பஹாய் ஒருவரான ஆஃகா ஃபராஜ் என்பவர் ஒரு முறை வழியைத் தவறவிட்டுவிட்டார். அப்துல்-பஹா அவரிடம் அவர் பயணம் செய்த கோவேறு கழுதையின் கடிவாள வாரை அவிழ்த்துவிடச் சொல்லியிருந்தார். கடிவாளத்திலிருந்து விடுபட்ட கழுதை பிறகு சரியான திசையை நோக்கிச் சென்றது. அதே போன்றே, தாமும் வாடகை காரின் ஓட்டுனருக்கு சரியான வழியை காட்ட முடிந்ததென அப்துல்-பஹா சிரித்துக்கொண்டே கூறினார்.
செப்டம்பர் 9ம் தேதி பஃப்பலோ நகரத்திற்கான பயணம் மிகவும் நீண்டதாகவும் சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது. டோரொண்டோ நகரில் இரயில் வண்டிகள் மாற்றப்பட வேண்டும். அங்குள்ள இரயில் நிலையத்தில் சற்று நடந்த அப்துல்-பஹா தமது பெரும் சோர்வு குறித்து கவைலப்பட்டு, கலிபோர்னியாவுக்கு எவ்வாறு பயணம் செய்யப்போகிறோம் என நினைத்தார். ஆனால் அவர் சென்றுதான் ஆகவேண்டும், ஏனெனில், இறைவனின் பாதையில் இன்னல்களே கொடைகளாகும், கடும் உழைப்பே மாபெரும் அருள்பாலிப்புமாகும். அன்றிரவு, வெகு நேரத்திற்குப் பிறகு பஃப்பலோ நகர் சென்றடையப்பட்டது. அதனால், அந்த நகரத்து பஹாய்களுக்கு அப்துல்-பஹாவின் வருகை உடனடியாக அறிவிக்கப்படவும் இல்லை.
(HM Balyuzi, ‘Abdu’l-Bahá: The Centre of the Covenant of Bahá’u’lláh, p. 265)