பஹாய் தேர்தல்முறை


நாடுகளில் தேர்தல் என்பது இன்று நேற்று நடைபெற்று வரும் ஒன்றல்ல. மன்னராட்சி ஆனாலும் மக்களாட்சி ஆனாலும் தேர்தல் என்பது பல காலமாகவே நடைபெற்று வந்துள்ள ஒன்றாகும். உதாரணத்திற்கு, சோழ மன்னர்களான இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. அவர்கள், சோழப் பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அலுவலர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என சரித்திரம் கூறுகின்றது. (பழங்கால தமிழர் தேர்தல் மற்றும் ஆட்சிமுறையை இங்கு பார்க்கலாம்)

இன்று உலகெங்கிலும், ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை சமுதாயத்தில் ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியாகும். உதாரணத்திற்கு கட்சி அரசியலைப் பரிசீலிப்போம். அதைப் பற்றி அதிகமாக சொல்ல வேண்டியதில்லை. அங்கு ஒற்றுமைக்கு வழியே இல்லை. எங்கள் கட்சியே சிறந்தது. உன்னைவிட நானே சிறந்தவன், நீ இப்படி, நீ அப்படி என்றெல்லாம் தேர்தல்காலத்தின் போது ஒருவர் மற்றவரை வசைபாடி திட்டித் தீர்ப்பதைக் கேட்டிருப்போம். அங்கு வேட்பாளர்கள் உண்மையில், யாருடைய நன்மைக்கு போராடுகின்றனர் என்பது குழப்பமான ஒன்று, கட்சிக்காகவா, போட்டியிடும் வேட்பாளரின் நன்மைக்காகவா, மக்களுக்காகவா? தேர்ந்தெடுக்கப்படுபவர், வெற்றிபெற்றால், மக்களுக்கு நன்றி செலுத்துகின்றார். அவர் யாருக்காக தேர்தலில் நின்றார், தனக்காகவா மக்களுக்காகவா? நன்றி செலுத்துவது மக்கள் தமக்கு ஏதோ உதவி செய்துள்ளனர் என்பது போன்றுள்ளது.

மதங்களைப் பொறுத்த வரை, பஹாய் சமயம் தவிர மற்ற மதங்களில், குறிப்பாக, யூத, கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயங்களில், மதகுருக்களின் அடிப்படையில் அமைந்த ஒரு நிர்வாக முறை உள்ளது. உதாரணத்திற்கு, கிருஸ்துவத்தின் கத்தோலிக்க மதப்பிரிவில் தலைமையாளராக ‘போப்’ என்பவர் உள்ளார். இவருக்குக் கீழ் படிப்படியாக அடித்தட்டு வரை பலவித மதகுருக்களின் முறை ஒன்று உள்ளது. அதே போன்று, இரான் நாட்டில் இஸ்லாமிய சமயத்தின் ஷீயா மதப்பிரிவிலும் அது போன்ற ஒரு படிப்படியான முறை ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் ‘போப்’ எனப்படும் போப்பாண்டவர், புனித ரோமானிய சாம்ராஜ்யத்தின் தலைமையாளராக இருந்தார், ஆனால் காலப்போக்கில் நிலைமை மாற்றம் கண்டு இன்று அவர் இத்தாலி நாட்டில் வட்டிக்கன் எனப்படும் ஒரு சிறிய சுயாட்சி பிரதேசத்திற்கு மட்டுமே தலைவராக உள்ளார். இரான் நாட்டில் ஷா மன்னர்களின் ஆட்சி 1979-இல் கவிழ்ந்து அதனிடத்தில் மதகுருக்களின் ஆட்சி அமலுக்கு வந்தது. நாடு இந்த மதகுருக்களின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது, பெயரளவில் தேர்தல் என ஒன்று நடைபெறுகின்றது.

பஹாய் சமயம் தவிர்த்து மற்ற சமய போதனைகளில் நிர்வாகமுறை என ஒன்று கிடையாது. தற்போது காணப்படுவதெல்லாம் காலப்போக்கில், இறையியல் (Theology) எனப்படும் ஒன்றின் உருவாக்கத்தில், விளைந்தவையாகும். இது சமய போதனைகளை மனித அறிவைக் கொண்டு வியாக்கியானம் செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

பஹாவுல்லா, தமது திருவெளிப்பாட்டின் மூலம் இரண்டு ஸ்தாபனங்களிலிருந்து — அரசர்கள் மற்றும் மதகுருக்கள் — அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அதனிடத்தில் பஹாவுல்லா ஒரு புதிய முறையை, இறையாட்சி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு பஹாயும் தனது ஆன்மீக வளர்ச்சிக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும், அதை மற்றவரின் கைகளில் ஒப்படைக்க முடியாது. அவரது ஆன்மீக வளர்ச்சி அதனில்தான் அடங்கியுள்ளது. ஆதலால், அவரது தலைவிதி மதகுருக்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட முடியாது.

அப்படியாயின், மதகுருக்களே இல்லாத, பஹாய் சமயத்தின் நிர்வாகம் எப்படி நடைபெறுகின்றது? இதற்கான பதில் பஹாவுல்லா வழங்கியுள்ள ‘பஹாவுல்லாவின் உலக ஒழுங்கமைப்பு’, ஷோகி எஃபெண்டியின் ‘பஹாய் நிர்வாகம்’ போன்ற நூல்களில் நாம் காணலாம். தமது ‘உயிலும் சாசனத்தில்’ அப்துல்-பஹா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

இப்பொழுது, எல்லா நன்மைக்கும் தோற்றிடமாகவும் எல்லாப் பிழைகளினின்றும் விடுவிக்கப்பட்டும், இறைவனால் நியமிக்கப்பட்டுள்ள உலக நீதி மன்றம் சம்பந்தமாக: அந்த ஸ்தாபனம், பொதுமக்களின் சம்மதத்தின் பேரில், வாக்களிப்பின் மூலமாக, அதாவது, நம்பிக்கையாளர்களின் மூலமாக அதன் உறுப்பினர்கள், இறையச்சத்திற்கு வெளிப்படுத்துதல்களாகவும் அறிவுக்கும் புரிந்துணர்வுக்கும் உய்த்துணர்வுக்கும் பகலூற்றாகவும் இருத்தல் வேண்டும்; அவர்கள் இறைவனின் சமயத்தில் உறுதியுடையோராகவும் மனித இனம் அனைத்தின் நன்மையை நாடுவோராகவும் இருத்தல் வேண்டும்.

சோழர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டிருந்தன.

உறுப்பினராவதற்கான தகுதிகள்

1.   தம் சொந்த மனையில் வீடு கட்டியிருப்பவர்களாகவும்
2.   காணிக்கடன் செலுத்துவதற்குரிய கால் வேலி நிலமுடையவர்களாகவும்
3.   சிறந்த கல்வியறிவு உடையவர்களாகவும்
4.   அறநெறி பிழையாமல் நடப்பவர்களாகவும்,
5.   தூய வழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவர்களாகவும்
6.   காரியம் நிறைவேற்றுவதில் வன்மையுடையவர்களாகவும்
7.   35 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்டவராகவும்
8.   மூன்றாண்டிற்கு எந்த வாரியத்திற்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாதவராகவும்
9.   பெருங் கல்விமான்களாயிருந்தால் அரைக்கால் வேலி நிலமுடையவராயிருப்பினும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆன்மீக சபைகள் பற்றி அப்துல்-பஹா பின்வருமாறு கூறுகின்றார்:

இந்த ஆன்மீக சபைகள் ஒளிவீசும் தீபங்கள், தெய்வீக பூங்காக்கள். அவற்றிலிருந்து எல்லா மண்டலங்கள் மீதும் புனிதத்தன்மையின் நறுமணங்கள் பரப்பப்படுகின்றன, எல்லா திசைகளிலும் எல்லா படைக்கப்பட்ட பொருள்களின் மீதும் அறிவொளி பொழியப்படுகின்றது. -அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் எழுத்தோவியங்களிலிருந்து சில தேர்வுகள், பக். 80

இதிலிருந்து பஹாய்களுக்கு ஒரு மாபெரும் புனிதப் பொறுப்புள்ளது என்பதையும் பஹாய் சமயத்தில் தேர்தல் என்பது ஒரு மகத்துவமும் புனிதமும் மிக்க காரியம் என்பதையும் நாம் தெளிவாகக் காணலாம். உலக நீதிமன்றம், தேசிய ஆன்மீக சபைகள் மற்றும் உள்ளூர் ஆன்மீக சபைகள் என தற்போது அழைக்கப்படும் ஸ்தாபனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர், “இறையச்சத்திற்கு வெளிப்படுத்துதல்களாகவும் அறிவுக்கும் புரிந்துணர்வுக்கும் உய்த்துணர்வுக்கும் பகலூற்றாகவும் இருத்தல் வேண்டும்; அவர்கள் இறைவனின் சமயத்தில் உறுதியுடையோராகவும் மனித இனம் அனைத்தின் நன்மையை நாடுவோராகவும் இருத்தல் வேண்டும். இதை எப்படி நிறைவேற்றுவது?

ஸ்தாபனங்களுக்குத் தெர்ந்தெடுக்கப்படுவோர், கேள்விக்கிடமற்ற விசுவாசம், தன்னலமற்ற பக்தி, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனை, அங்கீகரிக்கப்பட்ட திறமை, முதிர்ந்த அனுபவம் ஆகிய பண்புகளைக் கொண்டோராக இருப்பது சிறப்பு. ஒருவரின் சொத்து, அந்தஸ்து ஆகியவை முக்கியமில்லை. பஹாய்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கவிருப்போரைப் பற்றியோ, அவர்களின் குணங்கள் மற்றும் தகுதிகளைப் பற்றியோ தேர்தலுக்கு முன் கலந்துரையாடுவதில்லை. குறிப்பாக, புறம்பேசுதலுக்குச் சமமான எவ்வித உரையாடலிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. தேர்தெடுக்கப்படுவோரின் குணங்களையும் பண்புகளையும் சுயமாக சமூக ஒன்றுகூடல்கள் மற்றும் நடவடிக்கைகளின்போது கவனித்து சிந்தனையில் பதித்துக்கொள்வர்.

பஹாய் தேர்தல்களில் வேட்பாளர் நியமணம் கிடையாது; தேர்தல் பிரச்சாரம் அறவே கிடையாதது. மட்டுமின்றி, அது தடைசெய்யப்பட்டுமுள்ளது. மற்றவர்கள் மீது தங்கள் சொந்தக் கருத்தைக் கொண்டு செல்வாக்கு செலுத்துவதும் கூடாது.

அவர்கள் உலக நீதிமன்ற உறுப்பினர்களாகவோ, தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்களாகவோ, உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினர்களாகவோ, மண்டல பேரவை உறுப்பினர்களாகவோ இருப்பினும் பஹாய் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு எந்த விசேஷ அந்தஸ்தோ செல்வாக்கோ கிடையாது. அவர்கள் எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி ஓர் ஆன்மீக சேவையில் ஈடுபடுகின்றனர்.

பஹாய்கள், பஹாய் தேர்தல்களை ஓர் இன்றியமையா ஆன்மீகக் கடமையாக, மனசாட்சி குறித்த ஒரு விஷயமாக பார்க்கின்றனர். அவ்வுரிமை எந்த பஹாயிடமிருந்தும் பறிக்கப்பட முடியாது.

பஹாய் தேர்தல்களில் கலந்துகொள்வது ஒரு மகிழ்ச்சியும் தனித்துவமான அனுபவமாக இருக்க வேண்டும், அதை முறையாக, பிரார்த்தனையுடன் கடைப்பிடித்தால் அந்நிகழ்ச்சி அதே மகிழ்ச்சியை, அதே தனித்துவமான உணர்வை அளிக்க வேண்டும்.

பஹாய் தேர்தல் பற்றி முறையாகக் கற்றுக்கொண்டோமானால், அது நமது பஹாய் சமூகத்தின்பாலான ஒரு புனிதக் கடமை என்பது மட்டுமின்றி, அது உலகின் மேம்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் பங்களித்திடும் ஒன்றென்பதையும் நாம் கண்டுகொள்வோம்.

பஹாய் நிர்வாக முறையானது தனியே இறையாட்சியோ, ஜனநாயகமோ, சோஷலிஸமோ, கம்யூனிஸமோ, வேறு எந்த முறைமையோ கிடையாது. அது சுதந்திரமான, தனிப்பட்ட, தனித்துவமான ஒரு முறையாகும். உதாரணத்திற்கு, பஹாய்கள் பிரார்த்தனையுடனும் தியானபூர்வமாகவும் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு பஹாய்க்கும் அவரது நிர்வாக வாக்குரிமை பெரும் முக்கியத்துவம் உடையது,

வெளியுலகத்தைப் போன்று, தேர்ந்தெடுக்கப்படும் சபை அதைத் தேர்ந்தெடுத்த நம்பிக்கையாளருக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. வெளியுலக அரசியலில் தேர்ந்தெடுக்கப்படவர் தன்னைத் தேர்ந்தெடுத்தோருக்குக் கடமைப்பட்டவராவார். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பஹாய் ஸ்தாபனமும் நம்பிக்கையாளரின்றி கடவுளுக்கே, பஹாவுல்லாவுக்கே கடமைப்பட்டவை. பஹாய்களின் விருப்பமின்றி அவை பஹாவுல்லாவின் விதிமுறைப்படியே இயங்குகின்றன. இருப்பினும் பஹாய் தேர்தல்களின்போது, பஹாய்கள் தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வேளை பஹாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்தாபனத்திற்கு தங்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: