மூன்று மரங்களின் கதைகள்
ஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன. அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும் தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன. முதலாவது மரம், வானில் பூத்திருந்து நட்சந்திரங்களைப் பார்த்து, “நான் பொக்கிஷங்களை பெற்றிருக்க விரும்புகிறேன். பொன் முழாம் பூசப்பட்டு, வைரங்களைச் சுமந்திருக்க விரும்புகிறேன். உலகிலேயே மிக அழகிய பொக்கிஷப் பேழையாக இருப்பேன்,” என்றது.
இரண்டாவது மரம், தன் வேர்களுக்குக் கீழே சமுத்திரத்தை நோக்கி ஓடிக்கொண்டிந்த ஒரு சிறிய நீரோடையைப் பார்த்தது. “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.
மூன்றாவது சிறிய மரம் தனக்குக் கீழே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தது. அங்கு சுறுசுறுப்பான ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பான ஒரு நகரில் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.
வருடங்கள் பல சென்றன. மழைக்காலங்களும் வந்து சென்றன, கதிரவன் தினசரி பிரகாசித்து சென்றான், அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.
முதலாவது விறகுவெட்டி முதல் மரத்தைப் பார்த்து, “இந்த மரம் மிகவும் அழகாக இருக்கின்றது. எனக்கு இது பொறுத்தமே,” என்றான். அவனுடைய பளிச்சிடும் கோடாரியினால் வெட்டுண்டு அந்த முதல் மரம் கீழே சாய்ந்தது.
“நான் இப்போது ஒரு அழகிய பேழையாக மாறப்போகின்றேன். நான் பெரும் பொக்கிஷங்களைத் தாங்கப்போகின்றேன்!” என அந்த முதல் மரம் கூறியது.
இரண்டாவது விறகுவெட்டி இரண்டாவது மரத்தைப் பார்த்தான். “இந்த மரம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. எனக்கு இது மிகவும் பொறுத்தமே,” என்றான். அவனுடைய கோடாரியின் வீச்சில் வெட்டுண்டு அந்த இரண்டாவது மரமும் கீழே சாய்ந்தது.
“நான் இப்போது மகா சமுத்திரங்களையெல்லாம் கடக்கப் போகின்றேன்,” என அந்த இரண்டாவது மரம் நினைத்தது. “பேரரசர்களுக்கெல்லாம் நான் ஒரு மாபெரும் மரக்கலமாக விளங்கப்போகின்றேன்,” என்றது.
மூன்றாவது மரம், விறகுவெட்டி தன்னை நோக்கி திரும்பியபோது மனம் திடுக்கிட்டுப் போனது. அம்மரம், நேராக விரைப்புடன் சுவர்க்கத்தை நோக்கியவாறு நின்றது.
ஆனால், அந்த விறகுவெட்டியோ மேலே அன்னாந்து பார்க்கக்கூட இல்லை. “எப்படிப்பட்ட மரமும் எனக்குப் போதும்,” என முனுமுனுத்தான். தன்னுடைய கொடுமையான கோடாரியினால் ஒரே வீச்சில் மரத்தைச் சாய்த்தான். மூன்றாவது மரமும் கீழே சாய்ந்தது.
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.
ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொண்ணால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கிநிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.
இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அன்று எந்த மரக்கலமும் செய்யப்படவில்லை. மாறாக, ஒரு காலத்தில மகா விருட்சமென நின்ற அந்த மரம், ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. ஒரு சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அந்த கப்பல் மிகவும் வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணஞ் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மூன்றாவது மரம், விறக வெட்டி தன்னை பெரும் தூண்களாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டுவைத்தபோது மிகவும் மனக்குழப்பம் அடைந்தது.
“ஐயகோ, என்ன நடந்துவிட்டது?” என அந்த மரம் சிந்தித்தது. “நான் விரும்பியதெல்லாம் அந்த மலை உச்சியின் மீது, இறைவனை நோக்கியவாறு நிற்கத்தானே விரும்பினேன்,” என புலம்பியது.
பல நாள்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன. ஆனால், ஒரிரவு, ஓர் இழம் பெண் தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.
“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்,” என அப்பெண்ணின் கனவன் முனுமுனுத்தான்.
அந்த இழம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள், அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.
அப்போது, திடீரென, உலகிலேயே அதிஉயரிய பொக்கிஷத்தைத் தான் தாங்கிக்கொண்டிருப்பதை அந்த மரம் உணர்ந்தது.
ஒரு நாள் சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கரும் அவரது நண்பர்களும் அந்த சிறிய படகில் குழுமினர். அவ்வழிப்போக்கர், படகு நீரில் சென்ற சிறிது நேரத்தில் தூயில் கொண்டார்.
அப்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது. அந்தச் சிறிய மரம் நடுங்கியது. தன்னால் அத்தனை பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த நீரில் செல்வதற்குத் தனக்கு பலம் கிடையாது என அந்தப் படகிற்குத் தெரியும். அது போன்ற புயலில் பயணிகளைப் பத்திரமாகக் அதனால் கொண்டு சேர்க்க முடியாது.
களைப்படைந்த அந்த மனிதர் எழுந்து உட்கார்ந்தார். பின்னர் எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறினார். புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.
அந்தப் படகு, தான் சுவர்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.
ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது. மிகவும் ஆக்கிரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு மக்கட் கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதரின் கரங்களைத் தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.
அந்த மரம், தான் கோரமான, கண்டனத்திற்குரிய, மிருகத்தனமான, ஒன்றெனும் உணர்வை அடைந்தது.
ஆனால், ஒரு சனிக்கிழமை காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
(இயேசு நாதரை ஒட்டிய சில சம்பவங்களை வைத்து புணையப்பட்ட கற்பனையான ஒரு கதை.)