

21 செப்டம்பர் 2021
சாவோ செபாஸ்டியோ, பிரேசில், 21 செப்டம்பர் 2021, (BWNS) – ஆகஸ்ட் மாதத்தில் பிரேசிலின் சாவோ செபாஸ்டினோவில் உள்ள ஓர் இளைஞர் குழு, குப்பைகள் சிதறிக்கிடந்த உள்ளூர் நதியை எப்படி சுத்தம் செய்வது என ஆராய்ந்தபோது, அவர்கள் மனதில் அதைவிட பெரிய கேள்விகள் எழுந்தன.
“நாம் ஆற்றை சுத்தம் செய்தால், அதில் மீண்டும் குப்பைகள் உண்டாவதை எவ்வாறு தடுக்க முடியும்?” என விலா டோ போவா அண்டைப்புறத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக, இளைஞர்கள் பஹாய் கல்வித் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் பெற்றுவரும் அகப்பார்வைகளின்பால் கவனத்தைத் திருப்பினர். இந்த கல்வித் திட்டங்கள் சமுதாய மெய்நிலையை பகுப்பாய்வு செய்வதற்கும் தங்கள் சமூகங்களின் தேவைகளை அடையாளம் கானவும் தங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்யவும் தேவைப்படும் திறனாற்றலை உருவாக்குகின்றன.
“நாம் இந்த சுத்தப்படுத்துதலுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறினார்.

இளைஞர்களிடையே உரையாடல்கள் மடிப்பவிழ்கையில், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், தங்கள் அண்டைப்புறத்தின் பொதுநலனுக்குப் பங்களிக்கும் உள்ளூர் முயற்சிகளிலிருந்து கிடைக்கும் பரந்த அகப்பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு செய்திமடல் சிறந்த வழியாகும் எனும் முடிவுக்கு வந்தனர்.
Vila do Boa – Só Notícia Boa (நல்ல கிராமம் – நற்செய்தி மட்டும்) என்ற தலைப்பில், செய்திமடலின் பெயர் “போவா” என்ற சொல்லின் பயன்பாடு ஆகும், இது “நல்லது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“செய்தித்தாள்களில் மோசமான செய்திகளே அதிகமாக உள்ளன; வன்முறை மற்றும் சோகமான விஷயங்கள். எனவே, நேர்மறையான மற்றும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு யோசனை உதித்தது. அது, அண்டைப்புற மக்களுக்கு நம்பிக்கையை அளித்து இதில் பங்கேற்ப்பதற்கு அவர்களுக்கும் அழைப்புவிடுத்தது” என குழுவின் உதவியாளரான மார்லீன் செய்தி சேவையுடனான (BWNS) ஒரு நேர்காணலில் கூறினார்.

சுத்தம் செய்வதற்கான திட்டங்கள் உருவாகத் தொடங்கிய அதே வேளை, மேலும் சவால்மிக்க கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அளவான குப்பைகளை எப்படி சேகரிப்போம்? மேலும், வீசப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மரச்சாமான்கள் போன்ற அனைத்தையும் அகற்றுவதற்காக, அவற்றைப் பிரதான சாலைக்கு நாங்கள் எவ்வாறு கொண்டுசெல்லக்கூடும் எனும் கேள்விகளை இளைஞர்கள் ஆரம்பத்திலேயே கேட்டனர்.
எவ்வாறாயினும், இளைஞர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகவில்லை. ஒரு நகராட்சி அதிகாரி, குடிநீர் வசதி பற்றிய ஒரு நிகழ்வில் இளைஞர்களின் தாய்மார்களிடமிருந்து இத்திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, அவ்விளைஞர்களின் முன்முயற்சியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இளைஞர்களைச் சந்திக்க முன்வந்தார்.
அந்த இளைஞர்களுடனான சந்திப்பால் உற்சாகமுற்ற அந்த அதிகாரி, உதவிக்கு உடனடியாக லாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்தார்; மேலும் இளைஞர்களுக்கு பல அடையாள பலகைகளை வழங்கினார்; வர்ணத்தால் ஆன அவை ஆற்றின் அருகே வைக்கப்பட்டு, அப்பகுதியை குப்பைகளற்ற பகுதியாக்கிட மக்களை ஊக்குவித்தன.
இதற்கிடையில், முதல் செய்திமடல் தயாரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 120-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வண்டைப்புறத்தில் உள்ள இளைஞர்களுள் ஒருவரான நிக்கோல், குடும்பங்களுடன் நிகழ்ந்த உரையாடலின் அனுபவத்தைச் சுருக்கமாக விவரித்தார், “நாம் நல்ல விதைகளை விதைத்தால், அவற்றிலிருந்து நல்ல விஷயங்கள் வளரும்.”

துப்புரவு நாளன்று, இந்த முயற்சியை ஆதரிக்கும் இளைஞர்களின் அர்ப்பண உணர்வானது, நகராட்சி தொழிலாளர்களை ஆற்றை தாண்டி மற்ற பகுதிகளுக்கும் தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்த ஊக்குவித்தது, இதன் விளைவாக 12 டன் குப்பை அகற்றப்பட்டது.
“முகமூடி அணிந்து வெப்பத்தில் வேலை செய்வது கஷ்டமாக இருந்தது, ஆனால் இந்த திட்டம் எங்கள் அண்டைப்புறத்தில் மேலும் வலுவான நட்புகளை உருவாக்கியது” என விலா டோ போவாவைச் சேர்ந்த இளைஞர் எஸ்ட்ராஸ் கூறினார்.
மற்றோர் இளைஞரான கேப்ரியல், இந்தத் திட்டத்திற்கு வழிவகுத்த பஹாய் கல்வித் திட்டங்கள் பல இளைஞர்களைப் பல ஆண்டுகளாக தங்கள் அண்டைப்புறங்களுக்கு சேவை செய்யத் தூண்டியது என்பதை விவரித்தார். “மேன்மேலும் அதிகமான இளைஞர்கள் அவர்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதைக் கற்கின்றனர், மற்றும் தங்கள் சமூகத்திற்கு உதவுவதன் மூலம் அதிக நோக்க உணர்வைப் பெறுகின்றனர். நட்பு, சேவை மற்றும் ஒற்றுமையின் மூலம் இப்படித்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறோம்.
பிரேசில் பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான லீயெஸ் வொன் செக்கஸ் கவால்கண்டி மேலும் விவரித்து, இந்த முயற்சிகள் சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யவும் அண்டைப்பகுதியினர் இடையே கூட்டு விருப்பாற்றலைப் பேணவும், இப்பகுதிவாசிகள் மற்றும் நகராட்சிக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியத்தை எவ்வாறு திறந்துமுள்ளன என்பதை விளக்கினார்.

“சமுதாய தன்மைமாற்றத்திற்கு தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களிடையே ஒற்றுமை உருவாக்கப்படுவதைக் கோருகின்றது. நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி எதிர்ப்பு மற்றும் போரில் இல்லை. அது ஒற்றுமையில் உள்ளது. இதுதான் தன்மைமாற்றத்தின் சக்தி.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1534/