நீங்கள் என்னை வரவேற்பதற்கு மாறாக நான் உங்களுக்கு ‘வரவேற்பு’ கூறப்போகின்றேன். உங்களுடன் இங்கிருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அளவற்ற களிப்புடன் இருக்கின்றேன், மற்றும் இத்தகைய ஒரு சந்திப்பிற்குக் கருவியாக இருந்து வழிவகுத்த புனிதரான பஹாவுல்லா அவர்களின் திருவாக்கின் ஆற்றலுக்காக நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.
இவ்வுலகில் பல மக்கள் நாட்டுக்கு நாடு செல்கின்றனர். ஒரு வேளை அவர்கள் இங்கிருந்து கிழக்கு நாடுகளுக்குச் செல்லக்கூடும்; ஒரு வேளை கிழக்கிலிருந்து சிலர் இங்கு வரக்கூடும்; ஆனால் அப் பயணங்கள், சுற்றுலாவுக்காகவோ, வர்த்தக நோக்கத்துடனோ, அரசியல் காரணமாகவோ, அறிவியல் சாதனைக்காகவோ, நண்பர்களைச் சந்திப்பதற்காகவோ இருக்கலாம். அத்தகைய ஒன்றுகூடல்கள் தற்செயல் நிகழ்வுகளாகும்; அவை யாவும் இயல்புலகின் அவசரத்தேவைகள் சம்பந்தமானவையாகும்.
நான் கிழக்கிலிருந்து மேற்கிற்கு வந்துள்ளேன்—எத்தகைய வர்த்தக நோக்கமில்லாமலும் அல்லது சுற்றுலாவை நோக்கமாகக்கொண்டோ, அரசியல் காரணங்களுக்காவோ நான் இத்தூர பயணத்தை மேற்கொள்ளவில்லை. இப்பயணம் உங்களைச் சந்திப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களின் சந்திப்புகள் பொதுவாகவே தற்செயலானவையாக இருக்கும் அதே வேளை, நமது சந்திப்பு உண்மையானது, இன்றியமையாதது—ஏனெனில் இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன, ஆன்மாக்கள் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆன்மவுணர்வுகள் கிளர்வுற்றிருக்கின்றன, இத்தகைய கூட்டம் இயல்பில் உண்மையானது, மற்றும் அதிலிருந்து பிறக்கும் விளைவுகள் மகத்தானவையாகும். அவ்விளைவுகள் நிலையானவையாகும்.
கடந்து சென்ற காலங்களை நினைவுகூறுங்கள். அப்போது இது போன்ற கூட்டம் ஒன்று நடந்தது—அது மனசாட்சியின் ஈர்ப்பினால் தோன்றியது என்பதாகும். அதற்கு ஆன்மீக பந்தமே காரணமாகும். அதற்கு சுவர்க்கத்தின் சகோதர பந்தமே காரணமாகும். பின்னாளில் இணைநிலைப்பட்ட அதன் விளைவுகளைக் கருதுங்கள்! எத்தகைய ஒளிகள் அதிலிருந்து தோன்றியுள்ளன! அதிலிருந்த எத்தகைய புதிய ஆன்மவுணர்வுதான் சுவாசிக்கப்பட்டுள்ளது!
ஆதலால், நமது இக்கூட்டமும் அது போன்றே ஒரு ஆன்மீகக் கூட்டமாக, ஒரு தெய்வீக கூட்டமாக, ஒரு சுமுகமான பந்தமாக, தெய்வீகத்திற்கு உட்பட்டதாக, புனித ஆவியின் மூச்சுக் காற்றில் விளைந்ததாக ஆகிடவேண்டுமென நான் இறைவனை வேண்டுகின்றேன். அதன் தடயங்கள் நிலையானவையாக இருக்கட்டுமாக, அதன் விளைவுகள் நித்தியமானவையாக இருக்கட்டுமாக, அது அழியாத பந்தமாகவும் பிரிக்கப்படமுடியாத இணைவாகவும் இருக்கட்டுமாக. அது என்றுமே முடிவுறாத ஓர் அன்பாக இருக்கட்டுமாக. இதுவே என் எதிர்ப்பார்ப்பு, இறையரசின்பால் முகம் திருப்பியுள்ளோரே, கடவுளின் அன்பால் ஒளிர்வடைந்துள்ளோரே, இக்கூட்டம் என்றும்நிலையான விளைவுகளை உண்டாக்கிட நீங்கள் சற்றும் அயராமல் உழைத்திட வேண்டும். இதனால் நடைபெறக் கூடியது என்ன?
நீங்கள் பஹாவுல்லாவின் போதனைகளுக்கிணங்க செயல்படும்போது இது நடைபெறும். நீங்கள் தெய்வீக ஆவியினால் மறுவுயிர்ப்புறுவதை இது பொருத்திருக்கின்றது. ஒரு மனிதனின் உடலுக்கு அவனுடைய ஆன்மா எவ்வாறோ அவ்வாறே இவ்வுலக்கிற்கு பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு உள்ளது. உலகெனும் உடலோடு ஒப்பிடுகையில் தெய்வீகம் என்பது ஒரு விளக்கினுள் ஒளிவிடும் ஒளியைப் போன்றதாகும். உள்ளங்களெனும் நிலத்தோடு ஒப்பிடுகையில் அது உயிரளிக்கும் மழையைப் போன்றதாகும். மரங்களின் ஆன்மீக வளர்ச்சி எனும்போது அது வசந்தகால தென்றலைப் போன்றதாகும்; மற்றும் பிணியுற்ற அரசியல் அமைப்பிற்கு அது விரைவாகச் செயல்படும் நிவாரணியாகும், ஏனெனில் மானிட உலகின் ஒருமைத்தன்மைக்கு அதுவே மூலாதாரமாகும். அதுவே எல்லா மனிதர்களுக்கிடையிலான அன்பாகும். அது எல்லா சமயநம்பிக்கைகளையும் ஐக்கியப்படுத்திடும் பந்தமாகும். அது எல்லா இனங்களையும் இணைக்கும் ஐக்கியமாகும். அது எல்லா நாடுகளுக்குமிடையிலான தொடர்பாகும். அது தேசங்களுக்கிடையிலான சர்வலோக அமைதியாகும். அது எல்லா மக்களுக்குமிடையிலான சர்வலோக அமைதியாகும். அது எல்லா பிறந்தகங்களையும் ஒன்றுகூட்டவிருக்கும் சர்வலோக அமைதியாகும். சந்தேகமற அதுவே உலகின் ஆன்மாவாகும். அதுவே உலகின் ஒளியாகும். அதே போன்று அது அறிவாற்றல் பிரகடனத்திற்கு உத்வேகமளிப்பதாகும், மற்றும் அறிவியல், பகுத்தறிவிற்கிடையிலான இணக்கத்திற்குக் காரணமுமாகும்.
உலகின் தேசங்கள் யாவும் இன்று தப்பெண்ணங்கள், வெறுப்புணர்வு மற்றும் காழ்ப்புணர்வு போன்றவற்றிற்கு உயிரளிக்கும் குறிப்பிட்ட சில மூடநம்பிக்கைகளுக்கு உட்பட்டுள்ளனர். இம்மூட நம்பிக்கைகளே யுத்தங்களுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக இருக்கின்றன. சமயங்கள் சார்ந்த அறிவுக்குப் பொருந்தாத நடத்தைகள் பலவகைப்பட்டவையாகவும், போலியானவையுமாக இருக்கின்றன; ஆனால் பஹாவுல்லாவின் போதனைகள் மெய்ம்மையின் மறுவுருவமாகும், மற்றும் மெய்ம்மையே எல்லா தெய்வீக சமயங்களுக்கும் அடித்தலமும் ஆகும். ஆகவே இப்போதனைகளே மானிடத்தை ஐக்கியப்படுத்தவிருப்பதற்கான காரணிகளாகும். அவை மனித உள்ளங்களுக்கிடையே அன்பிற்குக் காரணமாகும், ஏனெனில் அவையே மெய்ம்மையாகும்.
அதே போன்று பஹாவுல்லாவின் போதனைகள் நன்னடத்தையை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன, மற்றும் நன்னடத்தையே சர்வ-மகிமைமிக்கவரின் அதிபெரும் ஒளிர்வுகளாகும்.
(ஓக்லேன்ட், கலிஃபோர்னியா ஹெலன் கூடோலின் இல்லத்தில் 3 அக்டோபர் 1912ல் அப்துல் பஹாவின் சொற்பொழிவிலிருந்து. Star of the West, vol. 4, no. 11, September 27, 1913)