பஹாவுல்லாவின் மூத்த குமாரரும் அவரால் நியமிக்கப்பட்ட அவரது வாரிசும் ஒரு பஹாய் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரண புருஷருமான அப்துல்-பஹா, மனித வரலாற்றில் ஒரு தனித்துவமான ஸ்தானத்தை வகிப்பதுடன், அவரது ஆழ்ந்த ஞானம், மனித நாகரிகத்திற்கான அவரது ஆழ்ந்த பங்களிப்புகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவராவார். அத்துடன், அப்துல்-பஹா தமது பெரும் நகைச்சுவை உணர்விற்காகவும் பெயர் பெற்றிருந்தார். சிரிப்பதற்கு மிகவும் விரும்புவார். சில வேளைகளில் கண்களில் நீர் வழிய, தமது தலைப்பாகை கீழே விழும் அளவிற்கு வாய்விட்டுச் சிரிப்பார்.
ஒரு முறை, “என் இல்லம், அமைதியின் இல்லம்” என அப்துல்-பஹா கூறினார். என் இல்லம், ஆனந்தம், களிப்பு ஆகியவற்றின் இல்லம்… இது அறிவுக்கான இல்லம்; அதில் பிரவேசிப்பவர் அறிவு பெற வேண்டும். இது அன்பின் இல்லம்: அதற்குள் வருபவர்கள் அன்பெனும் பாடத்தைப் பயில வேண்டும்; அதம் மூலம் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்தக் கூடும்.”54
– Star of the West, Volume 5, p. 40.
நியூ ஹேம்ப்ஷாயரில் அப்துல்-பஹா (1912) (National Baha’i Archives, US)
ஒரு முறை பஹாய் ஒருவர் அப்துல்-பஹாவைச் சந்தித்து பின்வரும் கேள்வியைக் கேட்டார் “…எல்லாருமே சுவர்க்கம் செல்வோம் என பஹாவுல்லா கூறியுள்ளார் என்பது உண்மையா?” (பஹாய் போதனைகள் நரகம் என ஒன்று இல்லையென கூறுகின்றன—அடுத்த உலகில் எல்லா மக்களுக்குமான ஒரு தொடர்ச்சியான வாழ்க்கை மட்டுமே உள்ளது.) அதற்கு அப்துல்-பஹா இறைவன் அருளால், ஆமாம், எல்லாருமே சுவர்க்கம் செல்வர் என்றார். அம்மனிதர் மேலும் தொடர்ந்து, “பல மில்லியன் மக்களைக் கொன்று குவித்த மொங்கோலிய மன்னனான கெங்கிஸ் காஃன் கூட சுவர்க்கம் செல்வாரா? என்றார். அதற்கு அப்துல்-பஹா ஆமாம் அவரும் சுவர்க்கம் செல்வார், என்றார். பின்னர் அம்மனிதர், “பெருமளவு சேதங்களையும் மரணத்தையும் விளைவித்த நெப்போலியன் கூடவா சுவர்க்கம் செல்வார்? என்றார். மற்றும், பாப் பெருமானாரை கொலை செய்த நாஸிரிடின் ஷா கூடவா? எனக் கேட்டார். “அப்படியானால், யார்தான் நரகம் செல்வர்?” அதற்கு அப்துல்-பஹா, “அளவுக்கதிமான கேள்வி கேட்போர்” என சிரித்தவாறு பதிலளித்தார்.
வட கலிபோர்னியாவில் உள்ள போஷ் பஹாய் பள்ளியின் நிறுவனரான திரு ஜான் போஷ், அப்துல்-பஹாவைக் காண்பதற்காக நியூ யார்க் வந்திருந்தார். அவர் அப்துல்-பஹாவிடம் தாம் அவரைக் காண்பதற்காக கலிபோர்னியாவிலிருந்து நியூ யார்க் வரை 3,000 மைல்கள் பிரயாணம் செய்து வந்துள்ளதாகக் கூறினார். அதற்கு அப்துல்-பஹா, நான் உம்மைச் சந்திப்பதற்காக 8,000 மைல்கள் கடந்து வந்துள்ளேன் என்றார்!
ஒரு முறை, பிரிட்டிஷ் எழுத்தாளரும் மனிதாபிமானரும் ‘சிறார்களைப் பாதுகாப்போம்’ எனும் நிவாரண முகவாண்மையின் உடன்-நிறுவனருமான லேடி புலொம்ஃபீல்ட், அப்துல்-பஹாவைப் பார்த்து, அவருக்குப் பசியில்லை என்றாலும், அவர் கண்டிப்பாக உணவருந்த வேண்டும் என்றாராம். அதற்கு அப்துல்-பஹா சிரித்தவாறு, என்னதால் செய்தபோதிலும், பாரசீக மற்றும் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் கூட அவரை அசைக்க முடியவில்லை ஆனால் லேடி புலொம்ஃபீல்ட் அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்துவிட்டார் என அங்கிருந்த மக்களிடம் சிரித்தவாறு கூறினார்.
– H. M. Balyuzi, Abdu’l-Baha, p. 35.
அப்துல்-பஹாவின் நிருபங்களும் கடிதங்களும் பிஞ்சுப் பருவத்திலிருந்த பஹாய் சமூகத்தை ஒன்றுபடுத்தி வந்தன. அவற்றுள் சில நிருபங்கள் சற்று நகைச்சுவை கலந்தவை. ஒரு முறை, பாரசீகத்தின் இஸ்ஃபாஹான் நகர பஹாய் நிலையத்திற்குப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்துல்-பஹாவிடம் ஒருவர் கூறினார். அப்துல்-பஹா அந்தப் பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் அவர் பஹாய் நிலைய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை தாம் அறிய வந்துள்ளதாகவும் அவரது பணியில் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் எனவும் உறுதி கூறினார். அதே கடிதத்தில், அப்துல்-பஹா பஹாய்களின் சேவகர் என்பதை அப்பொறுப்பாளர் நினைவில் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதுடன், அப்பொறுப்பாளர் அப்துல்-பஹாவின் அந்தப் பணியை அபகரித்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் அவ்வாறு செய்தால் அப்துல்-பஹா அவரை நீதிமன்றத்தில் நிறுத்திவிடுவேன் என (நகைச்சுவையுடன்) எச்சரித்தார்.
மற்றொரு முறை, யாஸ்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அப்துல்-பஹாவுக்கு விஜயம் செய்து, தாம் சமயத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வதாகவும் ஆனால் ஓர் உயிர்த்தியாகியாகிட மட்டும் விரும்பவில்லை எனக் கூறினாராம். ஆரம்பகாலங்களில் பாரசீக நாட்டில் ஒரு பஹாயாக இருப்பது பெரும்பாலும் மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாக இருந்தது. பல பஹாய்கள் சித்திரவதைக்கு உட்பட்டு தங்கள் உயிரை இழந்திருந்தனர். தாம் ஒரு பஹாய் எனும் முறையில் உயிரிழக்கமாட்டார் என அப்துல்-பஹா தமக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக அம்மனிதர் உணர்ந்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அம்மனிதர் சந்தையில் இருந்தபோது, யாரோ ஒருவர் அவரை ஒரு பஹாய் என அடையாளங்கண்டும் அதனால் ஒரு கூட்டம் அவரை விரட்டவும் ஆரம்பித்தது. ஓடிய போது, அவர் நகரின் எல்லையை விட்டு மலைகளை நோக்கி ஓடினார். அப்போது அவர் அப்துல்-பஹாவை நினைத்துக்கொண்டு, “என்னை ஓர் உயிர்த்தியாகிட விடமாட்டீர் என வாக்குறுதியளித்தீரே, என்னவாயிற்று!” என்றார். அக்கணம் அவர் தடுமாறி ஒரு குழிக்குள் விழுந்துவிட்டார். கூட்டம் அவரைக் கடந்து சென்றுவிட்டது. உடனே அம்மனிதர் மேல்நோக்கிப் பார்த்து, “நல்ல வேளை நான் உங்களை ஞாபகப்படுத்தினேன்” என்றார்.
பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபென்டி, பஹாய்கள் சிடுசிடுப்பையும் சதா கவலை தோய்ந்த முகத்தையும் காட்டிக்கொண்டிருக்கலாகாது எனக் கூறி, மகிழ்ச்சியும் ஹாஸ்யமும் பஹாய் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்றார். அப்துல்-பஹா தாமே அந்த அறிவுரைக்கு உதாரணமாக இருந்தார்.